ராம் சேனா தலைவர் மங்களூர் மாவட்டத்திற்குள் நுழையத் தடை!
ஸ்ரீராம் சேனா அமைப்பின் தலைவரான பிரமோத் முதலிக் கர்நாடகாவின் தெற்கு கன்னடா மாவட்டத்திற்குள் ஒரு ஆண்டுக்கு நுழையத் தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்த மாவட்டத்திற்கு அவர் வந்தால் சமூக அமைதிக்குப் பங்கம் ஏற்பட வாய்ப்பிருப்பதால் இந்த தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
மங்களூரைத் தலைநகராக் கொண்டுள்ள தெற்கு கன்னடா மாவட்ட நிர்வாக அதிகாரிகள் 15 பக்கங்களைக் கொண்ட இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக மாவட்ட அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். ஜனவரி மாதம் கேளிக்கை விடுதிக்குள் சென்று இளம் பெண்களைத் தாக்கியது, கடந்த மாதம் காதலர் தினத்தன்று நடைபெற்ற நிகழ்வுகள் உள்பட பல்வேறு காரணங்கள் இந்த தடை உத்தரவுக்கு கூறப்பட்டுள்ளன.
மாவட்ட அமர்வு நீதிபதி பொன்னுராஜ் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும், இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அரசு செய்தித் தொடர்பாளர் கூறியதாக தகவல்கள் கூறுகின்றன.
0 comments