புலிகள் போர் நிறுத்தம்: இலங்கை ஏற்க மறுப்பு
புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் நடேசன் ஐ நா, ஐரோப்பிய யூனியன்,பிரிட்டன், அமெரிக்கா, ஜப்பான், மற்றும் நார்வே உள்ளிட்ட நாடுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில்
ராக்கெட் லாஞ்சர், பீரங்கி மூலமாக அப்பாவி மக்கள் மீது இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தினமும் 50ல் இருந்து 100 அப்பாவித் தமிழர்கள் பலியாகி வருகின்றனர். ஏற்கனவே, 2,000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டு விட்டனர்; 5,000 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இது போன்ற சம்பவங்களை உலக நாடுகள் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது கவலை அளிக்கிறது.பொதுமக்கள் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு, இலங்கை அரசுடன் போர் நிறுத்தம் செய்ய தயாராக உள்ளோம். பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண, உலக நாடுகள் உதவ வேண்டும். அதே நேரத்தில், எந்த காரணத்தைக் கொண்டும் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரணடைய மாட்டோம்.
இலங்கையில் சிறுபான்மையினராக உள்ள தமிழர்களைப் பாதுகாப்பதற்காகவே ஆயுதம் ஏந்தியுள்ளோம்.இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து இலங்கை இராணுவ செய்தித் தொடர்பாளர் கொல்யா ரம்புக்வெல்லா கூறுகையில், "தமிழ் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு விடுதலைப் புலிகளே காரணம். தமிழ் அரசியல் கட்சித்தலைவர்கள், அப்பாவி மக்கள் என ஏராளமானோரை புலிகள் கொன்று குவித்துள்ளனர். புலிகளுடன் போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அவர்கள் ஆயுதங்களை கீழே போடாதவரை போர் நிறுத்தம் செய்ய முடியாது' என்றார்.
0 comments