Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

இந்தியா அமெரிக்காவிடம் ஆயுதம் வாங்குகிறது

Published on: திங்கள், 5 ஜனவரி, 2009 //
அமெரிக்காவிடம் ரூ. 10 ஆயிரம் கோடி மதிப்பிலான ஆயுதங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டிருக்கிறது. 

இவ்வளவு பெருந்தொகைக்கு அமெரிக்காவிடம் இந்தியா ஆயுதங்களை வாங்குவது இதுவே முதல் முறையாகும். இந்த ஒப்பந்தத்தின்படி, இந்திய கடற்படைக்கு 8 போயிங் பி-81 ரக விமானங்கள் கிடைக்கும். 

இந்த ஒப்பந்தத்தில் இந்திய பாதுகாப்புத் துறை இணைச் செயலர் பிரீத்தி சுதனும் போயிங் நிறுவன அமெரிக்கப் பிரிவின் தலைவருமான விவேக் லாலும் கடந்த 1ஆம் தேதி கையெழுத்திட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

காங்கிரசுடனான உறவு அடுத்தமாதம் பரிசீலனை - பா.ம.க.

Published on: //
காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி குறித்து அடுத்த மாதம் பரிசீலனை செய்யப்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்த வேண்டும் என்று முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் தில்லி சென்று பிரதமரிடம் முறையிட்ட பிறகும் அதுபற்றி எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்கவில்லை. இதனால் தமிழர்கள் அனைவரும் வெட்கித் தலைகுனிந்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது' என்றார். 

இனியாவது, இலங்கையில் போரை நிறுத்த தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் கேட்டுக்கொண்டார். 

காங்கிரசுடனான கூட்டணி குறித்த அடுத்த மாதம் நடைபெற இருக்கும் பொதுக்குழுக்கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கஷ்மீர் முதல்வராக உமர் பதவியேற்றார்

Published on: //

ஜம்மு கஷ்மீர் மாநிலத்தின் 11ஆவது முதல் அமைச்சராக உமர் அப்துல்லா பதவியேற்றார். இவர் அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் மகன் ஆவார். 38 வயதாகும் உமர் ஜம்மு கஷ்மீர் மாநிலத்தின் மிக இளவயது முதல் அமைச்சர் என்ற பெருமையைப் பெறுகிறார். அம்மாநில ஆளுநர் வோரா இவருக்குப் பதவிப் பிரமானம் செய்து வைத்தார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் பரூக் அப்துல்லா ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

முன்னதாக கடந்த மாதம் நடைபெற்ற மாநிலத் தேர்தல்களில் எந்தக் கட்சிக்கும் பெரும்பாண்மை கிடைக்கவில்லை. அதிக இடங்களைப் பெற்ற ஜம்மு கஷ்மீர் மாநாட்டு கட்சி காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. கடந்த முறை காங்கிரஸ் மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து ஆட்சியமையத்தது.

மும்பையிலும் ஸ்காட்லாந்திலும் கல்வி பயின்ற உமர் 1998 ஆம் ஆண்டு அரசியலில் நுழைந்தார். மத்தியில் பா.ஜ.க. ஆட்சியின் போது வணிகத்துறை இணை அமைச்சராகவும் பின்னர் வெளியுறவுத் துறை துணை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.  கடந்த ஆண்டு அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தம் செய்து கொள்வதை எதிர்த்து கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்த்து மிக அழுத்தமாக வாதிட்டார். அன்றைய விவாதத்தில் இவருடைய பேச்சு  இவரை இந்தியர்களிடையே பிரபலப்படுத்தியது.

கடந்த மாதம் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறது மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரான முப்தி முகம்மது சயீதின் வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இது குறித்து பத்திரிகையாளர்கள் கேட்ட போது, நான் அவரைச் சந்திக்கக் கூடாதா? அவர் முதிர்ந்த அரசியல்வாதி. எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் அவரின் ஒத்துழைப்பைக் கோருவதற்காக சந்தித்தேன் என்று கூறி ஆச்சர்யப்படுத்தினார். மாநிலத்தின் மற்ற அரசியல் தலைவர்களையும் விரைவில் சந்திப்பேன் என்றும் கூறினார்.

ஹரியானா மாநிலத்தைச் சார்ந்த பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஒருவரின் மகளான பாயல் என்பவரை இவர் மணந்துள்ளார். இவரது சகோதரி சாரா காங்கிரஸ் கட்சியின் சச்சின் பைலட்டை மணந்துள்ளார்.

