இரண்டாம் வாரமாக கிரீஸ் கலவரம் தொடர்கிறது
கடந்த இரண்டு வாரங்களாக கிரீஸ் நாட்டில் அரசுக்கெதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று தொழிலாளர் அமைப்புகளும், பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் கிரேக்க பாராளுமன்றத்திற்கு வெளியே பேரணி நடத்தினர்.
இந்நிலையில் இன்று முகமூடி அணிந்த இளைஞர்கள், பிரெஞ்சு கலாச்சார மற்றும் கல்வி மையத்தின் மீது தாக்குதல் நடத்தினர். அதன் அருகே அமைந்துள்ள ஒரு வங்கியின் ஏ.டி.எம். நிலையத்தின் மீதும் தாக்குதல் நடத்தினர். சுமார் 20 பேர் இத்தாக்குதலில் ஈடுபட்டதாக காவல்துறையினர் கூறினர்.
வியாழக்கிழமை அன்று நடைபெற்ற காவல்துறையின் அடக்குமுறைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் சுமார் 7,000க்கும் அதிகமான மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். இதில் வன்முறை ஏற்பட்டது.
தலைநகரில் வைக்கப்பட்டிருந்த கிறிஸ்மஸ் மரத்தை வன்முறையாளர்கள் எரிக்க முற்பட்டனர். இதற்கு முன் அதே இடத்தில் வைக்கப்பட்டிருந்த கிறிஸமஸ் மரம் எரிக்கப்பட்டது.
கிரீஸ் வங்கியின் வெளிப்புறம் எழுதப்பட்டிருந்த வாசகம் அங்குள்ள நிலையை எடுத்துரைப்பதாக இருக்கிறது. அந்த வாசகம்: "Merry Crisis and Happy New Fear."
0 comments