காங்கிரசில் அஸாருத்தீன் ?
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஸாருத்தீன் போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து அஸாருத்தீனிடம் கேட்டபோது "இந்த செய்தி எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை என்றும், நான் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தால் உங்களுக்குத் தகவல் தருகிறேன்" என்றும் அவர் கூறினார்.
சமீபத்தில் அஸாருத்தீன் காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியைச் சந்தித்து நாடாளுமன்றத்தில் போட்டியிடும் தனது விருப்பத்தைத் தெரிவித்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் தலைவர் சந்திரசேகர் ராவை சந்தித்தபோது, அஸாருத்தீன் அக்கட்சியில் இணைந்ததாக இதுபோன்ற வதந்தி பரவியது குறிப்பிடத்தக்கது.
99 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 6215 ரன்களையும், 334 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 9379 ரன்களும் எடுத்திருந்த அஸாருத்தீன் இந்தியாவின் மிகச் சிறந்த கேப்டனாகவும் விளங்கினார். 2000 ஆம் ஆண்டு எழுந்த ஊழல் புகாரை அடுத்து இவர் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது.