Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

கம்யூனிஸ்ட் தொண்டர் குண்டுவீசி கொலை!

Published on: புதன், 31 டிசம்பர், 2008 //

கேரள மாநிலம் கண்ணூரிலுள்ள தலச்சேரியில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் வீசிய குண்டில் சி.பி.எம் தொண்டர் கொல்லப்பட்டார். பானூர் பகுதியில் பாஜக - சி.பி.எம்மினரிடையே நடந்த மோதலின் தொடர்ச்சியாக பழிவாங்கும் நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.


குண்டு வீச்சில் கொல்லப்பட்டவர், சி.பி.எம் திருவங்காடு தலாயி லோக்கல் கமிட்டி செயலாளரான மதேஷ் ஆவார். சம்பவத்தைத் தொடர்ந்து பானூர், சொக்லி, கொளவன்னூர், கதிரூர், தலச்சேரி, மட்டன்னூர் ஆகிய காவல்துறை எல்லைகளுக்குள் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சி.பி.எம் தொண்டர் கொலையைக் கண்டித்து தலச்சேரி மற்றும் அதனைச் சுற்றிய பஞ்சாயத்துப் பகுதிகளில் நாளைக் கடையடைப்புப் போராட்டத்திற்கு சி.பி.எம் அழைப்பு விடுத்துள்ளது.

கேரளம்: பாஜக - சி.பி.எம் மோதல்!

Published on: //
கேரளத்திலுள்ள கண்ணூர் மாவட்டத்தில் பா.ஜ.க மற்றும் சி.பி.எம் கட்சிகளுக்கு இடையே நடந்த மோதலில் நான்கு பேருக்கு வெட்டு.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம், பா.ஜ.க மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே நடக்கும் அரசியல் மோதல்களுக்குப் பெயர் பெற்ற மாவட்டமாகும். இங்கு அடிக்கடி இவ்விரு கட்சியினருக்கும் இடையே மோதல் நடப்பது வழக்கம்.

இதற்காகவே இவ்விரு கட்சியினரும் வெடிகுண்டு, வாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களை ஆங்காங்கே சேகரித்து வைப்பர். கடந்த இரு மாதங்களில் இம்மாவட்டத்திலிருந்து பலமுறை குவியல் குவியலாக கேரள காவல்துறை வெடிகுண்டுகளைக் கைப்பற்றியிருந்தது.

இந்நிலையில் நேற்றும் கண்ணூர் மாவட்டத்திலுள்ள பானூரில் இவ்விரு கட்சியினருக்குமிடையே மொதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் பயங்கர ஆயுதங்களைக் கொன்டு தாக்கிக் கொண்டனர்.

இதில் நாங்கு பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. ஆர்.எஸ்.எஸைச் சேர்ந்த நாணு, ரவி ஆகியவர்களுக்குப் பலத்தக் காயம் ஏற்பட்டது.

300 பேர் கடலில் மூழ்கி இறந்ததாக சந்தேகம்!

Published on: //
சட்டத்துக்கு மீறி கடல்மார்க்கமாக மலேசியாவில் குடியேற முயன்ற முன்னூறுக்கு மேற்பட்டோர் மூழ்கி இறந்ததாக சந்தேகம் எழுந்துள்ளது. இதுவரை 10 பேரில் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அந்தமான் தீவுகளுக்கருகில் இவர்கள் பிரயாணம் செய்திருந்த படகு சென்றுக் கொண்டிருந்த வேளையில், திடீரென அடித்த பெருங்காற்றில் நிலைகுலைந்தப் படகு கவிழ்ந்ததால் இச்சம்பவம் ஏற்பட்டதாக எல்லைப் படையுடன் தொடர்புடைய வட்டாரங்கள் உறுதி செய்துள்ளது.

