Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

பதவி விலகு- ஒரிஸா அரசுக்கு உச்சநீதிமன்றம் சூடு

Published on: செவ்வாய், 6 ஜனவரி, 2009 //
ஒரிஸாவில் சிறுபான்மையினரான கிருத்துவர்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்க இயலவில்லையெனில் பதவியை விட்டு விலகும்படி உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் மார்கண்டேய கட்ஜூ, பி.சதாசிவம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்தக் கண்டனத்தைத் தெரிவித்தது.

கிருத்துவர்கள் மீது வி.எச்.பி.யினர் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, பாதுகாப்பற்ற நிலையில் சிறுபான்மையினர் காடுகளுக்குள் ஒளிந்துள்ளனர் எனக் குறிப்பிட்ட பெஞ்ச் இதை அனுமதிக்க முடியாது என்று கூறியது.

திருமங்கலம் தொகுதியில் தேர்தல் முறைகேடுகள்

Published on: //
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் திருமங்கலம் தொகுதியின் வாக்காளர்களுக்கு பலவிதமான அன்பளிப்புகள் வழங்கப் படுகின்றன.

சில நாட்களுக்கு முன்பு அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுமே ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை வாக்காளர்களுக்கு விநியோகித்து வருவதாகக் கூறப்பட்டது. அந்த வரிசையில் இப்போது சாப்பாட்டு இலைக்குக் கீழ் ரூ 2,000 திருநெல்வேலி அல்வா என அன்பளிப்புகள் வழங்கப் படுவதாகத் தெரிகிறது.

அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக திருமங்கலம் தொகுதியில் பிரச்சாரம் செய்துவரும் திரு வைகோ, "சாப்பாட்டு இலைக்குக் கீழ் 2,000 ரூபாய் வைக்கப்பட்டு நூதன முறையில் பணம் பட்டுவாடா நடக்கிறது," என்று குற்றம் சாட்டியுள்ளார். "ஆயிரக்கணக்கில் ஆடு, கோழி கறி விருந்துகள் நடத்தப்படுகிறது. அந்த விருந்துகளில் இலைக்குக் கீழ் 2,000 ரூபாய் வைக்கப்படுகிறது. இது ஊழல் பணம் வெள்ளமாக ஓடுவதைக் காட்டுகிறது," என்று அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே திருமங்கலம் நகராட்சி 13-வது வார்டு முன்சீப் கோர்ட் ரோடு பகுதி, ராமச்சந்திரா தடாக ரோடு போன்ற பகுதியில் பெண்கள் தங்கள் வீட்டு வாசலில் சில பொருட்கள் வைக்கப் பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதை அவர்கள் எடுத்துப் பார்த்தபோது 'நூற்றுக்கு நூறு' என்று எழுதப்பட்ட பிளாஸ்டிக் உறைகளில் அரை கிலோ 'திருநெல்வேலி அல்வா' இருந்தது. அதனுடன் திமுக-வின் விளம்பர பிரசுரங்களும் இருந்தன. ஆனால் இதை யார் தங்கள் வீட்டிற்கு முன் போட்டார்கள் என்பது வாக்காளர்களுக்குத் தெரியவில்லை.

இந்நிலையில் 'இலவசத்தை கேலி செய்பவர்கள் எல்லாம் இன்று 'இலை' வசம் ஆனவர்கள்' என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியிருக்கிறார். கடந்த வியாழக்கிழமை அன்று தமிழக அரசின் சார்பில் இலவச பொங்கல் பொருட்கள் மற்றும் வேட்டி, சேலை வழங்குவதற்கான துவக்க விழாவில் அவர் பேசினார்.

"பொங்கலை முன்னிட்டு இலவசமாக பொங்கல் பொருட்கள் வழங்குவதை சிலர் கேலி செய்கின்றனர். இப்படி வழங்காவிட்டால் 'நீங்கள் மட்டும் சாப்பிடுகிறீர்கள். ஏழைகள் எதுவும் இல்லாமல் அல்லல்படுகிறார்களே' என்று கேட்பவர்களும் இருக்கின்றனர். இலவசமாகக் கொடுத்தால் நாடு உருப்படுமா? என்று கேட்பவர்களும் இருக்கின்றனர்" என்று கருணாநிதி கேள்வி எழுப்பினார்.