காஸா மீது இராசயண குண்டு வீச்சு

Published on: //


பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேலிய இராணுவம் வான் வழி மற்றும் தரை வழி தாக்குதல்களை தொடர்ந்து கொண்டுள்ளது. இந்த தாக்குதல்களில் இஸ்ரேல் இரசாயண குண்டுகளை வீசுவதாக தகவல்கள் கூறுகின்றன.

காஸா மருத்துவமனையில் காயமுற்றவர்களுக்கு சிகிச்சை அளித்துவரும் நார்வே நாட்டைச் சார்ந்த மருத்துவர் பிரஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "இஸ்ரேல் யுரேனியம் கலந்த குண்டுகளைப் பயன்படுத்துகிறது. இதற்கு எங்களிடம் ஆதாரம் இருக்கிறது" என்று கூறினார். அவர் மேலும் கூறுகையில், இந்த குண்டுபட்டு ஒருவர் காயமுற்று உயிர் பிழைத்தாலும் அவருக்கு புற்றுநோய் வர வாய்ப்பிருக்கிறது என்றார். இஸ்ரேலிய மருத்துவர்கள் தங்கள் நாட்டு அரசிடம் இத்தகைய குண்டுகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று கூறவேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். உயிரிழப்பவர்கள் மற்றும் காயமுறுபவர்கள் பொதுமக்கள்தான் அதிகம் என்றும் அவர் கூறினார்.

காஸவைச் சுற்றிலும் இஸ்ரேலிய இராணுவம்

Published on: ஞாயிறு, 4 ஜனவரி, 2009 //
பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீதான இஸ்ரேலின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று நள்ளிரவு காஸா எல்லைக்குள் புகுந்து தரைவழித் தாக்குதல்களைத் தொடுத்து வருகிறது. காஸாவினுள் புகுந்த உடன் காஸா பகுதியிலிருந்த பெட்ரோல் நிலையங்களைக் குண்டு வீசி அழித்தது. இன்று அதிகாலையில் மசூதி ஒன்றின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதுவரை 480க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. காஸாவே நோக்கி பல பகுதிகளிலிருந்து இராணுவம் முன்னேறி வருகிறது.

இதனிடையே ஹமாஸ் படையினர் இராணுவத்தினர் கடுமையாகப் போராடி வருகின்றன. இரண்டு இஸ்ரேலிய வீரர்கள் உயிருடன் பிடிக்கப் பட்டுள்ளதாகவும் இதுவரை 10க்கும் அதிகமான இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 30க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  இஸ்ரேலிய தரப்பில் இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளதாக மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.

சிதம்பரம் அமெரிக்கா நோக்கி..!

Published on: //
மும்பை தீவிரவாதத் தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தானை மையமாகக் கொண்டு இயங்கும் தீவிரவாத இயக்கங்களைக் குறித்த ஆதாரங்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அடுத்த வாரம் அமெரிக்கா செல்ல இருக்கிறார்.அவர் செல்லும் தேதி இதுவரை நிச்சயிக்கப்படவில்லை.

அதனைக் குறித்துச் சிதம்பரம் கூறும்பொழுது, "அடுத்த வாரம் அமெரிக்கா செல்ல இருக்கும் தேதி விரைவில் நிச்சயிக்கப்படும். மும்பை தீவிரவாதத் தாக்குதல் தொடர்பான மேலும் ஆதாரங்களை வெளியுறவு துறை அமைச்சகம் திரட்டி வருகிறது. இது தொடர்பாக அமெரிக்கத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவோம்" எனக் கூறினார்.

கடந்த தினம், மும்பை தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தான் தீவிரவாதிகளை இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டிய கட்டாயம் இல்லை எனவும் அவர்களைப் பாகிஸ்தானில் வைத்தே விசாரணை செய்யலாம் எனவும் அமெரிக்கா கூறியிருந்தது.

காஸாவினுள் இஸ்ரேலிய இராணுவம் நுழைந்தது

Published on: //
கடந்த 8 நாட்களாக பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேலிய இராணுவம் வான்வழித் தாக்குதலைத் தொடுத்து வந்தது. கூடவே காஸாவின் எல்லை அருகே தரைப்படையையும் குவித்து வந்தது. இந்நிலையில் சற்று நேரம் கிடைத்த தகவல்படி இஸ்ரேலிய இராணுவத்தின் தரைப்படை காஸாவினுள் நுழைந்தது. உள்ளூர் நேரம் இரவு பத்து மணி அளவிலும் தாக்குதல் நடைபெற்று வருகிறது.

இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் பலர் கொல்லப் பட்டுள்ளதாக ஹமாஸ் இயக்கம் அறிவித்துள்ளது. காஸா மீதான இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் கடுமையான விலை கொடுக்க வேண்டி வரும் என்றும் ஹமாஸ் இயக்கம் எச்சரித்துள்ளது.

இன்று மாலை நிலவரப்படி இஸ்ரேலியத் தாக்குதலால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 460 ஆக இருந்தது. காஸா பகுதியிலிருநு்து வீசப்பட்ட ராக்கெட் தாக்குதலில் உயிரிழந்த இஸ்ரேலியர்களின் எண்ணிக்கை 6 ஆக இருந்தது.

இஸ்ரேலிய துறைமுகம் மீது ராக்கெட் தாக்குதல்

Published on: சனி, 3 ஜனவரி, 2009 //
இஸ்ரேலின் இரண்டாவது பெரிய துறைமுகமான அஷ்துத் என்னும் துறைமுகத்தின் மீது ஹமாஸ் ராக்கெட்களை வீசி தாக்குதல் நடத்தியது. காஸாவின் எல்லையிலிருந்து 30 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த துறைமுகம் உள்ளது. குறைந்தது 10 ராக்கெட்கள் வீசப்பட்டதாகவும் அதில ஒன்று துறைமுகத்தில் உள்ள 4 மாடி கட்டிடத்தின் மீது விழுந்ததாகவும் இருவர் சிறு காயமுற்றதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

கடந்த 8 நாட்களில் காஸா பகுதியிலிருந்து 500 ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. எட்டாவது நாளான இன்று இஸ்ரேல் பள்ளிக்கூடம் உள்பட பல்வேறு இடங்களைக் குறிவைத்து தாக்கியது என்றும் குறைந்த 4பேர் உயிரிழந்தனர் என்றும் தகவல்கள் கூறுகின்றன. இதனையும் சேர்த்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 439. காயமுற்றோர் 2,280 பேர்.

டெல்லியில் கடும் பனி மூட்டம்

Published on: //
டெல்லியில் கடுமையான பனி மூட்டம் நிலவுகிறது. இதனால் இரயில் போக்குவரத்தும் மற்றும் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. இன்று அதிகாலையில் டெல்லி விமான நிலையத்திலிருந்து சென்னை, மும்பை, ஹைதரபாத், ஜெய்பூர், திருவனந்தபுரம் போன்ற நகரங்களுக்குச் செல்லவிருந்த 19 உள்நாட்டு விமான சேவை ரத்து செய்யப்பட்டது. மேலும் 31 உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமான சேவை தாமதமாகி உள்ளது. ஓடுபாதை தெளிவாகத் தெரியாத காரணத்தால் டெல்லியில் தரை இறங்க வேண்டிய 3 விமானங்கள் மும்பைக்கு திருப்பிவிடப்பட்டதாக டெல்லி விமான நிலைய தகவல்கள் கூறுகின்றன.

காலை 10 மணிக்கு மேல் நிலைமை ஓரளவு சரியானதாகக் கூறப்படுகிறது. இதனால் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.

முஸ்லிம் குடும்பம் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டது

Published on: //
ஜனவரி முதல் தேதியன்று வாஷிங்டனிலிருந்து புளோரிடா செல்லவிருந்து விமானத்திலிருந்து 9 பேர் கொண்ட முஸ்லிம் குடும்பம் சந்தேகத்தின் பேரில் இறக்கிவிடப்பட்டது. இந்தக் குழுவைச் சார்ந்த காஷிப்  இர்பான் என்பவர் கூறுகையில், தன்னுடைய சகோதரரும் அவரது மனைவியும் தங்களுக்குப் பாதுகாப்பான இருக்கை கிடைத்ததாகப் பேசிக் கொண்டிருந்தனர். "என் ஜன்னலுக்கு அருகில்தான் ஜெட் இருக்கிறது" என்று அவர்களில் ஒருவர் கூறியதைக் கேட்ட சக பயணிகள் விமானப் பணிப்பெண்ணிடம் கூற, விமானத்திலிருந்த 104 பயணிகளும் இறக்கப்பட்டனர்.

FBIயின் விசாரணைக்குப் பின் அவர்கள் குற்றமற்றவர்கள் என்று கூறிய போதிலும், ஏர் ட்ரான் எனும் விமான நிறுவனம் 9 பேர் கொண்ட முஸ்லிம் குடும்பத்தை மட்டும் ஏற்றிச் செல்ல மறுத்துவிட்டது. இந்தச் செயலை விமான நிறுவனத்தின் செய்தியாளர் நியாயப் படுத்தினார். அவர்கள் விமானத்தினுள் இருந்து இவ்வாறு பேசிக் கொண்டிருந்திருக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.