இதுவரை 105 பேரைக் காப்பாற்றியிருப்பினும் 300க்கு மேற்பட்டோர் காணாமல் போயுள்ளது உறுதியாகியுள்ளது. இவர்களில் 10 பேரில் உடல்களைச் சமீபத்தில் உள்ள பாறைகூட்டங்களுக்கு இடையிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

படகில் பயணம் செய்திருந்தவர்களில் பகளாதேஷ் மற்றும் மியான்மரில் உள்ளர்களே அதிகம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்பெயின் கார் குண்டு வெடித்தது

Published on: //
ஸ்பெயினின் பாஸ்கு பகுதியில் இன்று உள்ளூர் நேரம் காலை 11 மணி அளவில் கார் குண்டு வெடித்தது. பாஸ்கு பகுதியில் உள்ள பில்பாவு எனும் நகரில் அமைந்துள்ள EITB என்ற தொலைக் காட்சி நிறுவனத்தின் தலைமையகம் அருகில் இச்சம்பவம் நடைபெற்றது.

பெரும்பாலும் ஊடகத்துறையினரை குறிவைத்தே இத்தகைய சம்பவங்கள் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. 1968 முதல் 825 பேர் கொல்லப்பட்டதாகவும் இதற்கு ETA குழுவே காரணம் என்றும் கூறப்படுகிறது.

ஸ்பெயினின் பாஸ்கு பகுதியில் ETA எனும் ஆயுதம் ஏந்திய குழு தனி நாடு கேட்டு பேராடி வருகிறது. இந்தக் குழுவை ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா தீவிரவாதக் குழு என்று அறிவித்திருக்கிறது. இதன் உறுப்பினர்கள் அண்மையில் பிரான்சில் கைது செய்யப்பட்டனர்.

கைபரில் தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் தாக்குதல்

Published on: //
பாகிஸ்தானிலிருந்து ஆப்கானில் இருக்கும் அமெரிக்க கூட்டுப் படையினருக்கு உணவு மற்றும் இராணுவத் தளவாடங்கள் எடுத்துச் செல்லும் முக்கிய வழியான கைபர் பாதையில் தாலிபான் ஆதரவாளர்கள் தங்கியிருப்பதாகக் கருதப்படுகிறது. இவ்வழியே பொருள்களை எடுத்துச் செல்லும் வாகனங்களைக் குறிவைத்து தாக்குதல்களை மேற்கொண்டனர். கடந்த வாரத்தில் சுமார் 200க்கும் அதிகமான வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதாக செய்திகள் வெளியாயின. இதனை அடுத்து நேற்று பாகிஸ்தான் கைபர் பாதையை மூடியது.

இன்று பாகிஸ்தான் இராணுவத்திற்குச் சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்கள் அந்தப் பகுதியில் மறைந்து இருப்பதாகக் கருதப்படும் தாலிபான் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் அவர்கள் திருப்பித் தாக்கவில்லை என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.

ஆப்கனில் உள்ள நேட்டோ படையின் செய்தித் தொடர்பாளர் பாகிஸ்தானின் இச்செயலை வரவேற்றுள்ளதாக ராய்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

36 ஆயிரம் கோடி கருப்பு பணம்?

Published on: //
புனேயைச் சேர்ந்த தொழில் அதிபர் ஹசன் அலி கான் மீது 36 ஆயிரம் கோடி கருப்புப் பணம் வைத்திருந்த ஏன்று விளக்கம் கேட்டு அந்நியச் செலாவணி கட்டுப்பாடு சட்டத்தின் (FEMA) படி அறிக்கை (Show cause Notice) அனுப்பப் பட்டுள்ளது. ஹசன் அலி தற்போது போலி பாஸ்போட்டு வழக்கின் சிறையில் இருக்கிறார்.  இந்த அறிக்கையை அமலக்கப் பிரிவின் சிறப்பு இயக்குநர் நாகேஸ்வர ராவ் ஹசன் அலியின் புனே மற்றும் மும்பை வீடுகளில் இன்று அளித்தார்.

இவரது வீட்டை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் 2007 ஆம் ஆண்டு சோதனை இட்டபோது UBS என்ற சுவிஸ் வங்கியில்  8,000.45 மில்லியன் அமெரிக்க டாலர் இருப்பு வைத்திருந்ததை அறிந்தனர்.

