Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

இஸ்ரேலிய துறைமுகம் மீது ராக்கெட் தாக்குதல்

Published on: சனி, 3 ஜனவரி, 2009 //
இஸ்ரேலின் இரண்டாவது பெரிய துறைமுகமான அஷ்துத் என்னும் துறைமுகத்தின் மீது ஹமாஸ் ராக்கெட்களை வீசி தாக்குதல் நடத்தியது. காஸாவின் எல்லையிலிருந்து 30 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த துறைமுகம் உள்ளது. குறைந்தது 10 ராக்கெட்கள் வீசப்பட்டதாகவும் அதில ஒன்று துறைமுகத்தில் உள்ள 4 மாடி கட்டிடத்தின் மீது விழுந்ததாகவும் இருவர் சிறு காயமுற்றதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

கடந்த 8 நாட்களில் காஸா பகுதியிலிருந்து 500 ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. எட்டாவது நாளான இன்று இஸ்ரேல் பள்ளிக்கூடம் உள்பட பல்வேறு இடங்களைக் குறிவைத்து தாக்கியது என்றும் குறைந்த 4பேர் உயிரிழந்தனர் என்றும் தகவல்கள் கூறுகின்றன. இதனையும் சேர்த்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 439. காயமுற்றோர் 2,280 பேர்.

டெல்லியில் கடும் பனி மூட்டம்

Published on: //
டெல்லியில் கடுமையான பனி மூட்டம் நிலவுகிறது. இதனால் இரயில் போக்குவரத்தும் மற்றும் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. இன்று அதிகாலையில் டெல்லி விமான நிலையத்திலிருந்து சென்னை, மும்பை, ஹைதரபாத், ஜெய்பூர், திருவனந்தபுரம் போன்ற நகரங்களுக்குச் செல்லவிருந்த 19 உள்நாட்டு விமான சேவை ரத்து செய்யப்பட்டது. மேலும் 31 உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமான சேவை தாமதமாகி உள்ளது. ஓடுபாதை தெளிவாகத் தெரியாத காரணத்தால் டெல்லியில் தரை இறங்க வேண்டிய 3 விமானங்கள் மும்பைக்கு திருப்பிவிடப்பட்டதாக டெல்லி விமான நிலைய தகவல்கள் கூறுகின்றன.

காலை 10 மணிக்கு மேல் நிலைமை ஓரளவு சரியானதாகக் கூறப்படுகிறது. இதனால் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.

முஸ்லிம் குடும்பம் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டது

Published on: //
ஜனவரி முதல் தேதியன்று வாஷிங்டனிலிருந்து புளோரிடா செல்லவிருந்து விமானத்திலிருந்து 9 பேர் கொண்ட முஸ்லிம் குடும்பம் சந்தேகத்தின் பேரில் இறக்கிவிடப்பட்டது. இந்தக் குழுவைச் சார்ந்த காஷிப்  இர்பான் என்பவர் கூறுகையில், தன்னுடைய சகோதரரும் அவரது மனைவியும் தங்களுக்குப் பாதுகாப்பான இருக்கை கிடைத்ததாகப் பேசிக் கொண்டிருந்தனர். "என் ஜன்னலுக்கு அருகில்தான் ஜெட் இருக்கிறது" என்று அவர்களில் ஒருவர் கூறியதைக் கேட்ட சக பயணிகள் விமானப் பணிப்பெண்ணிடம் கூற, விமானத்திலிருந்த 104 பயணிகளும் இறக்கப்பட்டனர்.

FBIயின் விசாரணைக்குப் பின் அவர்கள் குற்றமற்றவர்கள் என்று கூறிய போதிலும், ஏர் ட்ரான் எனும் விமான நிறுவனம் 9 பேர் கொண்ட முஸ்லிம் குடும்பத்தை மட்டும் ஏற்றிச் செல்ல மறுத்துவிட்டது. இந்தச் செயலை விமான நிறுவனத்தின் செய்தியாளர் நியாயப் படுத்தினார். அவர்கள் விமானத்தினுள் இருந்து இவ்வாறு பேசிக் கொண்டிருந்திருக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.

மருத்துவரான இர்பான் கூறுகையில், தங்கள் தோற்றம் காரணமாகவே இவ்வாறு நடத்தப்பட்டோம் என்றார். அவரது சகோதரரோ, அவர்கள் மிகவும் பயந்தவர்களாக இருக்கிறார்கள். இது மிகவும் கவலையான ஒன்று என்று கூறினார்.

தெற்காசிய இனத்தவரான அமெரிக்க குடியுரிமை பெற்ற அந்த முஸ்லிம் குடும்பம் வேறு விமானத்தில் சென்றது.

