ஜார்கண்டில் குடியரசுத்தலைவர் ஆட்சி
ஜார்கண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவரின் ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவைக் கூட்டம் குடியரசுத்தலைவருக்கு பரிந்துரைத்துள்ளது.
81 உறுப்பினர்களைக் கொண்ட ஜார்கண்ட் மாநிலத்தில் ஷிபு சோரன் முதல் அமைச்சராகப் பதவி வகிகத்து வந்தார். பதவியேற்றதிலிருந்து ஆறு மாதத்திற்குள் சட்டமன்றத்திற்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதற்காக கடந்த மாதம் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதனையடுத்து அவர் பதவியிலிருந்து விலகினார். தற்போது அவர் தற்காலிக முதல்வராகத் தொடர்கிறார்.
அவருக்குப் பதில் வேறொரு முதல்அமைச்சரைத் தேர்ந்தெடுப்பதில் கூட்டணி கட்சிகளிடையே இழுபறி நிலவி வந்தது. இதனையடுத்து மாநில ஆளுநர் சையத் சிப்தி ராஜி ஜார்கண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவரின் ஆட்சிக்குப் பரிந்துரைத்தார். மத்திய அமைச்சரவையும் இந்த பரிந்துரையை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளது.
மாநில சட்டமன்றம் கலைக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்படும் என்று தெரிகிறது.
0 comments