மருத்துவரான இர்பான் கூறுகையில், தங்கள் தோற்றம் காரணமாகவே இவ்வாறு நடத்தப்பட்டோம் என்றார். அவரது சகோதரரோ, அவர்கள் மிகவும் பயந்தவர்களாக இருக்கிறார்கள். இது மிகவும் கவலையான ஒன்று என்று கூறினார்.

தெற்காசிய இனத்தவரான அமெரிக்க குடியுரிமை பெற்ற அந்த முஸ்லிம் குடும்பம் வேறு விமானத்தில் சென்றது.

இஸ்ரேல் மீது ராக்கெட் வீச்சு

Published on: //
பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீதான இஸ்ரேலின் தொடர்தாக்குதலின் எட்டாவது நாளான இன்று இஸ்ரேலிய போர் விமானங்கள் 25 இடங்களைக் குறிவைத்து தாக்கின. இதில் ஹமாஸ் இயக்கத்தின் கமாண்டர் கொல்லப்பட்டார். மேலும் காஸா நகரத்தையும் மற்ற பகுதிகளையம் இணைக்கும் பாலம் சேதமடைந்தது.

இந்நிலையில் இஸ்ரேலை நோக்கி காஸா பகுதியிலிருந்து ஹமாஸின் இராணுவப் பிரிவான கஸ்ஸாம் படையினர் இஸ்ரேலை நோக்கி ராக்கெட் தாக்குதலை இன்றும் தொடர்ந்துள்ளனர். 8 ராக்கெட்டுகள் வீசப்பட்டதாகவும் அவை இஸ்ரேலின் நெகேவ் பகுதியில் உள்ள அஷ்கலன் எனும் நகரின் கட்டிடம் ஒன்றில் விழுந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன. சேதவிவரம் குறித்த தகவல் இதுவரை இல்லை.

காஸா மீது தரைவழி தாக்குதல் தொடுக்க அனுமதி

Published on: //
பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேலின் தாக்குதல் இன்று எட்டாவது நாளை எட்டியுள்ளது. இதுவரை 436க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். 2250க்கும் அதிகமானோர் காயமுற்றனர். இந்நிலையில் கடந்த 4 நாட்களாக காஸாவின் எல்லையின் இஸ்ரேல் தரைப்படையினரை அனுப்பி வந்தது. எந்நேரமும் காஸாவினுள் புகுந்து தரைவழி தாக்குதல் நடத்தி காஸா பகுதியை மீண்டும் ஆக்ரமிக்கப்படும் என்று தெரிகிறது.

காஸா பகுதியில் இருந்த அமெரிக்கா, ரஷ்யா, துருக்கி மற்றும் நார்வே ஆகிய நாடுகளைச் சார்ந்த சுமார் 400 பேர் காஸாவை விட்டு வெளியேற இஸ்ரேல் அனுமதித்தது. இஸ்ரேலிய பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆகியோர் தரைவழி தாக்குதல் குறித்து நேற்று விவாதித்ததாகவும் தரைவழி தாக்குதலுக்கு அப்போது அனுமதி வழங்கப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் மற்றும் உளவுத் துறை அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில் காஸாவின் மீது தரைவழி தாக்குதல் நடத்தக் கூடாது என்று எகிப்து வெளியுறவுத் துறை அமைச்சர் இஸ்ரேலிய அமைச்சருக்கு கடிதம் எழுதியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இஸ்ரேலுக்கு ஜெயலலிதா கண்டனம்

Published on: //
பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலை இந்தியா கண்டிக்க வேண்டும் என்று ஜெயலலிதா கூறியிருக்கிறார்.  இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுசெயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பாலஸ்தீனத்தில் காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தும் கண்மூடித்தனமான ராணுவத் தாக்குதலால் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமானோர் வீடுகளையும், உடமைகளையும் இழந்து நிர்க்கதியாக இருக்கிறார்கள்.  இஸ்ரேல் - பாலஸ்தீனம் போராட்டத்தில் மேலும் ஒரு மோசமான செயல் நடந்துள்ளது. என்னதான் ஆத்திரமூட்டும் செயல் நடந்தாலும் இந்த மாதிரியான அறிவீனமான ஆயுத தாக்குதலை நடத்தி இருக்கக் கூடாது. இது இஸ்ரேல் நாட்டின் மீது சர்வதேச நாடுகளிடம் மோசமான எண்ணத்தை உருவாக்கி இருக்கிறது.  எந்த ஒரு நாட்டையும் மற்றவர் ரத்தத்தின் மீது நிர்மானிக்க முடியாது. இஸ்ரேலின் இந்த ஈவு, இரக்கமற்ற தாக்குதலை யாராலும் நியாயப்படுத்த முடியாது. எந்த மதமும் இந்த செயலை ஆதரிக்காது.  இஸ்ரேலின் இந்த மோசமான தாக்குதலையும், அப்பாவி மக்களை கொல்வதையும் இந்திய அரசு கண்டிக்க வேண்டும். அத்துடன் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனிய மக்களுக்கு இந்தியா உதவ வேண்டும். உணவு, உடைகள், மருந்து போன்ற நிவாரண பொருட்களை உடனே அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு ஜெயலலிதா கூறியிருக்கிறார்.

பாலஸ்தீனில் மசூதி உள்பட 20 இடங்களில் தாக்குதல்

Published on: வெள்ளி, 2 ஜனவரி, 2009 //
பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் கடந்த ஒரு வாரமாக விமான தாக்குதல்களைத் தொடர்ந்து கொண்டுள்ளது. அதன் கடற்படை கப்பலிலிருந்தும் தாக்குதல் தொடுக்கப் பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இதுவரை 428 பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். 2100க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொல்லப் பட்டோரில் ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர்களில் ஒருவரான நிசார் ரய்யான் மற்றும் அவரது குடும்பத்தினரும் அடங்குவர்.

ஏழாம் நாளான இன்று காஸா பகுதியில் உள்ள மசூதி ஒன்றும் ஹமாஸ் தலைவர்களின் வீடுகளும் குறிவைத்து தாக்கப் பட்டன. தாக்கப்பட்ட மசூதியில் ஹமாஸ் ஆதரவாளர்கள் பதுங்கியிருந்ததாக இஸ்ரேலிய இராணுவம் கூறியது.

இந்நிலையில் இன்று ஹமாஸ் காஸா பகுதியிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணை தாக்குதலைத் தொடுத்தது. சுமார் 40 கி.மீ.தூரம் சென்ற இந்த ஏவுகணைகள் இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் ஒரு நகரில் விழுந்ததாகவும் இதில் உயிர் சேதம் எதுவும் இல்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.

கஷ்மீரில் துப்பாக்கிச் சன்டை

Published on: //
ஜம்மு கஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் பகுதியில் இராணுவத்தினருக்கும் பிரிவினைவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சன்டை நடந்து வருகிறது என்று தகவல்கள் கூறுகின்றன. இதில் ராகேஷ்குமார், ஏ.பி. சிங் ஆகிய இராணுவ வீரர்கள் உயிரிழிந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரிவினைவாதிகள் தரப்பிலான சேதம் குறித்து இதுவரை தகவல் இல்லை.

கிளிநொச்சியில் இலங்கை இராணுவம்?

Published on: //
விடுதலைப் புலிகளின் தலைநகரான கிளிநொச்சியில் இலங்கை இராணுவம் நுழைந்துவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இன்று காலை இலங்கை இராணுவத்தினர் கிளிநொச்சியில் நுழைந்து கொண்டுள்ளதாக இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முன்னதாக வியாழனன்று கிளிநொச்சியின் அருகாமையில் உள்ள பரந்தன் எனும் நகரை இராணுவத்தினர் கைப்பற்றி விட்டதாகவும் 48 மணி நேரத்திற்குள் கிளிநொச்சியைக் கைப்பற்றிவிடுவோம் என்றும் இலங்கை பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் கூறியிருந்தன.

பாகிஸ்தானில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்.

Published on: //
தெற்கு பாகிஸ்தானிலுள்ள பழங்குடியினர் வாழும் பகுதியான வசீரிஸ்தானில் அமெரிக்கப்படைகள் தாக்குதல் நடத்தியது. இதில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிலுள்ள இராணுவமையத்திலிருந்து வஸீரிஸ்தானிலுள்ள காரிக்கோடு கிராமத்தின் மீது அமெரிக்கப்படையினர் மூன்று ஏவுகணைகளை வீசினர்.பாகிஸ்தானின் எல்லைப்பகுதிகளில் அமெரிக்கத்தாக்குதல் இதற்கு முன்னரும் நடந்துள்ளது. அமெரிக்கப்படைகள் பாகிஸ்தானிற்குள் அத்துமீறி நடத்தும் இத்தகைய தாக்குதல்களைப் பாகிஸ்தான் கடுமையாக கண்டித்திருந்தது.

