சம்பளக்கணக்கில் தவறிழைத்த மைக்ரோசாஃப்ட்
பொருளாதார நெருக்கடியில் உலகம் முழுதும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் திணறி போயுள்ளன. மைக்ரோசாப்ட் நிறுவனமும் 5,000 ஊழியர்களை அடுத்த 18 மாதங்களுக்குள் பணிநீக்கம் செய்யப் போவதாக அறிவித்திருந்தது. அதன் முதல்கட்டமாக கடந்த ஜனவரி 22ம் தேதி 1,400 ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கி அவர்களுக்கு இழப்பீடும் வழங்கியது. ஆனால் இழப்பீடு வழங்கியதில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் தவறு நடத்திருப்பது இப்போது தெரியவந்துள்ளது.
சில ஊழியர்களுக்கு பணம் அதிகமாகவும், சிலருக்குக் குறைவாகவும் கொடுக்கப்பட்டுள்ளது.
பணம் குறைவாகக் கொடுக்கப்பட்டவர்கள் நிர்வாகத்திடம் சென்று முறையிட்டுள்ளனர். ஆனால், சிலருக்கு பணம் அதிகம் அளிக்கப்பட்ட விவகாரம் நிறுவனத்துக்கு தெரிய வர பல நாட்களாகிவிட்டது. இதில் அந்நிறுவனத்தின் மனிதவள துறையும் அதிக அக்கறைக் காட்டவில்லை.
இந்நிலையில் சம்பள பட்டியல் தயாரிப்பதில் ஏற்பட்ட தவறுதலே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனம், சம்பளத் தொகை அதிகம் கொடுக்கப்பட்ட ஊழியர்களுக்கு பணத்தைத் திருப்பிக் கொடுக்கமாறு கடிதம் எழுதியுள்ளது.
இப்படி கடிதம் கிடைக்கப்பெற்ற ஒருவர் அதை ஊடகத்துக்கு வழங்கியதால் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பணம் அதிகம் கொடுக்கப்பட்ட ஊழியர்களுக்கு சராசரியாக ரூ. 2.2 லட்சம் கூடுதலாக கொடுத்துள்ளது.
முதலில் இது நிறுவனத்துக்கும், ஊழியர்களுக்கும் இடைப்பட்ட தனி விவகாரம் எனக் கூறிய மைக்ரோசாப்ட் பின்னர் தனது தவறுகளை ஒத்துக்கொண்டது.
இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பணம் அதிகம் பெற்ற ஊழியர்கள் அதை திருப்பிக் கொடுக்க வேண்டும். குறைவாகக் கொடுக்கப்பட்டவர்களுக்கு பணம் விரைவில் திருப்பி கொடுக்கப்படும். அவர்கள் அனைவரும் மனிதவள துறைத் தலைவர் லிசா பிரம்மலை நேரில் சந்திக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று கூறியுள்ளது.
0 comments