Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

சீமான் மீண்டும் கைதானார்

Published on: வெள்ளி, 19 டிசம்பர், 2008 //
தமிழ் திரைப்பட இயக்குநர் சீமான் இன்று மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியினர், இயக்குநர் சீமான் விடுதலைப்புலிகளை ஆதரித்தும், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை தாக்கியும் பேசியதையடுத்து, அவரை கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்த புகாரின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கை பிரச்சனை தொடர்பாக ராமேஸ்வரத்தில் நடந்த திரைப்பட கலைஞர்கள் பொதுக் கூட்டத்தில் ஆவேசமாக பேசிய இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோர் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

இயக்குநர் சீமானை குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் தங்கபாலு அறிக்கை மூலம் தமிழக அரசைக் கேட்டுக் கொண்ட நிலையில இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இரண்டாம் வாரமாக கிரீஸ் கலவரம் தொடர்கிறது

Published on: //
கடந்த இரண்டு வாரங்களாக கிரீஸ் நாட்டில் அரசுக்கெதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று தொழிலாளர் அமைப்புகளும், பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் கிரேக்க பாராளுமன்றத்திற்கு வெளியே பேரணி நடத்தினர்.

இந்நிலையில் இன்று முகமூடி அணிந்த இளைஞர்கள், பிரெஞ்சு கலாச்சார மற்றும் கல்வி மையத்தின் மீது தாக்குதல் நடத்தினர். அதன் அருகே அமைந்துள்ள ஒரு வங்கியின் ஏ.டி.எம். நிலையத்தின் மீதும் தாக்குதல் நடத்தினர். சுமார் 20 பேர் இத்தாக்குதலில் ஈடுபட்டதாக காவல்துறையினர் கூறினர்.

வியாழக்கிழமை அன்று நடைபெற்ற காவல்துறையின் அடக்குமுறைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் சுமார் 7,000க்கும் அதிகமான மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். இதில் வன்முறை ஏற்பட்டது.

தலைநகரில் வைக்கப்பட்டிருந்த கிறிஸ்மஸ் மரத்தை வன்முறையாளர்கள் எரிக்க முற்பட்டனர். இதற்கு முன் அதே இடத்தில் வைக்கப்பட்டிருந்த கிறிஸமஸ் மரம் எரிக்கப்பட்டது.

கிரீஸ் வங்கியின் வெளிப்புறம் எழுதப்பட்டிருந்த வாசகம் அங்குள்ள நிலையை எடுத்துரைப்பதாக இருக்கிறது. அந்த வாசகம்: "Merry Crisis and Happy New Fear."

அந்துலே ராஜினாமா

Published on: //
மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஏ. ஆர். அந்துலே, சமீபத்தில் மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலின் போது உயிரிழந்த கார்கரேயின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

கார்கரே தீவிரவாதிகளால்தான் கொல்லப்பட்டாரா அல்லது வேறு காரணமா என்று அவர் சந்தேகம் எழுப்பியிருந்தார். அரசியல் வட்டாரத்தில் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து நேற்று அவர் பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில்,

ஹேமந்த் கார்கரே கொல்லப்பட்டதில் தீவிரவாதிகள் சம்பந்தப்பட்டிருப்பதை நான் மறுக்கவில்லை, சந்தேகப்படவில்லை. அதேபோல கார்கரேவின் தியாகத்தையும் நான் சந்தேகப்படவில்லை.

உண்மையில், கார்கரேவை குறி வைத்துக் கொள்ள தீவிரவாதிகளுக்கு எந்த நோக்கமும் இல்லை. கார்கரே தீவிரவாதத்திற்குத்தான் பலியானாரா அல்லது தீவிரவாதத்தைத் தாண்டி வேறு காரணம் இருந்ததா என்பதுதான் எனக்குப் புரியாமல் உள்ளது. சில வழக்குகளில் முஸ்லிம் அல்லாதோர் சம்பந்தப்பட்டிருப்பதை அவர் கண்டுபிடித்தார்.

தீவிரவாதத்தின் அடி ஆழத்திற்குச் செல்ல முயலும் யாரையும் தீவிரவாதிகள் நிச்சயம் குறி வைப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை என்று கூறியிருந்தார் அந்துலே. இந்த பதிலில் பிரதமர் திருப்தி அடைந்ததாகத் தெரியவில்லை. இதனையடுத்து ஏ.ஆர். அந்துலே தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததாக தகவல்கள் கூறுகின்றன.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!