நடுக்கடலில் அணுஆயுத நீர்மூழ்கிகள் மோதல்
பிரிட்டன் மற்றும் பிரான்சைச் சேர்ந்த அணுஆயுத நீர்மூழ்கிக் கப்பல்கள் அட்லாண்டிக் பெருங்கடலின் அடியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது மோதிக் கொண்ட செய்தி வெளியாகியுள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த எச் எம் எஸ் வேன்கார்டு என்ற அணு ஆயுத நீர்மூழ்கியும், பிரான்சைச் சேர்ந்த லா டிரையம்ஃபண்ட் என்ற இன்னொரு அணு ஆயுத நீர்மூழ்கியும் அட்லாண்டிக் பெருங்கடலுக்கடியில் இம்மாதத் தொடக்கத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது மிகக் கடுமையான அளவில் கடலுக்கடியிலேயே மோதிக் கொண்டதாக இவ்விரு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சக செய்திக்குறிப்புகள் தெரிவித்துள்ளன.
கடலுக்கடியிலிருந்து வரும் தாக்குதல்களைச் சமாளிக்க இவை பயன்படுத்தப் படுவதாக அச்செய்திக் குறிப்புகளில் கூறப்பட்டுள்ளது. இவ்விரு நீர்மூழ்கிகளும் பெருமளவு அணு ஆயுதங்களுடன் நிரப்பட்டிருந்ததாகவும், பெரும் சேதங்கள் ஏதும் நிகழவில்லை என்றும் இச்செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
சோனார் போன்ற அதிநவீனப் புலனறியும் கருவிகள் பொருத்தப் பட்டிருந்த போதிலும் இவ்வகை மோதல் எவ்வாறு ஏற்பட்டது என்பதற்கு இரு அரசுகளும் எவ்விதக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
இந்த மோதலால் அட்லாண்டிக் கடலின் கடும் சுற்றுப்புறச் சீர்கேடு நடந்திருக்கும் என அஞ்சுவதாக அணு ஆயுதங்களுக்கு எதிரான தன்னார்வு நிறுவனம் CND (Campain for Nuclear Disarmament) கவலை தெரிவித்துள்ளது. சேதத்தின் உண்மையான விபரங்களை வெளியிடுமாறு பிரிட்டன், பிரான்சு அரசுகளை அவ்வமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
0 comments