காஸா : தொடரும் தாக்குதல்
பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது 22 நாட்கள் தொடர் தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல் உலக நாடுகளின் எதிர்ப்புகளுக்குப் பணிந்து, ஞாயிற்றுக் கிழமை உள்ளூர் நேரம் காலை 2 மணி முதல் தாக்குதலை தன்னிச்சையாக நிறுத்திக் கொள்வது என்று அறிவித்தது. இஸ்ரேலிய இராணுவம் காஸா பகுதிக்குள் இருப்பதே காஸா மீதான தாக்குதலின் அடையாளம்தான். எனவே காஸாவிலிருந்து இஸ்ரேலிய இராணுவம் வெளியேறும் வரை இராணுவத்துடன் சன்டையிடுவோம் என்று ஹமாஸ் அறிவித்தது. காஸாவிலிருந்து இஸ்ரேலிய இராணுவம் வெளியேற வேண்டும் என்று பாலஸ்தீன அதிபர் மஹ்மூது அப்பாசும் கோரியுள்ளார்.
இந்நிலையில் இன்று காலை இஸ்ரேலிய இராணுவ ஹெலிகாப்டர் காஸா நகரின் மீது வெள்ளை பாஸ்பரஸ் கொண்ட குண்டுகளை வீசியதாக பிரஸ் தொலைக்காட்சி கூறி உள்ளது.
ஹமாஸ் மற்றும் பாலஸ்தீனக் குழுக்கள் இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்கதல்களைத் தொடர்ந்து கொண்டுள்ளன. இன்று மட்டும் பத்துக்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் வீசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காஸாவின் வடக்குப் பகுதியில் உள்ள ஜபலியா மற்றும் பைத் லஹியா என்ற இடங்களில் இடிபாடுகளை அப்புறப்படுத்தும்போது குழந்தைகள் உள்பட 95 சடலங்கள் மீட்கப் பட்டுள்ளன.
இதுவரை 1300க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் இந்த தாக்குதல்களில் பலியாகி உள்ளனர். 6000க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளனர். இஸ்ரேலிய தரப்பிலான சேதம் குறித்த உறுதியான தகவல்கள் இல்லை. எனினும் 10 இராணுவ வீரர்கள் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
0 comments