காங்கிரஸ் திரினாமுல் காங்கிரஸ் கூட்டணி?
வரும் மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் திரினாமுல் காங்கிரஸ் கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் பிரனாப் முகர்ஜி திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவி மம்தா பானர்ஜியை ஞாயிற்றுக் கிழமை இரவு கொல்கத்தாவில் சந்தித்துப் பேசினார். தெற்கு கொல்கத்தாவில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கேசவ் ராவும் உடன் இருந்தார்.
கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பே மம்தா பானர்ஜி போட்டியிட உத்தேசித்துள்ள தெற்கு கொல்கத்தா மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 26ஆம் தேதி நடைபெற்ற பிஷ்னுபூர் இடைத்தேர்தலில் திரினாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை ஆதரித்து காங்கிரஸ் போட்டியிலிருந்து விலகியது. இதனையடுத்து அத்தொகுதியில் திரினாமுல் வேட்பாளர் மதன் மித்ரா மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வேட்பாளர் இஸ்கந்தர் ஹொசைனைவிட 30, 395 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றது குறிப்பிடத் தக்கது.
1977ஆம் ஆண்டு முதல் கம்யூனிஸ்டு கட்சிகளின் ஆளுகையில் மேற்கு வங்கம் இருந்து வருகிறது.
0 comments