ஆனால் தேர்தல் ஆணையம் தடை விதித்ததைத் தொடர்ந்து திருமலங்கலம் தொகுதியில் மட்டும் பொங்கல் பொருட்கள் வழங்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் பிறந்த குழந்தை

Published on: //
நெதர்லாந்து நாட்டில் இருந்து அமெரிக்காவுக்குச் சென்றுக் கொண்டிருந்த விமானத்தில் நடுவானில் ஒரு குழந்தை பிறந்தது.

அந்த விமானத்தில் 124 பயணிகள் பயணம் செய்தனர். அதில் நிறைமாத கர்ப்பிணியும் ஒருவர். நடுவானத்தில் விமானம் பறந்த போது அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

அந்த விமானத்தில் பயணம் செய்துக் கொண்டிருந்த மருத்துவரும் மருத்துவ உதவியாளரும் அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்தனர். சுகப்பிரசவமாக பெண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்தபோது கனடா நாட்டு வானில் விமானம் பறந்துக் கொண்டிருந்தது. அதனால் அந்நாட்டு விதிமுறைப்படி கனடா குடியுரிமை வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

விடுதலைப் புலிகள் தலைவரை ஒப்படைக்க வேண்டும் - காங்கிரஸ் கட்சி கோரிக்கை

Published on: //
இலங்கையில் நடந்து வரும் இராணுவ நடவடிக்கையில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரோடு பிடிபட்டால் அவரை இலங்கை அரசு இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியாவின் ஆளும் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் சார்பாக பேசிய அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் திரு. வீரப்ப மொய்லி, இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கடந்த 1991 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காகவே பிரபாகரன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரியுள்ளதாக தெரிவித்தார்.

சேவை வரியில் மாற்றம்

Published on: //
சேவை வரியிலிருந்து விலக்கு, 10 ரூபாய் வரை டீசல் விலை குறைப்பு, இந்தியா முழுவதும் சரக்குந்துகள் செல்ல அனுமதி போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் சரக்குந்துகளின் உரிமையாளர்கள் திங்கள் கிழமை முதல் வேலை நிறுத்தத்தி்ல் ஈடுபட்டு வருகின்றனர். பெரிய சரக்குந்துகள் மற்றும் சிறிய சரக்குந்துகள் உட்பட சரக்குந்துகள் எதுவும் ஓடவில்லை. தமிழகத்தில் மட்டும் சுமார் 40 ஆயிரம் சிறிய சரக்குந்துகள் ஓடவில்லை என்றும் இதனால் ஓட்டுநர்கள், உதவியாளர்கள் உள்பட சுமார் 3 இலட்சம் பேர் வேலையிழந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இதனால் உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன. நாடு முழுவதும் பொங்கல் மற்றும் சங்கராந்தி போன்ற பண்டிகை நாட்கள் அண்மித்து வரும் நிலையில் பொதுமக்களுக்கு இதனால் பெரிதும் பாதிப்பு ஏற்படும்.

இன்று மத்திய அரசு அதிகாரிகளுடன் சரக்குந்து உரிமையாளர்கள் கூட்டமைப்புகளின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு எட்டப்படவில்லை என்றும் வேலை நிறுத்தம் தொடரும் என்றும் சரக்குந்து உரிமையாளர்களின் பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் சரக்குந்து உரிமையாளர்களின் கோரிக்கைகளில் ஒன்றான சேவை வரியை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. கிளியரிங் முகமையாளர் (Clearing & Forwarding), பணியாள் சேர்ப்பு முகமையாளர்கள் (Manpower Recruitment), சரக்கு கையாளுநர்கள் (Cargo Handling), சரக்கு காப்பாளர்கள் (Cargo storage and Ware housing) மற்றும் இது தொடர்பான சேவை நிறுவனங்களுக்கு சேவை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

எனினும் தங்களின் மற்ற கோரி்க்கைகளும் ஏற்கப்படும் வரை வேலை நிறுத்தம் தொடரும் என்று சரக்குந்து உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

