மரண தண்டனைக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம்!
மரண தண்டனையை நீக்க வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் பலரும் கோரி வரும் வேளையில், மரண தண்டனைக்கு ஆதரவாக உச்சநீதி மன்ற அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.
தனிப்பட்ட பழிவாங்கலுக்காகச் செய்யப்படும் கொலைகளுக்கு வேண்டுமானால் மரண தண்டனை அளிக்காமல் இருக்கலாம். ஆனால் ஒருங்கிணைந்து திட்டமிட்டு செயல்படுத்தப்படும் கொலை மற்றும் அப்பாவி மக்களை கொலை செய்தல் போன்றவற்றிற்கு மரண தண்டனை விதிப்பதுதான் சரியானதாக இருக்கும் என்று நீதிபதிகள் அரிஜித் பசாயத் மற்றும் முகுந்தம் சர்மா ஆகியோரைக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு நீதி மன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
1984ஆம் ஆண்டு ஒரே குடும்பத்தைச் சார்ந்த 6 பேரைக் கொலை செய்த இருவருக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் மரண தண்டனையிலிருந்து வாழ்நாள் சிறைத் தண்டனை அளித்திருந்தது. அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இந்த கருத்து கூறப்பட்டுள்ளது.
மக்களுக்கு சட்டத்தின் மீது இருக்கும் நம்பிக்கை கருணை செலுத்தத் தகுதியற்றவர்கள் மீது கருணை செலுத்தப்படும்போது பாதிக்கப்படும் என்றும் எனவே குற்றங்களின் தன்மையைப் பொறுத்து அதற்கான தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.
அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் அண்மைய அறிக்கைபடி இந்தியச் சிறைகளில் 400 மரண தண்டனைக் குற்றவாளிகள் இருக்கின்றனர் எனவும் இவர்களில் 120 பேர் மீது கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் மரண தண்டனை விதிக்கப் பட்டவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
0 comments