சமாஜ்வாதி கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளராக சஞ்சய் தத் அறிவிக்கப்பட்டார்
Published on வியாழன், 8 ஜனவரி, 2009
1/08/2009 09:42:00 PM //
இந்தியா
மும்பை குண்டு வெடிப்பு வழக்குகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு இரு முறை சிறை சென்று பிணையில் வந்துள்ள நடிகர் சஞ்சய் தத் சமாஜ்வாதி கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளார். உத்திரப் பிரதேச மாநிலம் லக்னோ தொகுதியில் அவர் போட்டியிடுவார் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. இத்தொகுதியின் தற்போதைய உறுப்பினர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் என்பது குறிப்பிடத் தக்கது.
சஞ்சய் தத் ஆயுத தடைச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு அந்த வழக்கு உச்ச நீதி மன்றத்தில் நிலுவையில் இருப்பதால், உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்திடம் சிறப்புச் சலுகை பெறப்படும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே மட்டைப் பந்து வீரரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான நவ்ஜோத் சிங் சித்து இத்தகைய அனுமதி பெற்றே தேர்தலில் போட்டியிட்டார்.
சஞ்சய் தத்தின் சகோதரி காங்கிரஸ் கட்சியின் சார்பில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினாராக இருக்கிறார். காங்கிரஸ் கட்சியும் சமாஜ்வாதி கட்சியும் இந்த தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிடப் போவதால் காங்கிரஸ் கட்சி இதனை எதிர்க்காது என்று கூறப்படுகிறது.
0 comments