ஸ்டாலின் மீது கிரிமினல் வழக்கு

Published on: //
திருமலங்கலம் தொகுதி வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததாக தி.மு.க. பொருளாளரும் அமைச்சருமான மு.க. ஸ்டாலின் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய மத்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுபோன்று அ.தி.மு.க.வைச் சேர்ந்த கோவை மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலளார் தண்டபாணி மீதும் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் திருமங்கலம் தொகுதி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் கைலிகள், சேலைகள், தங்க மோதிரம், கறி விருந்து போன்றவற்றை அளித்து வருவதாகப் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாக்காளர்களுக்கு 500 ரூபாய் இலஞ்சம் கொடுப்பது போன்ற காட்சிகள் தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பபட்டன. இதனைத் தொடர்ந்து மு.க. ஸ்டாலின் மீது வழக்குத் தொடர உத்தரவிட்டதுடன், இதுதொடர்பாக விளக்கம் கேட்டு தி.மு.க. வுக்கு அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவவிக்கின்றன.

இந்தியா அமெரிக்காவிடம் ஆயுதம் வாங்குகிறது

Published on: திங்கள், 5 ஜனவரி, 2009 //
அமெரிக்காவிடம் ரூ. 10 ஆயிரம் கோடி மதிப்பிலான ஆயுதங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டிருக்கிறது. 

இவ்வளவு பெருந்தொகைக்கு அமெரிக்காவிடம் இந்தியா ஆயுதங்களை வாங்குவது இதுவே முதல் முறையாகும். இந்த ஒப்பந்தத்தின்படி, இந்திய கடற்படைக்கு 8 போயிங் பி-81 ரக விமானங்கள் கிடைக்கும். 

இந்த ஒப்பந்தத்தில் இந்திய பாதுகாப்புத் துறை இணைச் செயலர் பிரீத்தி சுதனும் போயிங் நிறுவன அமெரிக்கப் பிரிவின் தலைவருமான விவேக் லாலும் கடந்த 1ஆம் தேதி கையெழுத்திட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

காங்கிரசுடனான உறவு அடுத்தமாதம் பரிசீலனை - பா.ம.க.

Published on: //
காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி குறித்து அடுத்த மாதம் பரிசீலனை செய்யப்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்த வேண்டும் என்று முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் தில்லி சென்று பிரதமரிடம் முறையிட்ட பிறகும் அதுபற்றி எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்கவில்லை. இதனால் தமிழர்கள் அனைவரும் வெட்கித் தலைகுனிந்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது' என்றார். 

இனியாவது, இலங்கையில் போரை நிறுத்த தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் கேட்டுக்கொண்டார். 

காங்கிரசுடனான கூட்டணி குறித்த அடுத்த மாதம் நடைபெற இருக்கும் பொதுக்குழுக்கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கஷ்மீர் முதல்வராக உமர் பதவியேற்றார்

Published on: //

ஜம்மு கஷ்மீர் மாநிலத்தின் 11ஆவது முதல் அமைச்சராக உமர் அப்துல்லா பதவியேற்றார். இவர் அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் மகன் ஆவார். 38 வயதாகும் உமர் ஜம்மு கஷ்மீர் மாநிலத்தின் மிக இளவயது முதல் அமைச்சர் என்ற பெருமையைப் பெறுகிறார். அம்மாநில ஆளுநர் வோரா இவருக்குப் பதவிப் பிரமானம் செய்து வைத்தார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் பரூக் அப்துல்லா ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

முன்னதாக கடந்த மாதம் நடைபெற்ற மாநிலத் தேர்தல்களில் எந்தக் கட்சிக்கும் பெரும்பாண்மை கிடைக்கவில்லை. அதிக இடங்களைப் பெற்ற ஜம்மு கஷ்மீர் மாநாட்டு கட்சி காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. கடந்த முறை காங்கிரஸ் மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து ஆட்சியமையத்தது.

மும்பையிலும் ஸ்காட்லாந்திலும் கல்வி பயின்ற உமர் 1998 ஆம் ஆண்டு அரசியலில் நுழைந்தார். மத்தியில் பா.ஜ.க. ஆட்சியின் போது வணிகத்துறை இணை அமைச்சராகவும் பின்னர் வெளியுறவுத் துறை துணை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.  கடந்த ஆண்டு அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தம் செய்து கொள்வதை எதிர்த்து கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்த்து மிக அழுத்தமாக வாதிட்டார். அன்றைய விவாதத்தில் இவருடைய பேச்சு  இவரை இந்தியர்களிடையே பிரபலப்படுத்தியது.

