Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

அமெரிக்கர்கள் விரோதிகள் அல்லர் - ஒபாமா

Published on: செவ்வாய், 27 ஜனவரி, 2009 // , , , ,
அமெரிக்காவின் முதல் குடிமகனாக தேர்வு பெற்ற பராக் ஒபாமா தன்னுடைய முதல் தொலைக்காட்சி நேர்காணலை இன்று துபாயிலிருந்து செயற்படும் அல் அரேபியா தொலைக்காட்சிக்கு வழங்கியுள்ளார்.

அதில் மிகவும் ஆறுதலளிக்கும் குரலில் " அமெரிக்கர்கள் உங்களுக்கு (முஸ்லிம்களுக்கு) விரோதிகள் அல்லர்" என்று அவர் கூறியுள்ளார். "முஸ்லிம்களிடத்தில் இச்செய்தியை வழங்குவது தமது கடமை" என்றும் குறிப்பிட்டுள்ள அவர் "பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்குமிடையேயான பேச்சுவார்த்தைக்கு காலம் கனிந்திருக்கிறது" என்றும் குறிப்பிட்டார்.

"நாம் சிலநேரம் தவறு இழைத்து விடுகிறோம்" என்ற ஒபாமா 'அமெரிக்கர்களுக்கும் முஸ்லிம் உலகத்திற்கும் இடையே கடந்த இருபது முப்பது வருடங்களுக்கு முன்பிருந்த நல்லுறவு மீட்டெடுக்கப்படும்' என்று நம்பிக்கை தெரிவித்தார்.

கடந்த காலத்தின் அதிகாரத் தோரணை மாறி புரிந்துணர்வுத் தோழமையை மேற்கொள்ளும் தொனியை ஒபாமாவின் இந்த பேட்டி அளித்ததாக அல் அரேபியா ஆங்கில தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

ஒபாமாவின் சிறப்புத்தூதராக ஜார்ஜ் ஜே.மிட்சல் எகிப்து, ஜோர்டான், சவூதி அரேபியா, ஃபிரான்ஸ், பிரிட்டன், இஸ்ரேல் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீராம் சேனா தொண்டர்கள் மீது குண்டர் சட்டம்

கர்நாடக மாநிலம் மங்களூரில் கடந்த சனிக்கிழமை இரவு கேளிக்கை விடுதியில் நடனமாடிக் கொண்டிருந்த பெண்கள் மீது ஸ்ரீராம் சேனை என்ற அமைப்பினர் ஓட ஓட விரட்டித் தாக்கிய சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அமைப்பின் துணைத் தலைவர் பிரசாத் அட்டவார் உள்பட 27 பேரை காவல் துறை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மீது குண்டர் சட்டத்தின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

குண்டர் சட்டத்தின்படி கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் வர முடியாது. மேலும் அவர்கள் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படாமலேயே காவல் துறையின் காவலில் 6 மாதத்திற்கு வைத்திருக்க முடியும்.

பிணையில் வர முடியாத எட்டு வழக்குகள் கைது செய்யப்பட்டவர்கள் மீது பதிவு செய்துள்ளதாகவும் கர்நாடக மேற்கு சரக டி.ஐ.ஜி கூறினார். இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க இவர்கள் மீது குண்டர் சட்டதத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

யூனுஸ்கான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன்!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக யூனுஸ்கான் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த இலங்கை சுற்றுப்பயணத்தில் பாகிஸ்தான் அணிபெற்ற மோசமான தோல்வியைத் தொடர்ந்து எழுந்த கடுமையான விமர்சனத்தின் காரணமாக, தற்போதைய கேப்டன் சுஹைப் மாலிக்கை மாற்றியதாக தெரிகிறது.

இந்தியர்களுக்கு அடையாள அட்டை - அரசு முயற்சியைத் தொடங்கியது

இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கும் பெரும் பணியை மேற்கொள்வதற்காக தனி ஆணையத்தை இந்திய அரசு ஏற்படுத்தி இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சுமார் 120 கோடி இந்தியர்களுக்கும் அடையாள அட்டை வழங்கும் பணியை இந்த ஆணையம் கண்கானிக்கும்.

ஒருங்கிணைந்த அடையாள அட்டைக்கான தேசிய ஆணையம் (National Authority for Unique Indentify - UID) திட்டக் குழுவுடன் இணைந்து அடையாள எண்களைத் தரும். உள்துறை அமைச்சகத்தின் தேசிய மக்கள் தொகை பதிவளார் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு தலைமைப் பதிவர் மற்றும் மாநில அதிகாதிகாரிகள் ஆகியோருடன் இணைந்து இப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

தொடக்கத்தில் வாக்காளர் அடையாள அட்டையை அடிப்படையாகக் கொண்டு ஒருங்கிணைந்த அடையாள எண்கள் வழங்கப்படும். படிப்படியாக வாக்காளர் பட்டியலில் இல்லாதவர்களுக்கும் வழங்கப்படும்.

தவறுகளைக் களைவதற்காக அடையாள அட்டையில் புகைப்படமும், இரத்தப் பிரிவு போன்ற தகவல்களும் இடம்பெறும். புதிதாக பதிவு செய்வதற்கோ அல்லது தகவல்களில் மாற்றம் செய்வதற்காக எளிய வழிமுறைகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கட்ராமன் மரணம்

முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன் இன்று மதியம் டெல்லியில் மரணமடைந்தார்.

இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராக 1987 ஜூலை 25 முதல் 1992 ஜூலை 25 வரை பதவி வகித்தவர் ஆர்.வெங்கட்ராமன்.

98 வயதான இவர் கடந்த 12ம் தேதி டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் உடல் நலக்குறைவின் காரணமாக அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இன்று மதியம் அவர் சிகிச்சை பலனின்றி காலமானாதாக ராணுவ மருத்துவமனையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கட்ராமனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு வார கால அரசு முறைத் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதையடுத்து ஒரு வார காலத்திற்கு அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும்.

வெங்கட்ராமன் மறைவுக்கு முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள செய்தியில், ஆர்.வெங்கட்ராமன் நாட்டு அரசியலிலும் - இந்திய தேசிய அரசியலிலும் தனி வரலாறு படைத்தவர். அவரது மறைவு ஜனநாயகத்திற்கு பெரும் இழப்பாகும். அவரது பிரிவால் வருந்தும் அவரது குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!