அவருக்கெதிரான இக்குற்றச் சாட்டு நிரூபிக்கப் பட்டால் அந்நியச் செலாவணி கட்டுப்பாடு சட்டத்தின் (FEMA) படி அதிகபட்சமாக சுமார் 1.08 இலட்சம் கோடிகள் வரை அபராதம் விதிக்க முடியும்.

மாலேகாவ்: பாண்டே ஒப்புதல் வாக்குமூலம்!

Published on: //
மாலேகாவ் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையதாகக் கைதுசெய்யப்பட்ட தயானந்த் பாண்டே, குற்றம் செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.

மாலேகாவ் குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்துக் கொண்டிருந்த மும்பை மும்பை தீவிரவாத தடுப்புப் படை தலைவர் கார்கரே, மும்பை தீவிரவாதத் தாக்குதலினிடையே கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மாலேகாவ் வழக்கில் தொய்வு ஏற்பட்டிருந்தது.

தற்பொழுது மீண்டும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மேலும் இரு இராணுவ உயர் அதிகாரிகளையும் மகாத்மா காந்தியைக் கொலை செய்த கோட்சேயின் சகோதரர் மகளையும் மும்பை தீவிரவாத தடுப்புப் படை விசாரணை செய்திருந்தது.

இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடையவராக கைது செய்யப்பட்ட இந்து அமைப்பு ஒன்றின் தலைவர் தயானந்த் பாண்டே, குண்டுவெடிப்பில் தனக்கு தொடர்புள்ளதை ஒப்புக்கொண்டதாக தீவிரவாதத் தடுப்புப்படை அடிஷனல் கமிஷனர் பரம்பீர் சிங் வெளிப்படுத்தியுள்ளார்.

தயானத் பாண்டேயின் வாக்குமூலத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொள்வதற்கான அனைத்து முறைகளையும் பேணியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

5வது நாளாகத் தொடரும் இஸ்ரேலிய தாக்குதல்

Published on: //

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியின் மீது இஸ்ரேல் ஐந்தாவது நாளாக இன்றும் தாக்குதலைத் தொடர்ந்துள்ளது. பாலஸ்தீனப் பிரதமர் இஸ்மாயில் ஹனியாவின் அலுவலகம் மற்றும் சுரங்கப் பாதைகள் மீதும் குண்டுகளைப் பொழிந்தது. இதுவரை 400க்கும் அதிகமானோர் கொல்லப் பட்டுள்ளதாகவும் சுமார் 1750 பேர் காயமுற்றள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஹமாஸ் இஸ்ரேல் மீதான ராக்கெட் தாக்குதலை நிறுத்தாவிட்டால் காஸா மீதாக தாக்குதல் வாரக்கணக்கில் நீடிக்கும் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இஸ்ரேலின் தாக்குதலுக்கு உலக நாடுகள் மற்றும் உலக நாடுகளின் அமைப்புகள் பலவும் கண்டனம் தெரிவித்ததுடன் தாக்குதலை உடனே நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் இரு தரப்பும் தாக்குதலை உடனே நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நேற்று கூடிய ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு, வளைகுடா வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு மற்றும் Quartet எனப்படும் அமரிக்கா, ஐரோப்பிய யூனியன், இரஷ்யா, ஐ.நா. சபை போன்றவையும் தாக்குதலை உடனே நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளன.

48 மணி நேர தாக்குதல் நிறுத்த திட்டம் ஒன்றை பிரெஞ்சு வெளியுறவுத் துறை அமைச்சர் கூறியதாகவும் அதனை இஸ்ரேலிய அரசு பரிசீலித்தது வருவதாகவும் செய்திகள் கூறுகின்றன. இது தொடர்பாக விவாதிக்க இஸ்ரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் லிவ்னி நாளை பிரான்சு செல்கிறார்.