கடந்த மாதம் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறது மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரான முப்தி முகம்மது சயீதின் வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இது குறித்து பத்திரிகையாளர்கள் கேட்ட போது, நான் அவரைச் சந்திக்கக் கூடாதா? அவர் முதிர்ந்த அரசியல்வாதி. எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் அவரின் ஒத்துழைப்பைக் கோருவதற்காக சந்தித்தேன் என்று கூறி ஆச்சர்யப்படுத்தினார். மாநிலத்தின் மற்ற அரசியல் தலைவர்களையும் விரைவில் சந்திப்பேன் என்றும் கூறினார்.

ஹரியானா மாநிலத்தைச் சார்ந்த பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஒருவரின் மகளான பாயல் என்பவரை இவர் மணந்துள்ளார். இவரது சகோதரி சாரா காங்கிரஸ் கட்சியின் சச்சின் பைலட்டை மணந்துள்ளார்.

காஸா மீது இராசயண குண்டு வீச்சு

Published on: //


பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேலிய இராணுவம் வான் வழி மற்றும் தரை வழி தாக்குதல்களை தொடர்ந்து கொண்டுள்ளது. இந்த தாக்குதல்களில் இஸ்ரேல் இரசாயண குண்டுகளை வீசுவதாக தகவல்கள் கூறுகின்றன.

காஸா மருத்துவமனையில் காயமுற்றவர்களுக்கு சிகிச்சை அளித்துவரும் நார்வே நாட்டைச் சார்ந்த மருத்துவர் பிரஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "இஸ்ரேல் யுரேனியம் கலந்த குண்டுகளைப் பயன்படுத்துகிறது. இதற்கு எங்களிடம் ஆதாரம் இருக்கிறது" என்று கூறினார். அவர் மேலும் கூறுகையில், இந்த குண்டுபட்டு ஒருவர் காயமுற்று உயிர் பிழைத்தாலும் அவருக்கு புற்றுநோய் வர வாய்ப்பிருக்கிறது என்றார். இஸ்ரேலிய மருத்துவர்கள் தங்கள் நாட்டு அரசிடம் இத்தகைய குண்டுகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று கூறவேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். உயிரிழப்பவர்கள் மற்றும் காயமுறுபவர்கள் பொதுமக்கள்தான் அதிகம் என்றும் அவர் கூறினார்.

காஸவைச் சுற்றிலும் இஸ்ரேலிய இராணுவம்

Published on: ஞாயிறு, 4 ஜனவரி, 2009 //
பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீதான இஸ்ரேலின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று நள்ளிரவு காஸா எல்லைக்குள் புகுந்து தரைவழித் தாக்குதல்களைத் தொடுத்து வருகிறது. காஸாவினுள் புகுந்த உடன் காஸா பகுதியிலிருந்த பெட்ரோல் நிலையங்களைக் குண்டு வீசி அழித்தது. இன்று அதிகாலையில் மசூதி ஒன்றின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதுவரை 480க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. காஸாவே நோக்கி பல பகுதிகளிலிருந்து இராணுவம் முன்னேறி வருகிறது.

இதனிடையே ஹமாஸ் படையினர் இராணுவத்தினர் கடுமையாகப் போராடி வருகின்றன. இரண்டு இஸ்ரேலிய வீரர்கள் உயிருடன் பிடிக்கப் பட்டுள்ளதாகவும் இதுவரை 10க்கும் அதிகமான இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 30க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  இஸ்ரேலிய தரப்பில் இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளதாக மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.

சிதம்பரம் அமெரிக்கா நோக்கி..!

Published on: //
மும்பை தீவிரவாதத் தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தானை மையமாகக் கொண்டு இயங்கும் தீவிரவாத இயக்கங்களைக் குறித்த ஆதாரங்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அடுத்த வாரம் அமெரிக்கா செல்ல இருக்கிறார்.அவர் செல்லும் தேதி இதுவரை நிச்சயிக்கப்படவில்லை.

