காதலர் தினத்திற்கு எதிரானவர்கள் அல்ல - பஜ்ரங்தள்!
இளம் தலைமுறையினர் நாகரீகமான நடவடிக்கைகளைப் பேணும் வரை காதலர் தினத்திற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல என பஜ்ரங்தள் அறிவித்துள்ளது. கிருஷணன் மற்றும் ராதாவின் தெய்வீகக் காதலை நாங்கள் என்றும் ஆராதித்தே வந்துள்ளோம் என பஜ்ரங்தள் தேசிய கன்வீனர் பிரகாஷ் சர்மா தெரிவித்தார்.
ஆனால், தலைமையின் நிலைபாடுகளுக்கு எதிராக இன்றைய காதலர் தின கொண்டாட்டங்களுக்கு எதிராகப் பல இடங்களிலும் பஜ்ரங்தள் தொண்டர்கள் எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தினர். வாழ்த்து அட்டை விற்பனை அங்காடிகள் மற்றும் காதலர்களுக்கு எதிராகப் பரவலாக தாக்குதல்களிலும் ஈடுபட்டனர்.
உண்மையான காதலின் பக்தர்கள் பஜ்ரங்தளத்தினர் தான் எனக் கூறிய சர்மா, இளம் தலைமுறையினர் ஒரு நாளுக்குப் பதிலாக ஆண்டில் எல்லா நாட்களையும் காதலர் தினமாகக் கொண்டாட வேண்டும் எனவும் அறிவுரை கூறினார். திடீரென இந்த மனம் மாற்றத்திற்கான காரணம் என்ன? என்று கேட்டபொழுது, "இளம் தலைமுறையினரின் ஆசைகளுக்கு நாங்கள் எதிரல்ல" எனவும் "நடவடிக்கைகளில் நாகரீகத்தைப் பேண வேண்டும் என்பது மட்டுமே பஜ்ரங்தளத்தின் கோரிக்கை" என்றும் அவர் பதிலளித்தார்."
மது விற்பனை கூடங்களிலும் மக்கள் கூடும் வியாபார அங்காடிகளிலும் காதலர் தினத்தில் பாதுகாப்பு அதிகரிக்க வேண்டும்" என பஜ்ரங்தள் டெல்லி மண்டல கன்வீனர் அசோக் குமார் காவல்துறை கமிஷனருக்குக் கோரிக்கை விடுத்ததார். ஸ்ரீராமசேனைக்கும் தங்களுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை எனவும் பஜ்ரங்தள் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.
0 comments