Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

மீண்டும் அ.தி.மு.க.வில் இணைகிறார் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன்!

முன்னாள் அ.தி.மு.க. அமைச்சராக இருந்தவர் கு.ப.கிருஷ்ணன். பின்னர் அ.தி.மு.கவில் இருந்து விலகி தமிழர் பூமி என்ற கட்சியை தொடங்கினார். அந்த கட்சியை கலைத்து விட்டு தே.மு.தி.க. வில் இணைந்தார். அங்கு அவருக்கு மாநில துணை பொது செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில் கு.ப. கிருஷ்ணன் தே.மு.தி.க.வில் இருந்து விலகி மீண்டும் அ.தி.மு.க.வில் இணைகிறார்.

ஊழல் குற்றம் சாட்டப்பட்வரை பா.ஜ.க.வில் சேர்ப்பதா?

உத்திரப் பிரதேச மாநில தலைமைச் செயலாளராகப் பதவி வகித்த நீரா யாதவை பாரதீய ஜனதா கட்சியில் சேர்த்துக் கொண்டதற்கு கட்சித் தொண்டர்கள் மற்றும் மாநிலத் தலைவர்களிடையே எதிர்ப்பு வலுப்பதாக செய்திகள் கூறுகின்றன.

இந்தியாவிலேயே ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் பதவியை இழந்த ஒரே தலைமைச் செயலர் நீரா யாதவ் ஆவார். இத்தகைய ஊழல் மிகுந்த முன்னாள் அதிகாரியை ராஜ்நாத் சிங் போன்ற தலைவர்களே வரவேற்று கட்சியில் இணைத்துக் கொண்டது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்று பெயர் குறிப்பிட விரும்பாத பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர் ஒருவர் கூறியதாக தகவல்கள் கூறுகின்றன.

ராஜ்நாத் சிங் போட்டியிட இருக்கும் காஜியாபாத் தொகுதியில் தியாகி இனத்தவரின் வாக்குகளைப் பெறுவதற்காகவே அந்த இனத்தைச் சார்ந்த இவரை கட்சியில் இணைத்துள்ளதாக மற்றொரு மாநில முன்னாள் தலைவர் கூறி இருக்கிறார்.

கசாபுக்கு அரசு வழக்குரைஞர் - ஏப்ரல் 6 முதல் விசாரணை துவக்கம்

மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலின் போது கைது செய்யப் பட்ட பாகிஸ்தானைச் சார்ந்த அஜ்மல் அமீர் கசாபுக்கு நீதிமன்றம் அரசு வழக்குரைஞரை நியமித்து உத்தரவிட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி முதல் நடைபெறும் என்றும் சிறப்பு நீதிமன்றம் கூறியது.

மகராஷ்டிரா சட்ட உதவிக் குழுவில் உள்ள வழக்குரைஞர் அஞ்சலி வக்மரேவை இந்த வழக்கின் போது கசாபின் சார்பில் வாதிட சிறப்பு நீதிமன்ற நீதிபதி தகில்யானி நியமனம் செய்து இன்று அறிவித்தார்.

மேலும் லஷ்கரே தொய்பாவைச் சார்ந்த பஹீம் அன்சாரி மற்றும் சகாபுதீன் முகமது ஆகியோர் தங்களுடைய வழக்குரைஞர் குறித்து உடன் முடிவெடுக்குமாறும் நீதிபதி வலியுறுத்தினார்.

வருண் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம்!

சமூக ஒற்றுமையைச் சீர்குலைக்கும் வகையில் சிறுபான்மையினருக்கு எதிராக தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய வருண் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ச்ச முதல்வர் மாயாவதி முடிவு செய்திருப்பதாகத் தெரிவித்திருந்தோம்.

அதன்படி நேற்றிரவு வருண் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டார்.

முன்னதாக போடப்பட்ட 3 வழக்குகளில் பிணை கோரியிருந்த அவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

வருண் சிறைக்குச் செல்வதற்கு முன்பாக, பாரதிய ஜனதா தொண்டர்கள் காவல்துறையினருடன் மோதியதில் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிடப்பட்டது. இதில் 65 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்நிகழ்வே, தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அவரை கைது செய்ய முதல்வர் மாயாவதியைத் தூண்டியதாகச் சொல்லப்படுகிறது

மனித நேய மக்கள் கட்சி அதிமுக பக்கம்?

திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்தும், இதுவரை தமக்கான தொகுதிகள் இறுதி செய்யப்படாமல் தொடர்ந்து பேச்சுவார்த்தையே இழுத்துக்கொண்டிருப்பதால் மனிதநேய மக்கள் கட்சி அதிமுக கூட்டணிக்குத் தாவுவது பற்றி யோசித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
திமுகவில் கோரியுள்ள படியே 2 மக்களவைத் தொகுதி ஒரு மாநிலங்களவைத் தொகுதி என்ற கோரிக்கைக்கு இணங்கும் நிலையில் அதிமுகவுடன் தேர்தல் கூட்டணி வைக்க மனிதநேய மக்கள் கட்சி முயற்சி செய்வதாகத் தெரிய வந்துள்ளது.

முதன்முதலாக தேர்தலில் களமிறங்க உள்ள ம ம க தனது சொந்த சின்னத்திலேயே போட்டியிடத் தீர்மானித்துள்ளது.

அதிமுகவும் இக்கோரிக்கைக்கு இணங்கும் எனில், அக்கூட்டணி பலம் பெறும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஆயினும், திமுக கூட்டணியின் முஸ்லிம்லீக் போட்டியிடும் வேலூரில் முஸ்லிம்லீக்கை எதிர்த்து மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட நேரலாம்.

நியூசிலாந்து இரண்டாவது டெஸ்ட் சமனில் முடிந்தது!

நேப்பியரில் நடைபெற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி சமனில் முடிந்தது. போட்டியின் கடைசி நாளான இன்று இந்தியா தனது இரண்டாவது இன்னிங்சில் 476 ரன்களை எடுத்து 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து, 152 ரன்கள் முன்னிலை வகித்தது. நியூசிலாந்து தன்னுடைய இரண்டாவது இன்னிங்சை ஆடாமலேயே ஆட்டம் முடித்துக் கொள்ளப் பட்டது.

இன்றைய ஆட்டத்தின் போது இந்திய வீரர் லஷ்மன் ஆட்டமிழக்காமல் 124 ரன்களுடனும் யுவராஜ் சிங் 54 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

பாகிஸ்தானில் காவல் பயிற்சி மையம் மீது தாக்குதல்: 9 பேர் பலி!

இன்று காலை பாகிஸ்தானின் லாஹூரில் உள்ள காவல் பயிற்சி மையத்தின் மீது நடத்தப் பட்ட தாக்குதலில்ல 9 பேர் பலியானார்கள். நாற்பதுக்கும் அதிகமானோர் காயமுற்றதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

850 பயிற்சி பெற்று வரும் இப்பள்ளியில் தாக்குதல் நடந்த போது சுமார் 400 பேர் இந்த மையத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. சுமார் 8 குண்டுகள் வெடித்ததாகவும், துப்பாக்கிச் சூடும் நடைபெற்று வருகிறது. காவல் துறையினரைப் போல் உடையணிந்து வந்த தீவிரவாதிகள் இத்தாக்குதலைத் தொடுத்துள்ளனர்.

காலை 6.30 மணிக்குத் தொடங்கிய தீவிரவாதத் தாக்குதல் இந்நேரம் வரை தொடர்ந்து வருகிறது.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!