இலங்கை தமிழர் சென்னையில் கைது

Published on: //
இலங்கையைச் சேர்ந்த திலீபன் (வயது 30) என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார். விடுதலைப் புலிகளுக்கு தொலை தொடர்பு சாதனங்களைக் கடத்த முயன்றதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த இவர் இதற்கு முன் சுவிட்சர்லாந்தில் பணி புரிந்து இலங்கை திரும்பியவர் என்றும் காவல் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஞாயிற்றுக் கிழமையன்று ஆண்டனி (வயது 32) என்பவர் சென்னையில் கைது செய்யப் பட்டார். அவரிடமிருந்து சாட்டிலைட் போன்கள், GPS கருவிகள், அமோனியம் நிட்ரேட் போன்றவை கைப்பற்றப் பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

"தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ள முடியாது!" - கலிதா ஜியா அறிவிப்பு

Published on: //
பங்களாதேஷில் அண்மையில் நடந்த தேர்தலில் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் பங்களாதேஷ் தேசிய கட்சி படு தோல்வி அடைந்தது. தனது கட்சித் தலைவர்களுடன் அவசரக் கூட்டம் நடத்திய ஜியா, 'தேர்தல் முடிகள் ஏற்றுக் கொள்ளத் தக்கவை அல்ல' என்று தேசிய தொலைக்காட்சியில் அறிவித்தார்.

'இந்தத் தேர்தல் முடிவுகளை மக்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதிக பட்ச எண்ணிக்கையில் வாக்குகள் பதிவு செய்யப் பட்டதாக தேர்தல் கமிஷன் அறிவித்திருப்பதும் நம்பத் தகுந்தது அல்ல. வாக்குப் பதிவில் தில்லுமுல்லுகள் நடந்திக்க வாய்ப்பிருக்கிறது' என்றும் கலிதா ஜியா தெரிவித்தார்.

300 உறுப்பினர்களைக் கொண்ட பங்களாதேஷ் பாராளுமன்றத்தில் கலிதா ஜியாவின் கட்சி 29 இடங்களை மட்டுமே வென்றிருக்கிறது. ஷேக் ஹஸினா தலைமையிலான அவாமி லீக் கட்சி 230 இடங்களை வென்று ஆட்சி அமைக்கிறது.

பா.ஜ.க. அலுவலகத்தில் பணம் மாயம்?

Published on: செவ்வாய், 30 டிசம்பர், 2008 //
பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தில் சுமார் 2 கோடிக்கும் அதிகமான பணத்தைக் காணவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. கட்சியின் தலைமை அலுவலகத்தில் உள்ளவர்கள் எவரேனும் இதனை தவறான வழியில் உபயோகித்திருக்க வேண்டும் அல்லது எடுத்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

கட்சியின் பல்வேறு மாநிலக் கிளைகளிலிருந்தும் அனுப்பப்பட்ட இந்த தொகை தலைமை அலுவலகத்திற்கு வந்து சேரும் முன்போ அல்லது வந்த பின்போ தொலைந்து விட்டது என்று அதன் தலைமை நிலைய அலுவலர்கள் கூறியதாக பி.டி.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

இதனிடையே பத்திரிகைகளில் வெளியாகியுள்ள செய்திகள் முற்றிலும் உண்மையானவை அல்ல; அவை மிகைப்படுத்தப் பட்ட செய்திகளே என்று பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் கூறியுள்ளார். பா.ஜ.கவின் பொருளாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராமதாஸ் அகர்வால் டெல்லி விரைந்துள்ளார் என்றும், கட்சியின் அனைத்து கணக்குகளும் சரி பார்க்கப்படும் என்றும் கூறப்பட்டது.

கைபர் வழியை பாகிஸ்தான் மூடியது

Published on: //

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க மற்றும் நேட்டோ படையினருக்கு உணவு மற்றும் இராணுவ தளவாடங்கள் எடுத்துச் செல்லப்படும் பாகிஸ்தானின் கைபர் வழியை பாகிஸ்தான் தற்காலிகமாக மூடியுள்ளது. 70 சதவீதத்திற்கும் அதிகமான பொருள்கள் இந்த வழியாகவே அனுப்பப்பட்டு வந்தன.

