Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

இந்திய கிரிக்கெட் அணி இலங்கை பயணம்

Published on வியாழன், 15 ஜனவரி, 2009 1/15/2009 08:41:00 PM // , , ,

பாகிஸ்தான் செல்லவிருந்த இந்திய கிரிக்கெட் அணி மும்பை தாக்குதல் சம்பவத்தை அடுத்து அங்கு நடைபெறவிருந்த போட்டிகள் ரத்து செய்யப் பட்டன. அதனைத் தொடர்ந்து இலங்கை சுற்றுப் பயணம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு இன்று அதற்கான அட்டவணை அறிவிக்கப்பட்டது.


வரும் 24ஆம் தேதி இந்திய அணி கொழும்பு செல்கிறது.  28 மற்றும் 30 ஆம் தேதி டம்போலாவில் இரு ஒரு நாள் போட்டிகள் நடக்கின்றன. மூன்றாவது போட்டி அடுத்தமாதம் 2ஆம் தேதி நடைபெறும். 4 மற்றும் 5ஆவது போட்டிகள் ஓரிரு நாட்கள் இடைவெளிக்குப் பிறகு நடைபெறும். அதன் பின்னர் T-20 எனப்படும் 20 ஓவர் கொண்ட போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் இலங்கைப் பயணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது. மும்பை தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்ததையும், தென் ஆப்பிரிக்காவில் முன்பு இருந்த நிற வெறி அரசுக்கெதிராக அந்த அணி சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதித்ததையும் சுட்டிக் காட்டிய பா.ம.க. தலைவர் இராமதாஸ், தன் நாட்டு மக்களையே கொன்று குவிக்கும் இலங்கை அரசைக் கண்டிக்கும் விதமாய் இலங்கையுடனான கிரிக்கெட் உறவை முறித்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளராக ஸ்ரீனிவாசன், தேர்வுக் குழுத் தலைவராக ஸ்ரீகாந்த் போன்ற தமிழர்கள் பொறுப்பில் இருந்தும் தமிழர்கள் கொல்லப் பட்டுக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் இந்திய அணியை இலங்கை அனுப்ப முடிவு செய்ததைச் சுட்டிக் காட்டினார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இந்திய அணி இலங்கை செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட இந்தியா தலையிட வேண்டும் என்று கோரி தொடர் உண்ணா நிலை மேற்கொண்டு வருகிறார் என்பது நினைவு கூரத்தக்கது.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!