Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

பெங்களூருவில் விமான விபத்து!

பெங்களூருவின் அருகே சிறிய வகை விமானம் ஒன்று நொறுங்கி விழுந்து 3 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Chopper என்றழைக்கப்படும் சிறியவகை விமானம் பெங்களூரு அருகில் உள்ள சேசகிரி என்னும் இடத்தில் கீழே விழுந்தது என்றும், விமானம் முழுமையாக எரிந்துவிட்டது என்றும் கூறப்படுகிறது. இதில் விமானத்தின் உள்ளே இருந்த இருவர் மற்றும் விமானம் விழுந்த இடத்தில் இருந்த ஒருவர் என மொத்தம் மூவர் கொல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிகழ்விடத்திற்கு உள்ளூர் அதிகாரிகள் விரைந்துள்ளனர் எனவும், விபத்து குறித்து விசாரனைக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

காங்கிரசுடனான உறவு முறிந்துவிட்டதாக சமாஜ்வாதி கட்சி அறிவிப்பு!

உத்திரப்பிரதேச மாநிலத்தின் 24 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி தன்னிச்சையாக அறிவித்ததைத் தொடர்ந்து காங்கிரசுடனான உறவு முறிந்துவிட்டதாக சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ளது.

கடுமையான வார்த்தைகள் எதையும் உபயோகிக்க நான் விரும்பவில்லை. ஆனால் கூட்டணி முறிந்துவிட்டது. காங்கிரஸ் 24 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த அன்றே கூட்டணி முடிவுக்கு வந்துவிட்டது என்று சமாஜ்வாதி கட்சியின் பொதுச் செயலாளர் அமர் சிங் செய்தியளார்களிடம் கூறினார்.

மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 17 தொகுதிகளை காங்கிரசுக்கு அளிக்க சமாஜ்வாதி கட்சி தயாராக இருந்தது. குறைந்தது 25 தொகுதிகளாவது தங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரி வந்தது.

எடியூரப்பாவின் மகன் ஷிமோகா தொகுதி பா.ஜ.க. வேட்பாளர்

ஷிமோகா மக்களவைத் தொகுதியின் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளராக கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா அறிவிக்கப் பட்டுள்ளார்.

குடும்ப அரசியல் நடத்துகிறது என்று காங்கிரஸ் கட்சியையும், கர்நாடக மாநிலததில் தேவகவுடாவையும் எதிர்த்து பா.ஜ.க. பிரச்சாரம் செய்து வந்த நிலையில் தற்போது மாநில முதல்வரின் மகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பதால் கர்நாடகாவில் பா.ஜ.க.வில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஷிகாரிபூர் நகர்மன்றக் குழு உறுப்பினராக தற்போது ராகவேந்திரா இருந்து வருகிறார். அவரது செயல்பாடுகள் திருப்தி அளிப்பதாக உள்ளது. எனினும் கட்சியில் மூத்த உறுப்பினர்கள் பலர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட ஆர்வம் தெரிவித்திருந்தனர். தற்போது அவர்கள் அதிருப்தியடைந்துள்ளதாக பா.ஜ.க. தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.

ராகவேந்திரா மட்டுமின்றி மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் உடாசியின் மகன் சிவகுமார் உடாசிக்கும் மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

பா.ஜ.க.வும் கூட்டணிக் கட்சிகளும்

பாரதீய ஜனதா கட்சியுடன் புதிய கட்சிகள் கூட்டணி அமைத்து தொகுதிப் பங்கீடுகள் விரைவாக ஒத்துக் கொள்ளப்படும் அதேவேளை, அதன் பழைய கூட்டணிக் கட்சிகளுடன் உடன்பாடு முடிவுறாமல் தொடர்ந்து கொண்டுள்ளது.

ஹரியாணாவில் இந்தியா தேசிய லோக் தள் கட்சியுடனும், உத்திரப் பிரதேசத்தில் ராஷ்ட்ரீய லோக் தள் கட்சியுடனும், அசாமில் அசாம் கன பரிஷத் கட்சியுடனும் புதிதாக கூட்டணி அமைத்து தொகுதிப் பங்கீடுகள் உறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையின் அதன்  பழைய கூட்டணிக் கட்சிகளான, பீகாரின் ஐக்கிய ஜனதா தளம், ஒரிசாவின் பிஜு ஜனதா தளம், மகாராஷ்டிராவின் சிவ சேனா ஆகிய கட்சிகளுடன் இதுவரை உடன்பாடு ஏற்படவில்லை.

அசாமில் மொத்தம் உள்ள 14 மக்களவைத் தொகுதிகளில் பாரதீய ஜனதா கட்சிய 8 இடங்களிலும், அசாம் கன பரிஷத் 6 இடங்களிலும் போட்டியிட உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அசாம் கன பரிஷத் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளதாக பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் அறிவித்தார். ஆனால் அசாம் கன பரிஷத் தலைவர் சந்திர மோகன், தங்கள் கட்சி என்.டி.ஏ.வில் சேரவில்லை எனவும், பா.ஜ.க.வுடன் தொகுதி உடன்பாடு மட்டுமே செய்து கொள்ளப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

ஒரிசாவில் பிஜு ஜனதா தளம் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து, மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட விரும்புகிறது. ஒரிசா சட்டபைக்கு மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் 100 தொகுதிகள் தங்கள் கட்சிக்கு ஒதுக்கப்படாவிட்டால் தங்கள் கட்சி மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என்று கூறியுள்ளது. சரத் பவரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் பிஜு ஜனதா தளத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

ஐ.பி.எல். போட்டி தேதிகளில் மாற்றம் தவிர்க்க முடியாதது - ப.சி.

இந்தியன் பிரீமியர் லீக் போட்டி தேதிகளில் மாற்றம் செய்வது தவிர்க்க முடியாதது என்று இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறினார்.

தேர்தல் ஆணையம் தேர்தல் நாள்களை அறிவிப்பதற்கு முன்பே ஐ.பி.எல். போட்டித் தேதிகளை அறிவி்த்துவிட்டாலும், தேர்தல் ஆணையம் ஐ.பி.எல். போட்டி தேர்தல்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.

ஐ.பி.எல். போட்டிகளை ஒத்தி வைக்க வேண்டும் என்று தாம் கோரவில்லை எனவும், அவர்கள் போட்டிகளை நடத்த தாம் ஒத்துழைப்புத் தருவதாகவும் கூறிய அமைச்சர் சிதம்பரம், போட்டிகளின் தேதிகளில் மாற்றம் செய்வது தவிர்க்க முடியாதது என்று கூறினார்.

இந்தியாவில் கிரிக்கெட் விளையாடப்பட வேண்டும் என்று தாம் விரும்புவதாகக் கூறிய சிதம்பரம், இந்தியா கிரிக்கெட்டுக்கும் கிரிக்கெட் வீரர்களுக்கும் பாதுகாப்பான நாடு என்றும் கூறினார்.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!