ஆஸ்கர் விருது பெற்றவர்களுக்கு நாடாளுமன்ற அவைகளில் பாராட்டு!
ஸ்லம் டாக் திரைப்படத்திற்கு 8 ஆஸ்கர் விருதுகள் கிடைத்திருப்பதற்கு இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நாடாளுமன்ற மக்களவைக் கூட்டம் அவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி தலைமையிலும், மாநிலங்களவைக் கூட்டம் அதன் தலைவர் ஹமீது அன்சாரி தலைமையிலும் இன்று நடைபெற்றது. மூன்று இந்தியர்களுக்குக் கிடைத்த இந்த அகாடமி விருதுகள் இந்தியக் கலைஞர்களுக்கான சர்வதேச அங்கீகாரம் என்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனை இது என்றும் கூறப்பட்டது.
மக்களவைக் கூட்டம் தொடங்கிய உடனே அவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி, ஸ்லம் டாக் மற்றும் ஸ்மைல் பிங்கி திரைப்படங்களுக்காக விருது பெற்றவர்களுக்கும் இத்திரைப்படங்களில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்து கூறினார்.
ஸ்லம் டாக் திரைப்படம் சிறந்த திரைப்படம் என்ற விருது உட்பட 8 பரிசுகளை வென்றிருப்பது பெருமிதம் அடைய வேண்டிய செய்தி என்றும், ஏ. ஆர். ரஹ்மான், குல்சார், ரசூல் பூக்குட்டி ஆகியோரின் இந்த வரலாற்றுச் சாதனையால் ஒவ்வொரு இந்தியனின் இதயமும் மகிழ்வடைவதாகவும் அவர் கூறினார்.
ஸ்மைல் பிங்கி படம் குறையுடைய உதடுகளைக் கொண்ட இந்தியப் பெண் குறித்த குறும் ஆவணப் படம் என்பது குறிப்பிடத் தக்கது.
0 comments