இஸ்ரேல் மீது ராக்கெட் வீச்சு

Published on: //
பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீதான இஸ்ரேலின் தொடர்தாக்குதலின் எட்டாவது நாளான இன்று இஸ்ரேலிய போர் விமானங்கள் 25 இடங்களைக் குறிவைத்து தாக்கின. இதில் ஹமாஸ் இயக்கத்தின் கமாண்டர் கொல்லப்பட்டார். மேலும் காஸா நகரத்தையும் மற்ற பகுதிகளையம் இணைக்கும் பாலம் சேதமடைந்தது.

இந்நிலையில் இஸ்ரேலை நோக்கி காஸா பகுதியிலிருந்து ஹமாஸின் இராணுவப் பிரிவான கஸ்ஸாம் படையினர் இஸ்ரேலை நோக்கி ராக்கெட் தாக்குதலை இன்றும் தொடர்ந்துள்ளனர். 8 ராக்கெட்டுகள் வீசப்பட்டதாகவும் அவை இஸ்ரேலின் நெகேவ் பகுதியில் உள்ள அஷ்கலன் எனும் நகரின் கட்டிடம் ஒன்றில் விழுந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன. சேதவிவரம் குறித்த தகவல் இதுவரை இல்லை.

காஸா மீது தரைவழி தாக்குதல் தொடுக்க அனுமதி

Published on: //
பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேலின் தாக்குதல் இன்று எட்டாவது நாளை எட்டியுள்ளது. இதுவரை 436க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். 2250க்கும் அதிகமானோர் காயமுற்றனர். இந்நிலையில் கடந்த 4 நாட்களாக காஸாவின் எல்லையின் இஸ்ரேல் தரைப்படையினரை அனுப்பி வந்தது. எந்நேரமும் காஸாவினுள் புகுந்து தரைவழி தாக்குதல் நடத்தி காஸா பகுதியை மீண்டும் ஆக்ரமிக்கப்படும் என்று தெரிகிறது.

காஸா பகுதியில் இருந்த அமெரிக்கா, ரஷ்யா, துருக்கி மற்றும் நார்வே ஆகிய நாடுகளைச் சார்ந்த சுமார் 400 பேர் காஸாவை விட்டு வெளியேற இஸ்ரேல் அனுமதித்தது. இஸ்ரேலிய பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆகியோர் தரைவழி தாக்குதல் குறித்து நேற்று விவாதித்ததாகவும் தரைவழி தாக்குதலுக்கு அப்போது அனுமதி வழங்கப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் மற்றும் உளவுத் துறை அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில் காஸாவின் மீது தரைவழி தாக்குதல் நடத்தக் கூடாது என்று எகிப்து வெளியுறவுத் துறை அமைச்சர் இஸ்ரேலிய அமைச்சருக்கு கடிதம் எழுதியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இஸ்ரேலுக்கு ஜெயலலிதா கண்டனம்

Published on: //
பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலை இந்தியா கண்டிக்க வேண்டும் என்று ஜெயலலிதா கூறியிருக்கிறார்.  இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுசெயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பாலஸ்தீனத்தில் காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தும் கண்மூடித்தனமான ராணுவத் தாக்குதலால் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமானோர் வீடுகளையும், உடமைகளையும் இழந்து நிர்க்கதியாக இருக்கிறார்கள்.  இஸ்ரேல் - பாலஸ்தீனம் போராட்டத்தில் மேலும் ஒரு மோசமான செயல் நடந்துள்ளது. என்னதான் ஆத்திரமூட்டும் செயல் நடந்தாலும் இந்த மாதிரியான அறிவீனமான ஆயுத தாக்குதலை நடத்தி இருக்கக் கூடாது. இது இஸ்ரேல் நாட்டின் மீது சர்வதேச நாடுகளிடம் மோசமான எண்ணத்தை உருவாக்கி இருக்கிறது.  எந்த ஒரு நாட்டையும் மற்றவர் ரத்தத்தின் மீது நிர்மானிக்க முடியாது. இஸ்ரேலின் இந்த ஈவு, இரக்கமற்ற தாக்குதலை யாராலும் நியாயப்படுத்த முடியாது. எந்த மதமும் இந்த செயலை ஆதரிக்காது.  இஸ்ரேலின் இந்த மோசமான தாக்குதலையும், அப்பாவி மக்களை கொல்வதையும் இந்திய அரசு கண்டிக்க வேண்டும். அத்துடன் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனிய மக்களுக்கு இந்தியா உதவ வேண்டும். உணவு, உடைகள், மருந்து போன்ற நிவாரண பொருட்களை உடனே அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு ஜெயலலிதா கூறியிருக்கிறார்.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!