கிரிக்கெட்: இந்தியா நியூசிலாந்தை மீண்டும் வீழ்த்தியது
கிறிஸ்ட்சர்ச் நகரில் இன்று இந்தியா நியூசிலாந்து இடையே நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் மட்டைப்பந்தாட்டத்தில் இந்தியா நியூசிலாந்தை வீழ்த்தியது.
பூவா தலையா போட்டதில் நியூசிலாந்து வென்றாலும் இந்தியாவை மட்டையாடப்பணித்து தான் பந்துவீச்சைத் தொடங்கியது. தொடக்கத்திலேயே சேவாக் ஆட்டமிழந்தாலும், டெண்டுல்கர் அபாரமாக ஆடி ஆட்டமிழக்காமல் 133 பந்துகளில் 163 ஓட்டங்கள் எடுத்தார். இது அவருக்கு ஒருநாள் ஆட்டத்தில் 43வது சதமாகும். தோனி(68), யுவராஜ்சிங்(87) அவருக்கு உறுதுணையாக விளங்கினர். அபாரமாக ஆடிய இந்தியா 50 சுற்று பந்துவீச்சில் 392 ஓட்டங்கள் குவித்தது.
அதன்பின் ஆடிய நியூசிலாந்து அபாரமாகத் தொடங்கினாலும், பதட்டத்தில் தனது ஆட்டக்காரர்களை பறிகொடுத்து 334 ஓட்டங்கள் பெற்று வீழ்ந்தது. இந்தியா 58 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது. ஜாஹிர்கான், யுவராஜ்சிங், ஹர்பஜன்சிங் தலா இருவரையும், யூசுஃப்பதான், குமார் தலா ஒருவரையும் ஆட்டமிழக்கச்செய்தனர்.
இதற்கு முன் நடந்த முதலாம் ஒருநாள் ஆட்டத்திலும் இந்தியா வென்றுள்ளது. இரண்டாவது ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதால் கைவிடப்பட்டது. எனினும் 20-20 சுற்று ஆட்டங்கள் இரண்டிலும் நடப்பு வாகையரான இந்தியாவை நியூசிலாந்து வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
0 comments