சட்டீஸ்கர் மாநிலத்தில் பெருமளவிலான வெடிகுண்டுகள் பறிமுதல்
சட்டீஸ்கர் மாநிலத்தில் ஜார்கண்ட் மாநிலத்தை ஒட்டிய எல்லைப் பகுதியில் பெருமளவிலான வெடிகுண்டுகள் நிரம்பிய வாகனத்தைக் காவல் துறையினர் செவ்வாய் கிழமையன்று பறிமுதல் செய்தனர். நாடாளுமன்றத் தேர்தலை சீர் குலைக்கும் வகையில் இந்த குண்டுகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்த மாவோயிஸ்டுகள் திட்டமிட்டிருக்கக் கூடும் என்று காவல்துறை அதிகாரிகள் அனுமானித்துக் கூறினர்.
ஜஷ்பூர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் நிறைந்த லோடம் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் இந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வாகனத்தில் அமோனியம் நிட்ரேட், ஜெலட்டின் குச்சிகள், கன்னி வெடி தயாரிக்கப் பயன்படும் மூலப் பொருட்கள் என சுமார் 5000 கிலோ எடையுள்ள வெடிபொருட்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
12போர் வகை துப்பாக்கிகளில் பயன்படுத்தப் படும் துப்பாக்கிக் குண்டுகள் சுமார் 17, 750 மற்றும் 9 மிமி துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படும் குண்டுகள் சுமார் 1,550 போன்றவையும் இந்த வாகனத்தில் இருந்து கைப்பற்றப் பட்டதாகக் கூறப்படுகிறது. காவலர்களைக் கண்டதும், இந்த வாகனத்தை ஓட்டி வந்தவர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பித்துவிட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
பீகாரிலிருந்து இந்த வாகனம் வந்ததாகவும், அரிசி மற்றும் உணவுப் பொருட்களுக்கு அடியில் இந்த ஆயுதங்களைப் பதுக்கி எடுத்து வந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments