வாக்காளர்களுக்கு காங்கிரஸ் எம்.பி. பணம்: விசாரணைக்கு
உத்திரப் பிரதேசத்தில் உள்ள வாரணாசி காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேஷ் மிஸ்ரா வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது போன்ற காட்சி தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பானதை அடுத்து, மாவட்ட நீதிமன்ற விசாரணைக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வாரணாசியின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் மக்களுக்கு பணம் கொடுப்பது தனக்குத் தெரிய வந்தவுடன், வாரணாசி மாவட்ட நீதிபதி இதுகுறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு தான் கேட்டுள்ளதாக உத்திரப் பிரதேச தலைமைத் தேர்தல் அதிகாரி பிஷ்னோய் செய்தியாளர்களிடம் கூறினார். மாவட்ட நீதிபதி அளிக்கும் அறிக்கையை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
வியாழக் கிழமை ஒளிபரப்பப்பட்ட மற்றொரு தொலைக்காட்சி காட்சியில், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் தலைமையேற்ற நிகழ்ச்சி ஒன்றில் அக்கட்சித் தொண்டர் வாக்களர்களுக்குப் பணம் கொடுப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. சனிக் கிழமைக்குள் இதற்கு விளக்கம் அளிக்கக் கோரி அக்கட்சிக்கு அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளது.