சட்டசபையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளியேற்றம்
உயர்நீதி மன்றத்தில் நேற்று நடைபெற்ற மோதல் தொடர்பாக சட்டசபையில் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவர்கள் அவையிலிருந்து ஒட்டு மொத்தமாக வெளியேற்றப்பட்டனர். கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து, சென்னை உயர்நீதி மன்ற மோதல் விவகாரம் குறித்து விவாதிக்க சபாநாயகர் அனுமதி மறுத்ததால், தமிழக சட்டசபையில் கூச்சல் , குழப்பம் ஏற்பட்டது . சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில் நேற்று வழக்கறிஞர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த விவாதிக்க வேண்டும் எனவும், அதற்காக கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க வேண்டும் எனவும் , பா.ம.க., ம.தி.மு.க., அ.தி.மு.க., மற்றும் கம்யூ., கட்சியினர் சபாநாயகர் ஆவுடையப்பனிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து அவையில் கூச்சலும், குழப்பமும் நிலவியது. சபாநாயகர் குழப்பம் விளைவிப்பவர்களை வெளியேற்றும்படி உத்தரவிட்டார். அமளி காரணமாக சட்டசபையில் இருந்து அ.தி.மு.க., ம.தி.மு.க., இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட் கம்யூ., மற்றும் பா.ம.க., கட்சியினர் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் வெளியில் நின்று தி.மு.க., அரசு கலைக்கப்பட வேண்டும் எனவும், தாக்குதல் சம்பவத்துக்கு அரசு உரிய முறையில் பதிலளிக்க வேண்டும் எனவும் கோஷங்களை எழுப்பினார்கள். வழக்கறிஞர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வரலாறு காணாத கொடூர சம்பவம் எனவும் கூறினார்கள் .
0 comments