கடந்த சில நாட்களாக நேட்டோ படையினருக்கு தளவாடங்கள் எடுத்துச் செல்லப்படும் வாகணங்கள் மீது தாலிபான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி அவற்றை எரித்தது. சில சமயங்களில் பொருள்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களைக் கடத்திச் சென்று விடுகின்றனர். கடந்த செப்டம்பர் மாதம் முதல் தாலிபான் ஆதரவளார்கள் இத்தகைய வாகனங்களைக் குறி வைத்து தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத் தக்கது.

செப்டம்பர் மாதம் அமெரிக்க கூட்டுப்படையினர் பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து சில நாட்கள் பாகிஸ்தான் இந்தப் பாதையை சில நாட்களுக்கு மூடி வைத்திருந்தது. வாகன ஓட்டுநர்கள் தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று கூறி சில நாட்கள் அந்தப் பகுதி வழியே செல்வதைத் தவிர்த்தனர்.

கைபர் வழி அடைக்கப்பட்டதால் பொருள்கள் வருவதற்கு எந்தப் பாதிப்பும் இல்லை என நேட்டை படை அதிகாரிகள் கூறினர்.

இஸ்ரேல் மீது ராக்கெட் வீச்சு

Published on: //
கடந்த நான்கு நாட்களாக பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் அரசு அலுவலகங்கள், சிறைக் கூடம், தொலைக்காட்சி நிலையம், மசூதி என்று பல்வேறு பகுதிகளிலும் இஸ்ரேல் குண்டுகளை வீசி வருகிறது. இதில் 350க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 1000க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில் நேற்று ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேலின் மீது ராக்கெட்களை வீசினர். இவை நீண்டதூரம் சென்று இஸ்ரேலின் உள்பகுதியைத் தாக்கியதாகவும் இதில் இராணுவ வீரர் ஒருவர் உள்பட நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. காஸா பகுதியிலிருந்து 23 கி.மீ.தூரத்தில் உள்ள அஷ்துத் எனும் ஊரின் பேருந்து நிலையம் அருகே ஹமாஸ் வீசிய ராக்கெட் விழுந்து ஒரு பெண்மணி இற்ந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

இரு தரப்பினரும் சன்டையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஐ.நா. சபை பொதுச் செயலாளர் பான் கி மூன் இரு தரப்பினருக்கும் தம்முடைய கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

காஸா பகுதி குறித்து விவாதிக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத் துறை அமைச்சார்கள் இன்று பாரிசில் கூடுகின்றனர். காஸா பகுதிக்கு மனிதாபிமான உதவிகள் அனுப்புவது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

4ஆம் நாளாகத் தொடரும் இஸ்ரேலியத் தாக்குதல்

Published on: //

பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேல் நான்காவது நாளாக இன்றும் தாக்குதல்களைத் தொடர்ந்துள்ளது. இன்றைய வான் வெளித் தாக்குதல்களில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. இதுவரை 350க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் குறைந்தது 62 பேர் குழந்தைகள் மற்றும் பெண்கள் என்று ஐ.நா. அதிகாரி ஒருவர் கூறினார். காஸாவைச் சுற்றிலும் இஸ்ரேலிய இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

பாலஸ்தீன மருத்துவமனைகளில் மருந்து பற்றாக்குறை மற்றும் இடப் பற்றாக்குறை காரணமாக பெருங்குழப்பம் நிலவுவதாக செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது. இதனையடுத்து காஸாவிலிருந்து மருத்துவ உதவி பெறுவதற்காகவும் உதவிப் பொருள்களை எடுத்துச் செல்லவும் எகிப்து ரபாஹ் எல்லைப் பகுதியில் அனுமதி அளிக்கிறது.