அதனைக் குறித்துச் சிதம்பரம் கூறும்பொழுது, "அடுத்த வாரம் அமெரிக்கா செல்ல இருக்கும் தேதி விரைவில் நிச்சயிக்கப்படும். மும்பை தீவிரவாதத் தாக்குதல் தொடர்பான மேலும் ஆதாரங்களை வெளியுறவு துறை அமைச்சகம் திரட்டி வருகிறது. இது தொடர்பாக அமெரிக்கத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவோம்" எனக் கூறினார்.

கடந்த தினம், மும்பை தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தான் தீவிரவாதிகளை இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டிய கட்டாயம் இல்லை எனவும் அவர்களைப் பாகிஸ்தானில் வைத்தே விசாரணை செய்யலாம் எனவும் அமெரிக்கா கூறியிருந்தது.

காஸாவினுள் இஸ்ரேலிய இராணுவம் நுழைந்தது

Published on: //
கடந்த 8 நாட்களாக பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேலிய இராணுவம் வான்வழித் தாக்குதலைத் தொடுத்து வந்தது. கூடவே காஸாவின் எல்லை அருகே தரைப்படையையும் குவித்து வந்தது. இந்நிலையில் சற்று நேரம் கிடைத்த தகவல்படி இஸ்ரேலிய இராணுவத்தின் தரைப்படை காஸாவினுள் நுழைந்தது. உள்ளூர் நேரம் இரவு பத்து மணி அளவிலும் தாக்குதல் நடைபெற்று வருகிறது.

இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் பலர் கொல்லப் பட்டுள்ளதாக ஹமாஸ் இயக்கம் அறிவித்துள்ளது. காஸா மீதான இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் கடுமையான விலை கொடுக்க வேண்டி வரும் என்றும் ஹமாஸ் இயக்கம் எச்சரித்துள்ளது.

இன்று மாலை நிலவரப்படி இஸ்ரேலியத் தாக்குதலால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 460 ஆக இருந்தது. காஸா பகுதியிலிருநு்து வீசப்பட்ட ராக்கெட் தாக்குதலில் உயிரிழந்த இஸ்ரேலியர்களின் எண்ணிக்கை 6 ஆக இருந்தது.

இஸ்ரேலிய துறைமுகம் மீது ராக்கெட் தாக்குதல்

Published on: சனி, 3 ஜனவரி, 2009 //
இஸ்ரேலின் இரண்டாவது பெரிய துறைமுகமான அஷ்துத் என்னும் துறைமுகத்தின் மீது ஹமாஸ் ராக்கெட்களை வீசி தாக்குதல் நடத்தியது. காஸாவின் எல்லையிலிருந்து 30 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த துறைமுகம் உள்ளது. குறைந்தது 10 ராக்கெட்கள் வீசப்பட்டதாகவும் அதில ஒன்று துறைமுகத்தில் உள்ள 4 மாடி கட்டிடத்தின் மீது விழுந்ததாகவும் இருவர் சிறு காயமுற்றதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

கடந்த 8 நாட்களில் காஸா பகுதியிலிருந்து 500 ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. எட்டாவது நாளான இன்று இஸ்ரேல் பள்ளிக்கூடம் உள்பட பல்வேறு இடங்களைக் குறிவைத்து தாக்கியது என்றும் குறைந்த 4பேர் உயிரிழந்தனர் என்றும் தகவல்கள் கூறுகின்றன. இதனையும் சேர்த்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 439. காயமுற்றோர் 2,280 பேர்.

டெல்லியில் கடும் பனி மூட்டம்

Published on: //
டெல்லியில் கடுமையான பனி மூட்டம் நிலவுகிறது. இதனால் இரயில் போக்குவரத்தும் மற்றும் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. இன்று அதிகாலையில் டெல்லி விமான நிலையத்திலிருந்து சென்னை, மும்பை, ஹைதரபாத், ஜெய்பூர், திருவனந்தபுரம் போன்ற நகரங்களுக்குச் செல்லவிருந்த 19 உள்நாட்டு விமான சேவை ரத்து செய்யப்பட்டது. மேலும் 31 உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமான சேவை தாமதமாகி உள்ளது. ஓடுபாதை தெளிவாகத் தெரியாத காரணத்தால் டெல்லியில் தரை இறங்க வேண்டிய 3 விமானங்கள் மும்பைக்கு திருப்பிவிடப்பட்டதாக டெல்லி விமான நிலைய தகவல்கள் கூறுகின்றன.

