ஈழப்பிரசினையில் இன்னுமொருவர் தீக்குளிப்பு
கடலூர் வண்டிப்பாளையத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான தமிழ்வேந்தன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினராவார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஈழத்தமிழர்களுக்காக நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கு கொண்டு மிகுந்த உணர்ச்சி பெருக்குடன் பேசினார்.
மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருந்த அவர் இலங்கை தமிழர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற மனநிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2 நாட்களாக தனது நெருங்கிய நண்பர்களிடம் இலங்கை தமிழர்களுக்காக தீக்குளிக்கப்போகிறேன் என்று கூறி வந்தாராம்.
நேற்று மதியம் 2 மணி அளவில் மண்எண்ணெய் கொண்டு கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு வந்தார். அங்கு நடுரோட்டில் நின்று கொண்டு மண்எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடலில் தீ பற்றிப்பிடித்து எரிந்ததால் வேதனை தாங்க முடியாமல் ஓடிய அவர் ரோட்டோரத்தில் உள்ள டீக்கடை அருகில் கீழே விழுந்தார்.
அவரது உடலில் சிலர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இந்த சம்பவம் பற்றி தெரிந்து காவல்துறையினரும், தீயணைப்பு படையினரும் விரைந்து வந்தனர்.
உடல் கருகி உயிருக்கு போராடியபடி கிடந்த தமிழ்வேந்தனை ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
தமிழ்வேந்தனுக்கு 95 சதவீத தீக்காயம் ஏற்பட்டு இருந்ததால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் யோசனைப்படி கடலூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பயனின்றி நள்ளிரவு 1.30 மணி அளவில் அவருடைய உயிர் பிரிந்தது.
ஜோதி என்ற தமிழ்வேந்தனுக்கு திருமணமாகி ஜான்சி என்ற மனைவியும், சந்தோஷ்(11/2) என்ற மகனும் உள்ளனர்.
முன்னதாக அய்யப்பன் எம்.எல்.ஏ., ரவிக்குமார் எம்.எல்.ஏ., ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு சென்று தமிழ் வேந்தனை பார்த்தனர்.
0 comments