Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Wednesday, April 16, 2025

உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்

Published on திங்கள், 19 ஜனவரி, 2009 1/19/2009 11:07:00 AM // ,

இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தக் கோரி சென்னையை அடுத்த மறைமலை நகரில் விடுதலைச் சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.


நான்காவது நாளான நேற்று திருமாவளவனின் உடல் நிலை மோசமடையத் தொடங்கியது. நேற்று மாலை அவர் மயக்க நிலைக்கு போனார். இதையடுத்து அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸுக்குக் கொண்டு செல்லப்பட்டு பரிசோதிக்கப்பட்டார். பல்வேறு கட்சித் தலைவர்களும் திருமாவளவன் உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் என்று கோரினர்.

பின்னர் கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டம், உண்ணாவிரதம் நடந்த மேடைக்கு அருகில் கூடியது. அக்கூட்டத்தில் உண்ணாவிரதத்தை திருமாவளவன் கைவிட வேண்டும் என மமுடிவு எடுக்கப்பட்டது.

இந்த நிலையில், மாலை 5 மணியளவில் உண்ணாவிரத மேடைக்கு டாக்டர் ராமதாஸ் வந்தார். அவர் தொடர்ந்து போராட வேண்டியுள்ளது. எனவே உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளுமாறு திருமாவளவனிடம் கேட்டுக் கொண்டார்.

இலங்கைத் தமிழர்களுக்காக நாம் இருவரும் இணைந்து போராட வேண்டிய காலம் வந்துவிட்டது. இலங்கைத் தமிழர் சிக்கலைத் தீர்க்கக் கோரி தமிழகமே செயலிழக்கும் அளவிற்கு ஒரு போராட்டத்தை நாம் நடத்தலாம். அப்போராட்டத்தில் பால் போன்ற அவசர தேவைக்கான பொருட்கள் தவிர மற்றவற்றை ஏற்றிச் செல்லும் எந்த ஊர்தியும் ஓடாது.

எனவே உண்ணாநிலை போராட்டத்தை இத்துடன் முடித்துக் கொள்ள வேண்டும் என்று ராமதாஸ் கேட்டுக்கொண்டார்.

அதனைக் கேட்ட திருமாவளவன், இலங்கைத் தமிழர்களுக்காகத் தமிழகமே செயலிழக்கும் அளவிற்கு நடத்தப்படும் போராட்டத்திற்கு முதலமைச்சர் கலைஞர் மற்றும் தமிழ் இன உணர்வு கொண்ட அனைத்துக் கட்சிகளின் ஆதரவையும் திரட்டுவதாகவும், இலங்கைச் சிக்கல் தொடர்பாக விவாதிக்க அடுத்த இரண்டு நாட்களில் முதல்வர் கலைஞர் மூலம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட ஏற்பாடு செய்வதாகவும் ராமதாஸ் உறுதியளித்தால்தான் போராட்டத்தை கைவிடுவேன் என்று கூறினார்.

திருமாவளவனின் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக ராமதாஸ் உறுதியளித்தார். இதையடுத்து உண்ணாவிரதத்தை கைவிடுவதாக திருமாவளவன் அறிவித்தார்.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!