வங்க தேசத்தில் அவாமி லீக் மீண்டும் ஆட்சியமைக்கிறது

Published on: //
ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று (திங்கள் கிழமை) நடைபெற்ற வங்கதேசத் தேர்தலில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. 

எத்தனை இடங்கள் கிடைத்தன என்று இறுதி செய்யப்பட்ட தகவல்கள் கிடைக்கவில்லை என்றாலும், அவாமி லீகும் அவரது கூட்டணிக் கட்சிகளும் மொத்தமுள்ள 300 இடங்களில் 255 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இறுதியான தகவல் எனில் வங்க தேச வரலாற்றில் இத்தகைய வெற்றி இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ் தேர்தல்: ஷேக் ஹஸினாவுக்கு வெற்றி வாய்ப்பு!

Published on: //
பங்களாதேஷில் சென்ற திங்களன்று (டிச 29) நடந்த தேர்தலில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹஸினாவின் அவாமி லீக் கட்சி வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பதாக இன்னும் உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன. ஷேக் ஹஸினாவின் கட்சி கலிதா ஜியாவின் பங்களாதேஷ் தேசிய கட்சியை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெல்லும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.

ஷேக் ஹஸினா 1996லிருந்து 2001 வரை பங்களாதேஷின் பிரதமராக இருந்தவர். இவர் பங்களாதேஷின் முதல் அதிபரான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் மகளாவார்.

நேற்று அறிவிக்கப்பட்ட முடிவுகளில் அவாமி லீக் கட்சி ஆட்சி அமைக்கத் தேவையான குறைந்த பட்சமான 151 இடங்களை வென்று மேலும் பல இடங்களில் வெற்று பெற்று வருகிறது.

பங்களாதேஷில் கடந்த 2007 ஜனவரியில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு சுமார் இரண்டு ஆண்டுகளாக ராணுவ ஆட்சி நடைபெற்று வந்தது. சென்ற டிசம்பர் 17 அன்றுதான் அது விலக்கிக் கொள்ளப்பட்டு தேர்தல் அறிவிக்கப் பட்டது.

எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் தேர்தல் சுமுகமாக நடந்ததாக பத்திரிக்கைத் தகவல்கள் கூறுகின்றன. 2500 வெளிநாட்டுப் பார்வையாளர்கள் உட்பட சுமார் 2 லட்சம் பேர் இத்தேர்தலை மேற்பார்வையிட்டனர். 70 சதவிகித வாக்காளர்கள் இதில் வாக்களித்தனர்.

காஸாவை நோக்கி இஸ்ரேலிய இராணுவம்

Published on: திங்கள், 29 டிசம்பர், 2008 //

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேலின் தாக்குதல் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கிறது. இதுவரை விமான தாக்குதல் மட்டுமே நடத்தி வந்த நிலையில் காஸாவின் எல்லை அருகே இஸ்ரேலிய இராணுவம் குவிக்கப்பட்டு வருகிறது.


இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் லிவ்னி கூறுகையில், "இந்த போர் ஹமாஸ் மற்றும் ஆயுதம் ஏந்திய பல்வேறு குழுக்களுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில்தான். ஆனால் போரில் பொதுமக்களும் கொல்லப்படுவது தவிர்க்க முடியாதது" என்று கூறினார். காஸா பகுதியை ஆக்ரமிப்பது எங்கள் நோக்கம் இல்லை என்றும் அவர் கூறினார்.


இதுவரை 300க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 5 சதவீதத்தினர் குழந்தைகள் எனவும் மொத்தம் 51 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் ஐ.நா. அதிகாரி ஒருவர் கூறினார்.

கச்சா எண்ணெய் விலை உயருகிறது

Published on: //
கடந்த ஜூலை மாதம் 147 ஆக அமெரிக்க டாலராக இருந்த கச்சா எண்ணெய் மளமளவெனக் குறைந்து 40 டாலருக்கும் குறைவாக 37 டாலர்களாக கடந்த வாரம் இருந்து வந்தது. இந்நிலையில் இரண்டு நாட்களாக பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் விமானம் மற்றும் தரைவழி தாக்குதல்கள் நடத்துவதைத் தொடர்ந்து, இன்று சிங்கை நேரம் மதியம் 1 மணி அளவில் கச்சா எண்ணெயின் விலை 5.6 சதவீதம் அதிகரித்து 39.82 டாலர் என்ற அளவில் உள்ளது.

