Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

காந்தமால் பா.ஜ.க. வேட்பாளர் கைது!

Published on: செவ்வாய், 14 ஏப்ரல், 2009 // , , , , , , , ,
ஒரிசா மாநிலம் காந்தமால் நாடாளுமன்றத் தொகுதியின் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர் அஷோக் சாகு இன்று கைது செய்யப் பட்டார். இம்மாதத் தொடக்கத்தில் பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வண்ணம் பேசியதாக அவர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வந்தது. காவலர்களிடம் பிடிபடாமல் நீதிமன்றத்தில் பிணை கேட்டு அவர் தொடுத்த வழக்கு தள்ளுபடி செய்யப் பட்டதை அடுத்து அவர் கைது செய்யப் பட்டு நீதி மன்றக் காவலில் வைக்கப் பட்டுள்ளார்.

அவர் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153 A மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 125 (A) ஆகிய சட்டங்களின் அடிப்படையில் கைது செய்யப் பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறைத் தலைவர் பிரவீன் குமார் கூறியுள்ளார்.

ஐ.பி.எம். நிறுவனத்தில் இனி தேநீர், காபி இல்லை!

கணினி உற்பத்தியில் முன்னணி நிறுவனமான ஐ.பி.எம். நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள தங்களது கிளைகளில் பணி புரியும் ஊழியர்களுக்கு தேநீர், காபி போன்றவை இலவசமாக அளிப்பது நிறுத்தப்படும் என்று அறிவித்துள்ளது. மே மாதம் 1 ஆம் தேதி முதல் இந்நடவடிக்கை அமுலுக்கு வருகிறது. உலகப் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து தங்களது நிறுவனத்தின் செலவுகளைக் குறைக்கும் இந்நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்படுகிறது. மேலும் ஊழியர்களுக்கு அவர்களின் இல்லங்களில் நிறுவனத்தின் சார்பில் வழங்கி வந்த இலவச இணைய இணைப்பும் நிறுத்திக் கொள்ளப் படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் ஐ.பி.எம் நிறுவனம் 2800 ஊழியர்களின் சம்பளத்தைக் குறைத்து அவர்களுக்கு அறிவிக்கை அனுப்பியிருந்தது. மேலும் இந்நிறுவனத்தின் அமெரிக்கக் கிளைககளில் பணிபுரியும் சுமார் 5000 பேர் வேலை இழக்கக் கூடும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

பாஜக வுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை: ஜெ திட்டவட்டம்

பாரதிய ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைக்கும் என்ற செய்திகள் அடிப்படை இல்லாதவை என அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார். தேர்தலுக்குப் பின் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி மத்தியில் அமைய அ.தி.மு.க. போன்ற கட்சிகள் எங்களுக்கு ஆதரவு அளிக்கும் என பா.ஜ.க. தலைவர் எல்.கே. அத்வானி அண்மையில் கூறியிருந்தார். இதையடுத்து பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. எவ்விதக் கூட்டணியும் அமைக்காது என ஜெயலலிதா மறுத்துள்ளார்.

"தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி சேரும் என சில ஊடகங்கள் செய்தி பரப்பி வருகின்றன. நாங்கள் 2009 மக்களவைத் தேர்தலுக்காக இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளோம். எனவே பா.ஜ.க.வுடன் நாங்கள் கூட்டணி அமைப்போம் என்ற செய்திகள் எவ்வித அடிப்படையும் இல்லாதவை. தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி குறித்து நாங்கள் எந்தக் கட்சியுடனும், எந்த பேச்சும் நடத்தவில்லை," என ஜெயலலிதா கூறியுள்ளார்.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!