இந்நிலையில் மீண்டும் இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது.

ஹமாஸ் இயக்க பொறுப்பாளர் கொல்லப்பட்டார்

Published on: வியாழன், 1 ஜனவரி, 2009 //
ஹமாஸ் இயக்கத்தின் முக்கியப் பொறுப்பாளர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் காஸா பகுதியின் மீது கடந்த 6 நாட்களாகக் கடுமையான தாக்குதல்களைத் தொடுத்து வருகிறது. இதுவரை 400க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 2000க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

உலக நாடுகள் மற்றும் உலக நாடுகளின் பல்வேறு அமைப்புகளும் தாக்குதலை நிறுத்தக் கோரியும் அவர்களின் கோரிக்கையை ஏற்காமல் நாள்தோறும் பாலஸ்தீனியர்களைக் கொன்று குவிக்கிறது.

தாக்குதலின் 6ஆம் நாளான இன்று பாலஸ்தீனத்தின் ஆளும் கட்சியான ஹமாஸ் இயக்கத்தின் முக்கியப் பொறுப்பாளரான நிஜார் ரயான் (வயது 52) என்பவர் கொல்லப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இவர் 5 பேர் அடங்கிய ஹமாஸ் இயக்கத்தின் உயர்மட்டக் குழுவின் உறுப்பினர் ஆவார். இவர் தங்கியிருந்த 8 மாடிக் கட்டிடத்தின் மீது வீசப்பட்டக் குண்டில் இவரும் மற்ற 12 பேரும் கொல்லப் பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன. கொல்லப்பட்டவர்களில் இவரது இரு மனைவிகள் மற்றும் நான்கு குழந்தைகளும் அடங்குவர் என்று தகவல்கள் கூறுகின்றன.

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானம் தோல்வி

Published on: //
பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேல் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனைக் கண்டிக்கும் விதமாக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் லிபியா நேற்று ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்தது. அரபு லீக் என்றறியப்படும் 22 அரபு நாடுகள் சார்பாக இந்த தீர்மானத்தை முன்மொழிவாக லிபியா கூறியது.

பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பு நாடான அமெரிக்கா தனது வீட்டோ எனும் மறுப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி இஸ்ரேலுக்கு எதிரான இந்த தீர்மானம் நிறைவேற்றப்படாமல் தடுத்தது. "பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கத்தைக் கண்டிக்காமல் இஸ்ரேலை மட்டும் கண்டிப்பதாக இந்த தீர்மானம் இருந்ததால் இதனை எதிர்ப்பதாக" அமெரிக்க கூறியது.

ஆப்கானில் 30 காவலர்கள் கொலை

Published on: //
ஆப்கானிஸ்தானின் வடமேற்குப் பகுதியான ஹேல்மன்ட் மாநிலத்தில் தாலிபான் ஆதரவாளர்கள் 30 காவலர்களைச் சுட்டுக் கொன்றதாகவும் அவர்களில் ஒருவர் பெண் என்றும் உள்ளூர் அரசு அதிகாரி கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிகழ்வில் 2 தாலிபான் ஆதரவாளர்கள் கொல்லப் பட்டதாகவும் நான்கு பேர் காயமுற்றதாகவும் தாலிபான் செய்தி தொடர்பாளர் காரி யூசுப் அஹமதி கூறினார். 32 காவலர்கள் கொல்லப்பட்டதாக அவர் கூறினார். கொல்லப்பட்ட காவலர்கள் மாவட்ட அரசு அதிகாரியின் காவலர்கள் எனவும் அவர் கூறினார்.

முன்னதாக புதன் கிழமையன்று இங்கிலாந்து இராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். 2008 ஆம் ஆண்டு கொல்லப்பட்ட இங்கிலாந்து இராணுவ வீரர்களின் எண்ணிக்கை 137 ஆகும். 2001 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆப்கானில் கடந்த ஆண்டு வெளிநாட்டுப் படையினர் அதிகமாக உயிரிழந்திருக்கின்றனர்.

2009 மத்தியில் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் கூடுதல் அமெரிக்கப் படையினர் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப் படுவார்கள் என்று அமெரிக்க கடந்த மாதம் அறிவித்தது நினைவு கூரத்தக்கது.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!