பாரக் ஏவுகணை விவகாரம்: சி.பி.ஐ இஸ்ரேல் உதவி கோரியது!
இஸ்ரேலிடமிருந்து வாங்கப்பட்ட 1,150 கோடி ரூபாய்கான பாரக் ஏவுகணை வியாபாரத்தில் நடந்த ஊழல் தொடர்பான விசாரணையில் மத்திய புலனாய்வு துறை இஸ்ரேலிடம் உதவி கோரியுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வரும் இந்த விசாரணையில், ஒப்பந்தம் தொடர்பாக இஸ்ரேலில் வைத்து நடந்த பண கொடுக்கல் வாங்கல் தொடர்பான விவரங்களை இஸ்ரேல் அரசிடம் சிபிஐ கேட்டுள்ளது.
இவ்வொப்பந்தத்தில் உள்ள முக்கிய சில குளறுபடிகள் இஸ்ரேலில் வைத்து நடந்துள்ளதால் அவை தொடர்பான அனைத்து விவரங்களும் தங்களுக்கு அளிக்க வேண்டும் என நீதிமன்றம் மூலம் பெறப்பட்ட அனுமதியின் மூலம் இஸ்ரேல் அரசுக்குச் சி.பி.ஐ கோரிக்கை அனுப்பியுள்ளது.
முன்னாள் இராணுவ அமைச்சர் ஜார்ஜ் ஃப்ர்னாண்டஸ், இராணுவ முன்னாள் உயரதிகாரி சுஷில் குமார், சமதா கட்சியின் தலைவராக இருந்த ஜெயா ஜெட்லி, ஆயுத வியாபாரி சுரேஷ் நந்தா போன்றவர்களை உட்படுத்தி கடந்த 2006 அக்டோபர் மாதம் சி.பி.ஐ வழக்கு பதிவு செய்தது.
இஸ்ரேலிடமிருந்து 7 பாரக் ஏவுகணைகள் வாங்குவதற்காக கொடுக்கப்பட்ட தொகை 17 மில்லியன் டாலர் எனவும், இத்தொகை 1996 ஆம் ஆண்டு இஸ்ரேல் வாக்களித்த ஒப்பந்தத் தொகையை விட அதிகமானது எனவும் சி.பி.ஐ கண்டுபிடித்தது.
1996 ல் இஸ்ரேலிடமிருந்து ஏவுகணைகள் இறக்குமதி செய்வதற்கான அட்மிரல் குமாரின் கோரிக்கையை முன்னாள் ஜனாதிபதியும் அன்றைய விஞ்ஞான ஆலோசகராகவும் இருந்த விஞ்ஞானி அப்துல் கலாம் எதிர்த்த போதிலும் இஸ்ரேலுடனான ஒப்பந்தத்தின்படி ஏவுகணைகள் இறக்குமதி செய்ய ஃபெர்னாண்டஸ் கட்டளையிட்டிருந்தார்.
2001 ல் தெஹல்கா இதழ் இரகசிய கேமரா மூலம் நடத்திய விசாரணையின் மூலமே இவ்வொப்பந்தத்தின் மூலம் நிகழ்த்தப்பட்ட ஊழல் வெளியானது.
0 comments