ஒரிசாவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பா.ஜ.க. கோரிக்கை
ஒரிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு அளித்து வந்த ஆதரவை பாரதீய ஜனதா கட்சி விலக்கிக் கொண்டுள்ளது. அங்கு குடியரசுத் தலைவரின் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 11 ஆண்டுகளாக ஒரிசாவில் பாரதீய ஜனதா கட்சியும் பிஜு ஜனதா தளமும் கூட்டணி அமைத்து வந்தன. எதிர்வரும் மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீட்டில் இவ்விரு கட்சிகளுக்கிடையே உடன்பாடு ஏற்படாமல் போனதை அடுத்து தங்கள் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று ஒரிசா முதல்வரும் பிஜு ஜனதா தளத் தலைவருமான நவீன் பட்நாயக் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அவரது அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாரதீய ஜனதா கட்சி விலக்கிக் கொண்டுள்ளது.
கூட்டணி முறிந்துவிட்டது என்று நவீன் பட்நாயக் அறிவித்ததைத் தொடர்ந்து அவரது அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்கிறோம். நவீன் பட்நாயக் உடனடியாக ராஜிநாமா செய்ய வேண்டும் என்றும் கோருகிறோம் என்று பா.ஜ.க. சட்ட சபைக் கட்சித் தலைவரும் மாநில தொழில் துறை அமைச்சருமான பிஸ்வபூஷன் ஹரிசந்திரன் பா.ஜ.க. மாநில தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஒரிசா மக்கள் நவீன் பட்நாயக்கிற்கோ அவரது பிஜு ஜனதா தளத்திற்கோ வாக்களிக்கவில்லை என்றும் தங்களது கூட்டணிக்கே வாக்களித்தனர் என்றும் கூறிய அவர், மாநிலத்தில் குடியரசுத்தலைவரின் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் கோரினார்.
இன்று மாநில ஆளுநரைச் சந்தித்து அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக பா.ஜ.க. கடிதம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
147 உறுப்பினர்களைக் கொண்ட ஒரிசா சட்டசபையில் பிஜு ஜனதா தளம் 61 உறுப்பினர்களையும் பா.ஜ.க. 30 உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.
0 comments