Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

வருணுக்கு எதிரான பேச்சு : லாலு விளக்கம்

Published on: செவ்வாய், 7 ஏப்ரல், 2009 // , , , , , , ,
வருணுக்கு எதிராக லாலு பேசியதாக வெளியான தகவலை அடுத்து தேர்தல் ஆணையம் அவரிடம் விளக்கம் கேட்டு அறிவிக்கை அனுப்பியுள்ளது. இந்நிலையில் தன்னுடைய பேச்சுக்கு லாலு விளக்கம் அளித்துள்ளார்.

தான் உள்துறை அமைச்சராக இருந்திருந்தால் அவர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுத்திருப்பேன் என்பதைக் கூறவே அந்த வார்த்தையைப் பயன்படுத்தியதாக லாலு விளக்கம் அளித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலம் கர்வா எனும் இடத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் குரன் ராம் என்பவரை ஆதரித்துப் பேசிய போது இந்த விளக்கத்தை அவர் அளித்துள்ளார்.

அத்வானி ஒருபோதும் பிரதமராக முடியாது என்றும் இந்துத்துவா சக்திகள் பதவிக்கு வருவதைத் தடுக்கவே முலாயம் மற்றும் ராம் விலாஸ் பஸ்வான் ஆகியோருடன் தாம் கூட்டணி அமைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

முன்னதாக நேற்று பிகார் மாநிலம் கிஷண்கஞ்ச் மக்களவைத் தொகுதியில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் பொதுக் கூட்டத்தில் பேசிய அவர்,
பிலிபிட் மக்களவைத் தொகுதி பொதுக் கூட்டத்தில் முஸ்லிம்கள் கையை வெட்டுவேன், தலையை வெட்டுவேன் என்று பேசியிருக்கிறார் பாஜகவின் சின்னப் பையன் வருண் காந்தி.

பாஜக மூத்த தலைவர்கள் தரும் ஊக்கம் தான் இதற்குக் காரணம். நான் மட்டும் நான் உள்துறை அமைச்சராக இருந்திருந்தால் வருவது வரட்டும் என்று வருண் காந்தியை அப்படியே ரோடு ரோலரை ஏற்றிக் கொன்றிருப்பேன் என்று பேசியதாக தகவல் வெளியாகி இருந்தது.

சிதம்பரம் மீது காலணி வீசிய பத்திரிகையாளர் விடுவிப்பு

மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் மீது காலணி வீசிய பத்திரிகையளாரை காவல்துறையினர் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். விசாரணைக்குப் பிறகு அவரை விடுவித்துள்ளனர். விசாரணை விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை.

முன்னதாக டில்லியில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த பயங்கரவாதம் குறித்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், சீக்கிய கலவரம் குறித்த தைனிக் ஜார்கன் பத்திரிக்கையைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜர்னைல் சிங்கின் கேள்விக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார்.


இதனால் கோபமடைந்த நிருபர் ஜர்னைல் சிங் தனது காலணியைக் கழட்டி ப.சிதம்பரத்தை நோக்கி எறிந்தார். ஆனால் காலணி சிதம்பரம் மீது படவில்லை.

விமானத்தை திருடிய விமானி கைது!

கனடாவில் தன்டர் பே எனும் இடத்தில் உள்ள விமான பயிற்சிப் பள்ளியின் செஸ்னா 172 வகை விமானம் ஒன்று திங்கள் கிழமை நன்பகலுக்குப் பின் திருடப்பட்டுவிட்டது என்ற தகவல்கள் வந்ததும் அமெரிக்கா மற்றும் கனடாவில் பரபரப்பு நிலவியது. இந்த விமானம் அமெரிக்க வான் எல்லைக்குள் சென்றதை ராடார் கருவிகள் மூலம் அறிந்ததாக தன்டர் பே விமான நிலைய அதிகாரிகள் கூறியதை அடுத்து, அமெரிக்காவின் விமானப்படை, அமெரிக்க விமான ஆணையம் போன்றவை இந்த விமானத்தைத் தேடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்.

அமெரிக்காவின் மத்திய விஸ்கோன்சின் மாநிலத்தில் இந்த விமானம் இருப்பதை அறிந்து விமானப்படையினர் எப் 16 விமானம் மூலம் கடத்தப்பட்ட விமானத்தை வழிமறித்து தரையிறங்கச் செய்தனர். மிசெளரி அருகே 60ஆம் சாலையில் அந்த விமானத்தை தரையிறக்கிவிட்டு, கடத்தலில் ஈடுபட்டவர் தப்பியோட முயன்றபோது கைது செய்யப் பட்டார்.

இந்த விமானக் கடத்தல் தீவிரவாதிகளின் செயல் இல்லை என அறிவிக்கப் பட்டுள்ளது. யவுஜ் பெர்கே என்ற பெயருடைய 31 வயதுடையவர் இச்செயலில் ஈடுபட்டதாகவும், தான் தற்கொலை செய்வதற்காக விமானத்தை இவர் கடத்தியிருக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது. அமெரிக்காவின் உளவு நிறுவனமான எப்.பி.ஐ. இந்நிகழ்வு குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் ஆனால் ஆய்வு குறித்து தாங்கள் எதுவும் சொல்ல முடியாதெனவும் கூறியுள்ளது.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!