காலை 10 மணிக்கு மேல் நிலைமை ஓரளவு சரியானதாகக் கூறப்படுகிறது. இதனால் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.

முஸ்லிம் குடும்பம் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டது

Published on: //
ஜனவரி முதல் தேதியன்று வாஷிங்டனிலிருந்து புளோரிடா செல்லவிருந்து விமானத்திலிருந்து 9 பேர் கொண்ட முஸ்லிம் குடும்பம் சந்தேகத்தின் பேரில் இறக்கிவிடப்பட்டது. இந்தக் குழுவைச் சார்ந்த காஷிப்  இர்பான் என்பவர் கூறுகையில், தன்னுடைய சகோதரரும் அவரது மனைவியும் தங்களுக்குப் பாதுகாப்பான இருக்கை கிடைத்ததாகப் பேசிக் கொண்டிருந்தனர். "என் ஜன்னலுக்கு அருகில்தான் ஜெட் இருக்கிறது" என்று அவர்களில் ஒருவர் கூறியதைக் கேட்ட சக பயணிகள் விமானப் பணிப்பெண்ணிடம் கூற, விமானத்திலிருந்த 104 பயணிகளும் இறக்கப்பட்டனர்.

FBIயின் விசாரணைக்குப் பின் அவர்கள் குற்றமற்றவர்கள் என்று கூறிய போதிலும், ஏர் ட்ரான் எனும் விமான நிறுவனம் 9 பேர் கொண்ட முஸ்லிம் குடும்பத்தை மட்டும் ஏற்றிச் செல்ல மறுத்துவிட்டது. இந்தச் செயலை விமான நிறுவனத்தின் செய்தியாளர் நியாயப் படுத்தினார். அவர்கள் விமானத்தினுள் இருந்து இவ்வாறு பேசிக் கொண்டிருந்திருக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.

மருத்துவரான இர்பான் கூறுகையில், தங்கள் தோற்றம் காரணமாகவே இவ்வாறு நடத்தப்பட்டோம் என்றார். அவரது சகோதரரோ, அவர்கள் மிகவும் பயந்தவர்களாக இருக்கிறார்கள். இது மிகவும் கவலையான ஒன்று என்று கூறினார்.

தெற்காசிய இனத்தவரான அமெரிக்க குடியுரிமை பெற்ற அந்த முஸ்லிம் குடும்பம் வேறு விமானத்தில் சென்றது.

இஸ்ரேல் மீது ராக்கெட் வீச்சு

Published on: //
பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீதான இஸ்ரேலின் தொடர்தாக்குதலின் எட்டாவது நாளான இன்று இஸ்ரேலிய போர் விமானங்கள் 25 இடங்களைக் குறிவைத்து தாக்கின. இதில் ஹமாஸ் இயக்கத்தின் கமாண்டர் கொல்லப்பட்டார். மேலும் காஸா நகரத்தையும் மற்ற பகுதிகளையம் இணைக்கும் பாலம் சேதமடைந்தது.

இந்நிலையில் இஸ்ரேலை நோக்கி காஸா பகுதியிலிருந்து ஹமாஸின் இராணுவப் பிரிவான கஸ்ஸாம் படையினர் இஸ்ரேலை நோக்கி ராக்கெட் தாக்குதலை இன்றும் தொடர்ந்துள்ளனர். 8 ராக்கெட்டுகள் வீசப்பட்டதாகவும் அவை இஸ்ரேலின் நெகேவ் பகுதியில் உள்ள அஷ்கலன் எனும் நகரின் கட்டிடம் ஒன்றில் விழுந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன. சேதவிவரம் குறித்த தகவல் இதுவரை இல்லை.

காஸா மீது தரைவழி தாக்குதல் தொடுக்க அனுமதி

Published on: //
பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேலின் தாக்குதல் இன்று எட்டாவது நாளை எட்டியுள்ளது. இதுவரை 436க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். 2250க்கும் அதிகமானோர் காயமுற்றனர். இந்நிலையில் கடந்த 4 நாட்களாக காஸாவின் எல்லையின் இஸ்ரேல் தரைப்படையினரை அனுப்பி வந்தது. எந்நேரமும் காஸாவினுள் புகுந்து தரைவழி தாக்குதல் நடத்தி காஸா பகுதியை மீண்டும் ஆக்ரமிக்கப்படும் என்று தெரிகிறது.

