Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

இஸ்ரேலுடன் இந்தியா 1.4 மில்லியன் டாலர் ஆயுத ஒப்பந்தம்

Published on: வெள்ளி, 27 மார்ச், 2009 // , , , , , , ,
இஸ்ரேலிடமிருந்து 1.4 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான விமான பாதுகாப்பு சாதனங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா இன்று கையெழுத்திட்டது. வணிக நாளிதழான குளோப்ஸ் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. இந்திய பாதுகாப்பு அமைச்சகம் இதுவரை முறையான தகவலைத் தரவில்லை.

இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியாவின் மீது தொடுக்கப்படும் ஏவுகணைத் தாக்குதல்களை முறியடிக்கும் ஏவுகணைகளை இஸ்ரேல் தயாரித்தளிக்கும். இத்தகைய ஏவுகணைகளை இந்தியா ஏற்கனவே சொந்தமாகவே தயாரித்துள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி கழகம் (DRDO) அண்மையில் உயர்தர விமான ஏவுகணையை (AAD) சோதித்து வெற்றி கண்டது. இஸ்ரேலின் இராணுவ தளவாட விற்பனையில் இந்தியா தற்போது முதலிடம் வகிக்கிறது.

அப்துல் கலாமுக்கு ஹோவர் விருது

இந்தியக் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமுக்கு 2008ஆம் ஆண்டுக்காக ஹோவர் விருது வழங்கப்படுகிறது. புகழ் பெற்ற இந்த விருதைப் பெரும் முதல் இந்தியர் இவர் ஆவார்.

அமெரிக்க எஞ்சினியர்கள் அமைப்பு ஆண்டுதோறும், தன்னலமற்ற சேவை செய்து வரும் விஞ்ஞானிகளுக்கு இந்த விருதை வழங்கி வருகிறது.

கிராமப்புற மக்களுக்கு உயர்தர மருத்துவ சேவை வசதியை ஏற்படுத்திக் கொடுத்தது, மருத்துவர்களுக்கும் நுட்பவியலாளர்களுக்கும் தொடர்பை ஏற்படுத்தியது, உயர்தர மருத்துவ வசதிகளை தொலைதூர மருத்துவத்தின் மூலம் கிராமங்களையும் எட்டச் செய்தது என்பன போன்ற சேவைகளைச் செய்ததற்காக அவரை இந்த அமைப்புப் பாராட்டியது.

குஜராத் அமைச்சர் பதவி விலகல் - கைது செய்யப் படக் கூடும்

குஜராத் அமைச்சரவையில் பதவி வகித்து வந்த அமைச்சர் மாயா பென் கோட்னானி அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.

2002ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரத்தை முன்னின்று நடத்தியதாகவும் அமைச்சர் பதவியைத் தவறாகப் பயன்படுத்தியதாகவும் இவர் மீது சிறப்புப் புலனாய்வுக் குழு வழக்குப் பதிவு செய்து, விசாரணைக்கு அழைத்தது. இரண்டு முறை அனுப்பப் பட்ட அறிவிக்கைக்கு எவ்வித பதிலும் அளிக்காததைத் தொடர்ந்து, இவர் தலைமறைவாகிவிட்டார் என்று சிறப்புப் புலனாய்வுக் குழு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து இவர் எந்நேரமும் கைது செய்யப்படக் கூடும் என்று கூறப்பட்டு வந்தது.

தனக்கு முன்பிணை வேண்டும் என்று கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் இவர் தொடர்ந்த வழக்கு நிராகரிக்கப் பட்டதை அடுத்து, இன்று அவர் தனது பதவியை ராஜிநாமா செய்தார். விரைவில் இவர் கைது செய்யப்படக் கூடும் என்று தகவல்கள் கூறுகின்றன.

தேமுதிகவுக்கு முரசு சின்னம்

தே.மு.தி.க.வுக்கு முரசு சின்னம் ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு்ள்ளது. தங்களுக்கு முரசு சின்னம் ஒதுக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், தே.மு.தி.க.வுக்கு முரசு சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்றும், அக்கட்சி போட்டியிடாத இடங்களில் இச்சின்னத்தை மற்றவர்களுக்கு ஒதுக்கலாம் என்றும் உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை தே.மு.தி.க. தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

கம்பம் ராமகிருஷ்ணன் இன்று திமுகவில் இணைகிறார்

மதிமுகவில் இருந்து விலகிய கம்பம் இராமகிருஷ்ணன் இன்று மாலை திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைய இருப்பதாக அறிவித்துள்ளார்.

மதிமுகவிலிருந்து அண்மையில் விலகிய கண்ணப்பனைத் தொடர்ந்து, இரமாகிருஷ்ணனும் கட்சியிலிருந்து விலகினார். தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் இவர் ராஜிநாமா செய்தார். இன்று காலை அவர் தென்மண்டல திமுக அமைப்பாளர் மு.க. அழகரியைச் சந்தித்துப் பேசியதாகத் தெரிகிறது.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!