சினிமா விமர்சனம் : நான் கடவுள்
Published on வியாழன், 19 பிப்ரவரி, 2009
2/19/2009 03:00:00 PM //
சினிமா,
நான் கடவுள்,
விமர்சனம்,
Cinema,
Naan Kadavul
கதை, திரைக்கதை, இயக்கம்: பாலா
வசனம்: ஜெயமோகன்
இசை: இளையராஜா
காசிப்பண்டிட்டின் உதவியுடன்,தலைமைச் சாமியாரைச் சந்தித்து மகனைத் தன்னுடன் அழைத்துச் செல்லத் தந்தை கெஞ்ச, "நீ அஹம் ப்ரம்மாஸ்மி; கடவுள்; உனக்கு உறவுகள் இருக்கக்கூடாது; ஊருக்குச் சென்று உன் உறவுகளை எரித்துவிட்டு வா" என்ற சாமியாரின் அனுமதியுடன் ஊருக்கு வருகிறார் மகன் ஆர்யா!
ஊருக்கு வரும் ஆர்யாவால் வீட்டில் தங்க இயலவில்லை. பாசத்துடன் நெருங்கும் தாயுடனும் ஒட்ட முடியவில்லை.சாப்பிடச் சொல்லும் தாயிடம் "கஞ்சா கிடைக்குமா?" எனக்கேட்டு, கஞ்சா கிடைக்கும் மலைக்கோவிலில் தங்குகிறார் ஆர்யா!
பிச்சை எடுப்பதை ஒரு தொழிலாகச் செய்யும் பிச்சைக்கார மாஃபியாக் கும்பல்,கோயிலில் பிச்சை எடுப்பதற்காக ஆள் கடத்தல் செய்வதையும்,ஒரு கும்பலில் இருந்து மற்ற கும்பலுக்கும் பிற மாநிலத்துக்கும் காவல்துறையின் உதவியுடன் ஆள் கடத்துவதையும் கொடுமைப் படுத்துவதையும் விலாவாரியாகக் காட்டுவதே கதை.
ஒரு பிச்சைக்காரக் கும்பலில் பாட்டுப்பாடி பிச்சை எடுக்கும் பார்வையிழந்த பிச்சைக்காரியான பூஜா, காவல்துறை உதவியுடன் வலுவான ஒரு கும்பலுக்குக் கடத்தப்படுகிறார். விகாரத் தோற்றமுள்ள மற்றொரு பிச்சைக்கார மாஃபியாத் தலைவனுடன் படுக்கையைப் பகிர கண்பார்வையுள்ள எந்தப் பிச்சைக்காரியும் சம்மதிக்காததால் பூஜாவைப் பத்துலட்சம் ரூபாய்க்கு விற்கிறான் கும்பல் தலைவன். ஆனால் இதை விரும்பாத சக பிச்சைக்காரர்கள் பூஜாவைத் தப்ப வைக்க முயலும்போது ஆர்யா மாஃபியாக் கும்பல் தலைவர்களைக் கொல்கிறார்.
சுமார் மூன்றாண்டுகள் தயாரிப்பில் இருந்த இந்தப் படத்தின் காசிக் காட்சிகள் மாதக் கணக்கில் படம்பிடிக்கப்பட்டன என்ற சொல்லப்பட்டது. ஆனால் காசிக்காட்சிகள் கொஞ்சமோ கொஞ்சம். படம் மொத்தமும் காசியில்தானோ என எண்ணும்படி ட்ரெய்லர் இருந்தது. படத்தில் ஆர்யா வரும் இடங்கள் /காட்சிகள் சுருக்கமே. எதனாலோ நிறைய காட்சிகள் வெட்டப்பட்டிருப்பது புரிகிறது.
இந்துத்துவா ஆள் என அறியப்பட்ட ஜெயமோகனின் வசனங்கள் சில இடங்களில் சுருக்.
"ஜோசியக்காரன் பேச்சைக் கேட்டா பெத்த பிள்ளைய பதினாலு வருசம் காசியில் விட்டே?" எனக் காசிப் பண்டிட் கேட்கும் இடம்,
மலைமேல் இருக்கும் சாமியாரைத் தேடி வரும் ஒருவன் "சாமீ! சாமீ" எனும்போது, "கண் தெரியாதவனும் சாமி, காது கேட்காதவனும் சாமி, கல்லும் சாமி, மண்ணும் சாமி" " என ஆர்யா உறுமும் இடம்,
ஆர்யாவைத் தேடி வரும் பிச்சைக்காரச் சிறுவன் காவி உடுத்திய ஒருவனிடம்' " சாமியெப்பாக்கணும்"
"ஏன்? எங்களெப்பாத்தா சாமியாத்தெரியலையா?"
