3ஆவது நாளாகத் தொடரும் சரக்குந்து வேலை நிறுத்தம்
சரக்குந்து உரிமையாளர்களும் மத்திய அரசும் தங்கள் நிலையில் உறுதியாக இருப்பதைத் தொடர்ந்து, சரக்குந்து வேலை நிறுத்தம் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கிறது. உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் போக்குவரத்திற்கு இரயில்வே துறையின் உதவியை நாடியுள்ள போதிலும் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரும் நடவடிக்கையிலும் இறங்கியுள்ளது.
எங்களுக்கு ஒவ்வொரு நாளும் நட்டம் ஏற்படுகிறது. எங்களால் தொடர்ந்து இந்த தொழில் செய்ய இயலவில்லை. எனவே எங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை வேலை நிறுத்தம் தொடரும் என்று அகில இந்திய போக்குவரத்துப் பேராயத் தலைவர் சரன்சிங் லோஹரா கூறினார். பிரதமர் உடனடியாக இதில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று சரக்குந்து உரிமையாளர்கள் கூறினர்.
சரக்குந்து உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்தால் அவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் மற்று அத்தியாவசியப் பொருள் சட்டம் ஆகியவற்றின் கீழ் மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
வேலை நிறுத்தத்தால் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. இராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
0 comments