விமானத்தை திருடிய விமானி கைது!
கனடாவில் தன்டர் பே எனும் இடத்தில் உள்ள விமான பயிற்சிப் பள்ளியின் செஸ்னா 172 வகை விமானம் ஒன்று திங்கள் கிழமை நன்பகலுக்குப் பின் திருடப்பட்டுவிட்டது என்ற தகவல்கள் வந்ததும் அமெரிக்கா மற்றும் கனடாவில் பரபரப்பு நிலவியது. இந்த விமானம் அமெரிக்க வான் எல்லைக்குள் சென்றதை ராடார் கருவிகள் மூலம் அறிந்ததாக தன்டர் பே விமான நிலைய அதிகாரிகள் கூறியதை அடுத்து, அமெரிக்காவின் விமானப்படை, அமெரிக்க விமான ஆணையம் போன்றவை இந்த விமானத்தைத் தேடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்.
அமெரிக்காவின் மத்திய விஸ்கோன்சின் மாநிலத்தில் இந்த விமானம் இருப்பதை அறிந்து விமானப்படையினர் எப் 16 விமானம் மூலம் கடத்தப்பட்ட விமானத்தை வழிமறித்து தரையிறங்கச் செய்தனர். மிசெளரி அருகே 60ஆம் சாலையில் அந்த விமானத்தை தரையிறக்கிவிட்டு, கடத்தலில் ஈடுபட்டவர் தப்பியோட முயன்றபோது கைது செய்யப் பட்டார்.
இந்த விமானக் கடத்தல் தீவிரவாதிகளின் செயல் இல்லை என அறிவிக்கப் பட்டுள்ளது. யவுஜ் பெர்கே என்ற பெயருடைய 31 வயதுடையவர் இச்செயலில் ஈடுபட்டதாகவும், தான் தற்கொலை செய்வதற்காக விமானத்தை இவர் கடத்தியிருக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது. அமெரிக்காவின் உளவு நிறுவனமான எப்.பி.ஐ. இந்நிகழ்வு குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் ஆனால் ஆய்வு குறித்து தாங்கள் எதுவும் சொல்ல முடியாதெனவும் கூறியுள்ளது.
0 comments