ஜிம்பாப்வே தன் நாணயத்தைக் கைவிட்டது!
ஜிம்பாப்வே நாட்டில் நிலவிவரும் கடும் பணவீக்கத்தினால் அந்நாடு தனது நாணயமான் ஜிம்பாப்வே டாலரைக் கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இந்தக் கடும்பணவீக்கத்தினால் அத்தியாவசியப் பொருட்கள் தாறுமாறாக விலையேறிவிட்டன.
எகிறிச்செல்லும் பணவீக்கத்தினைக் கையாளவோ, உருப்படியான பண மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்தவோ இயலாத நிலையில் தற்போது இருக்கும் ஜிம்பாப்வே அரசு, பெரும் மதிப்புள்ள நாணயங்களை அறிமுகப்படுத்தி வந்தது. ஐம்பது மில்லியன் ஜிம்பாப்வே டாலர் நோட்டுகள் சர்வ சாதாரணமாக ஜிம்பாப்வே மக்கள் புழக்கத்தில் வைத்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது 100 டிரில்லியன் ஜிம்பாப்வே டாலர் நோட்டை ஜிம்பாப்வே அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் அந்நாணயத்திற்கு மதிப்பு சிறிதுமின்றிப் போய்விட்டதால் அந்நாட்டுமக்களே இதனைப் பயன்படுத்தாமல் பிற நாட்டு நாணயங்களைப் புழங்கி வரத் தொடங்கியுள்ளனர்.
இதனால் ஜிம்பாப்வே அரசு தன் நாணயப் பரிமாற்றத்தோடு பிறநாட்டு நாணயங்களையும் மக்கள் பயன்படுத்தலாம் என அறிவித்துள்ளது. இன்றைய மதிப்பில் ஓர் அமெரிக்க டாலருக்கு 1520 ஜிம்பாப்வே டாலர் என்ற மதிப்பில் இந்நாணயம் உள்ளது.
இதேநிலை இன்னும் சிறிதுகாலம் தொடர்ந்தால் ஜிம்பாப்வே தன் நாணயத்தை முற்றிலும் கைவிட வேண்டிய நிலை ஏற்படலாம்.
0 comments