காஸா பகுதியில் இருந்த அமெரிக்கா, ரஷ்யா, துருக்கி மற்றும் நார்வே ஆகிய நாடுகளைச் சார்ந்த சுமார் 400 பேர் காஸாவை விட்டு வெளியேற இஸ்ரேல் அனுமதித்தது. இஸ்ரேலிய பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆகியோர் தரைவழி தாக்குதல் குறித்து நேற்று விவாதித்ததாகவும் தரைவழி தாக்குதலுக்கு அப்போது அனுமதி வழங்கப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் மற்றும் உளவுத் துறை அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில் காஸாவின் மீது தரைவழி தாக்குதல் நடத்தக் கூடாது என்று எகிப்து வெளியுறவுத் துறை அமைச்சர் இஸ்ரேலிய அமைச்சருக்கு கடிதம் எழுதியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இஸ்ரேலுக்கு ஜெயலலிதா கண்டனம்

Published on: //
பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலை இந்தியா கண்டிக்க வேண்டும் என்று ஜெயலலிதா கூறியிருக்கிறார்.  இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுசெயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பாலஸ்தீனத்தில் காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தும் கண்மூடித்தனமான ராணுவத் தாக்குதலால் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமானோர் வீடுகளையும், உடமைகளையும் இழந்து நிர்க்கதியாக இருக்கிறார்கள்.  இஸ்ரேல் - பாலஸ்தீனம் போராட்டத்தில் மேலும் ஒரு மோசமான செயல் நடந்துள்ளது. என்னதான் ஆத்திரமூட்டும் செயல் நடந்தாலும் இந்த மாதிரியான அறிவீனமான ஆயுத தாக்குதலை நடத்தி இருக்கக் கூடாது. இது இஸ்ரேல் நாட்டின் மீது சர்வதேச நாடுகளிடம் மோசமான எண்ணத்தை உருவாக்கி இருக்கிறது.  எந்த ஒரு நாட்டையும் மற்றவர் ரத்தத்தின் மீது நிர்மானிக்க முடியாது. இஸ்ரேலின் இந்த ஈவு, இரக்கமற்ற தாக்குதலை யாராலும் நியாயப்படுத்த முடியாது. எந்த மதமும் இந்த செயலை ஆதரிக்காது.  இஸ்ரேலின் இந்த மோசமான தாக்குதலையும், அப்பாவி மக்களை கொல்வதையும் இந்திய அரசு கண்டிக்க வேண்டும். அத்துடன் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனிய மக்களுக்கு இந்தியா உதவ வேண்டும். உணவு, உடைகள், மருந்து போன்ற நிவாரண பொருட்களை உடனே அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு ஜெயலலிதா கூறியிருக்கிறார்.

பாலஸ்தீனில் மசூதி உள்பட 20 இடங்களில் தாக்குதல்

Published on: வெள்ளி, 2 ஜனவரி, 2009 //
பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் கடந்த ஒரு வாரமாக விமான தாக்குதல்களைத் தொடர்ந்து கொண்டுள்ளது. அதன் கடற்படை கப்பலிலிருந்தும் தாக்குதல் தொடுக்கப் பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இதுவரை 428 பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். 2100க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொல்லப் பட்டோரில் ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர்களில் ஒருவரான நிசார் ரய்யான் மற்றும் அவரது குடும்பத்தினரும் அடங்குவர்.

ஏழாம் நாளான இன்று காஸா பகுதியில் உள்ள மசூதி ஒன்றும் ஹமாஸ் தலைவர்களின் வீடுகளும் குறிவைத்து தாக்கப் பட்டன. தாக்கப்பட்ட மசூதியில் ஹமாஸ் ஆதரவாளர்கள் பதுங்கியிருந்ததாக இஸ்ரேலிய இராணுவம் கூறியது.

இந்நிலையில் இன்று ஹமாஸ் காஸா பகுதியிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணை தாக்குதலைத் தொடுத்தது. சுமார் 40 கி.மீ.தூரம் சென்ற இந்த ஏவுகணைகள் இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் ஒரு நகரில் விழுந்ததாகவும் இதில் உயிர் சேதம் எதுவும் இல்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!