கல்விதான் வலிமையான நாடாக மாற்றும்: ப.சிதம்பரம்
கல்விதான் வலிமையான நாடாக மாற்றும்: ப.சிதம்பரம்
சிங்கம்புணரி, பிப். 22: கல்விதான் இந்தியாவை வலிமையான நாடாக மாற்றும். ஆகவே, கிராமப்புற மாணவர்கள் உயர்கல்வி வரை படிக்க வேண்டும் என, மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் ஞாயிற்றுக்கிழமை பாரத ஸ்டேட் வங்கியின் புதிய கிளையைத் திறந்துவைத்து, அவர் பேசியது:
இந்தியாவில் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது. ஆனால், 25 கோடி மக்கள் வறுமையில் வாழ்கின்றனர். வறுமையை ஒழிப்பதே அரசின் நோக்கம். நமது நாட்டில் வங்கிகளின் நிதி நிலை வலுவாக உள்ளது. அமெரிக்கா போன்ற நாடுகளில் வங்கிகள் மூடப்பட்டு வருகின்றன. அரசு வங்கிகள் தனியார் மயமாக்கப்படாது.
பாரத ஸ்டேட் வங்கி தமிழ்நாட்டில் 50 ஆயிரம் கோடி அளவுக்கு கடன்களை வழங்கியுள்ளது. நிதிநிலை சீராக இருப்பதால்தான், விவசாயக் கடன் ரூ. 60 ஆயிரம் கோடி ரத்து செய்யப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் மட்டும், கடந்த ஆண்டுவரை 72 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ. 57 கோடி பயிர் இன்சூரன்ஸ் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. 14 ஆயிரம் மாணவர்களுக்கு ரூ. 72 ஆயிரம் கோடி கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது. 34 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ. 66 கோடி அளவுக்கு விவசாயக் கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் இந்தியாவில் 53 லட்சம் ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களுக்கு உதவித் தொகையும், 11 லட்சம் பெண்களுக்கு உதவித் தொகையும் வழங்கப்பட்டுள்ளது என்றார் ப.சிதம்பரம்.
முன்னதாக, அமைச்சர் சிதம்பரம் 12 பேருக்கு கல்விக்கடன் உதவி, 17 பேருக்கு சுய உதவிக்குழுவினருக்கான கடன் உதவிகளை வழங்கினார்.
0 comments