ஜம்மு கஷ்மீர் மாநிலத்தின் 11ஆவது முதல் அமைச்சராக உமர் அப்துல்லா பதவியேற்றார். இவர் அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் மகன் ஆவார். 38 வயதாகும் உமர் ஜம்மு கஷ்மீர் மாநிலத்தின் மிக இளவயது முதல் அமைச்சர் என்ற பெருமையைப் பெறுகிறார். அம்மாநில ஆளுநர் வோரா இவருக்குப் பதவிப் பிரமானம் செய்து வைத்தார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் பரூக் அப்துல்லா ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
முன்னதாக கடந்த மாதம் நடைபெற்ற மாநிலத் தேர்தல்களில் எந்தக் கட்சிக்கும் பெரும்பாண்மை கிடைக்கவில்லை. அதிக இடங்களைப் பெற்ற ஜம்மு கஷ்மீர் மாநாட்டு கட்சி காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. கடந்த முறை காங்கிரஸ் மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து ஆட்சியமையத்தது.
மும்பையிலும் ஸ்காட்லாந்திலும் கல்வி பயின்ற உமர் 1998 ஆம் ஆண்டு அரசியலில் நுழைந்தார். மத்தியில் பா.ஜ.க. ஆட்சியின் போது வணிகத்துறை இணை அமைச்சராகவும் பின்னர் வெளியுறவுத் துறை துணை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். கடந்த ஆண்டு அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தம் செய்து கொள்வதை எதிர்த்து கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்த்து மிக அழுத்தமாக வாதிட்டார். அன்றைய விவாதத்தில் இவருடைய பேச்சு இவரை இந்தியர்களிடையே பிரபலப்படுத்தியது.
கடந்த மாதம் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறது மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரான முப்தி முகம்மது சயீதின் வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இது குறித்து பத்திரிகையாளர்கள் கேட்ட போது, நான் அவரைச் சந்திக்கக் கூடாதா? அவர் முதிர்ந்த அரசியல்வாதி. எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் அவரின் ஒத்துழைப்பைக் கோருவதற்காக சந்தித்தேன் என்று கூறி ஆச்சர்யப்படுத்தினார். மாநிலத்தின் மற்ற அரசியல் தலைவர்களையும் விரைவில் சந்திப்பேன் என்றும் கூறினார்.
ஹரியானா மாநிலத்தைச் சார்ந்த பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஒருவரின் மகளான பாயல் என்பவரை இவர் மணந்துள்ளார். இவரது சகோதரி சாரா காங்கிரஸ் கட்சியின் சச்சின் பைலட்டை மணந்துள்ளார்.