"சடபிடிச்சவனெல்லாம் சாமியா?"எனக்கேட்பது,
கோர்ட்டில் ஆர்யாவை நிறுத்தும்போது, மாஜிஸ்ட்ரேட், " இந்த மாதிரி ஆளுகளெயெல்லாம் ஒங்க சட்டம் ஒண்ணும் செய்யாது. ஒரு பரதேசி முதல் மந்திரியையே தலையை வெட்டுவேன்னு சொன்னானே? அவனெ ஒங்க சட்டம் என்ன செய்தது?" எனக் கேட்கும் இடம்.
தன்னைப் பார்க்க வந்த தாயிடம் ஆர்யா,
" ஐயிரண்டு திங்களாய் அடக்கி வைத்த தூமையே
கையிரண்டு காலிரண்டாய் பிள்ளையாய் ஆனதே
என்ற சித்தர் பாடலைக் கூறிவிட்டு, "தூமைன்னா என்னாண்ணு தெரியுமா உனக்கு? எனக்கேட்கும் இடத்தில் சுருக்....சுருக்..
கஞ்சா அடித்த ஜோரில், மலை மேலிருந்து ஆர்யா சங்கு ஊத, " சாமீ! நீங்க ஊதுற சத்தம் அடிவாரம் வரெ கேக்குது; நாங்க போலீஸுக்கு பயந்து சாமியார் வேசத்துலெ இங்கெ இருக்கிறொம்."எனக் காவி வேட்டிகள் கூறுவது எனப் பல இடங்களைக் கூறலாம்.
நகைச்சுவை நடிகராய் வடிவேலுவுடன் வரும் ஒருவர் இதில் மிக சீரியஸாக நடித்துள்ளார். நகைச்சுவைக்காட்சிகள் தனியாக ஏதுமில்லை. கதையோட்டத்தில் வசனங்களால் ஆங்காங்கே சிரிப்பு வெடிக்கிறது.
ஊனமுற்றவர்களைத் தேவைக்கேற்றபடி வேலை வாங்கி இருப்பதில் இயக்குநரின் உழைப்பு தெரிகிறது.
தேர்ந்த நடிகர்களை விட இயல்பாக அனைவரும் நடித்துள்ளனர். வில்லன் தாண்டவனாக வருபவரின் நடிப்பு மிக அருமை. பூஜா விருதை எதிர்பார்த்து நடித்திருக்கலாம். அதற்காகவே சொந்தக் குரலில் டப்பிங்க் கொடுத்துள்ளார் போலும்.
பாலாவின் பிதாமகன் படத்துக்கும் இப்படத்துக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன.
அதிலும் கஞ்சா; இதிலும் கஞ்சா..
அதிலும் சுடுகாடு; இதிலும் சுடுகாடு..
அதிலும் பழைய பாடல்களின் தொகுப்புப் பாடல் ; இதிலும் டிட்டோ..
நந்தாவில் மகன் தாய்ப்பாசத்துக்கு ஏங்குவான்;
இந்தப்படத்தில் தாய் மகன் பாசத்துக்காக ஏங்குகிறாள்.
இவை யதேச்சையா? அல்லது இதுதான் பாலாவின் ஸ்டைலா?
இந்த விமர்சனம் எழுதிக்கொண்டிருக்கும்போது, மலையாள சானலான 'அமிர்தா டி.வி.யில், கேரளத்தில் பிச்சை எடுக்க, பிச்சைக்கார மாஃபியாவால் தமிழ்நாட்டிலிருந்து பிச்சைக்காரர்கள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பது பற்றிய ஒரு செய்தித் தொகுப்பு ஓடிக்கொண்டிருந்தது, பொருத்தமாய் அமைந்தது.
வணிக ரீதியில் இல்லாமல் இப்படி ஒரு கதையைத் தேர்ந்தெடுத்ததற்காக, பாலாவைப் பாராட்டலாம்.
படம் பார்த்தபின் மனதில் ஒரு வெறுமை. ஏனோ?
மொத்தத்தில் எதிர்பார்த்தது கிடைக்காதது ஏமாற்றமே!
0 comments