ஹாமில்டன் நகரில் இன்று நடைபெற்ற நான்காவது ஒருதினப் போட்டியிலும் அபாரமாக வென்று இந்தியா தொடரைக் கைப்பற்றியுள்ளது.
முதலில் மட்டைப்பிடித்தாடிய நியூசிலாந்து 47 பந்துவீச்சு சுற்றுகளில் ஐந்து ஆட்டக்காரர்கள் இழப்புக்கு 270 ஓட்டங்கள் எடுத்தது. அந்த அணியின் மெக்கல்லம் அதிகபட்சமாக 77 ஓட்டங்களும் மெக்கிலஷான் 56 ஓட்டங்களும் எடுத்தனர். இந்தியா தரப்பில் ஜாஹிர்கான் ஒரு ஆட்டக்காரரையும் இஷாந்த் சர்மா இருவரையும், யுவராஜ் சிங், யூசுஃப் பதான் தலா ஒருவரையும் ஆட்டமிழக்கச் செய்தனர்.
அதன்பின் ஆடிய இந்தியா டக்வெர்த் லூயிஸ் முறைப்படி நிர்ணயிக்கப்பட்ட 201 ஓட்டங்களை 24 சுற்றுகளிலேயே எந்த இழப்புமின்றி பெற்று எளிதாக வென்றது. தொடக்க ஆட்டக்காரர்கள் கம்பீர் (67 பந்துகளில் 63 ஓட்டங்கள் - ஆறு நான்குகள்) சேவாக் - 74 பந்துகளிலேயே 125 ஓட்டங்கள் அதில் 14 நான்குகள் 6 ஆறுகள் பெற்று அசத்தினர். சேவாக்குக்கு இது 11வது ஒருநாள் சதமாகும். கம்பீர் தன் 15ஆவது அரைச்சதத்தைப் பெற்றார். 60 பந்துகளில் சதம் கடந்த சேவாக், இதே நியூசிலாந்துக்கெதிராக 1998ல் 62 பந்துகளில் அதிவேக சதமடித்திருந்த அஸ்ஹருத்தீனின் சாதனையை தகர்த்து ஒருதினப் போட்டிகளில் அதிவேக சதமடித்த இந்தியர் என்ற பெருமை பெற்றார்.