காஸாவின் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலின் எதிரொலியாகவே விலை உயர்ந்துள்ளதாக கென் ஹசகவே என்ற ஜப்பானிய கச்சா எண்ணெய் தரகர் கூறியதாக ராய்டர் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஜம்மு கஷ்மீர் - மீண்டும் கூட்டணி ஆட்சி

Published on: //
ஜம்மு கஷ்மீர் மாநிலத்தின் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பாண்மை கிடைக்கவில்லை. தேசிய மாநட்டுக் கட்சி தனிப் பெரும் கட்சியாக உள்ளது. காங்கிரசுடன் சேர்ந்து கூட்டணி அமைப்போம் என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் உமர் அப்துல்லாஹ் கூறினார்.



காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று பிரதமர் மற்றும் காங்கிரஸின் உயர் மட்டத் தலைவர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இன்று மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி தேசிய மாநாட்டுக் கட்சியின் கோரிக்கையை ஏற்று கூட்டணி அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



கட்சிகள் பெற்ற இடங்கள் வருமாறு: (அடைப்புக்குறிக்குள் 2002ஆம் ஆண்டில் பெற்ற இடங்கள்)



தேசிய மாநாட்டுக் கட்சி : 28 (28)

காங்கிரஸ் : 17 (20)

மக்கள் ஜனநாயகக் கட்சி : 21 (16)

பாரதிய ஜனதா கட்சி : 11 (1)

மற்றவர்கள் : 10 (22)

இராணுவத்தினரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டன

Published on: //




சனிக்கிழமை விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்தினருக்கும் நடைபெற்ற சன்டையில் 50க்கும் அதிகமான இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது. அவர்களிடமிருந்து ஆயுதங்களும் கைப்பற்றப் பட்டன. கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை விடுதலைப் புலிகள் நேற்று காட்சிப்படுத்தினர்.



இலகு இயந்திர துப்பாக்கிகள், T56 வகை துப்பாக்கிகள், கிரானைட்கள், பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் காட்சிப்படுத்தப்பட்டன.


சனிக்கிழமை கொல்லப்பட்ட இராணுவத்தினரில் 17 வயதே ஆன இலங்கை இராணுவ வீரரின் அடையாள அட்டையும் வெளியாகி உள்ளது. அவர் இந்த சன்டையில் கொல்லப்பட்டார்.

விடுதலைப்புலிகள் சிறுவர்களை சன்டையில் ஈடுபடுத்துகிறார்கள் என்று இலங்கை குற்றம் சாட்டி வந்த நிலையில் இலங்கை இராணுவத்தில் 17 வயதே நிரம்பியவர்களும் சன்டையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

வங்க தேசத்தில் வாக்குப் பதிவு தொடங்கியது

Published on: //
7 ஆண்டுகளுக்குப் பின் வங்க தேசத்தில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. வங்க தேச நேரம் காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். வாக்குப் பதிவு முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும் என்றாலும் தேர்தல் முடிவுகள் நாளையே தெரிய வரும்.

முக்கிய அரசியல் கட்சிகளான அவாமி லீக் மற்றும் வங்காள தேசிய கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. முன்னதாக சனிக்கிழமையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வந்தது. முன்னாள் பிரதமர்களான பேகம் கலீதா ஜியா மற்றும் ஷேக் ஹஸீனா வஜீத் ஆகியோர் இறுதிக்கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

தேர்தல் பாதுகாப்பாகவும் சுமுகமாகவும் நடைபெற பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 50 ஆயிரம் இராணுவத்தினர், 75 ஆயிரம் காவலர்கள், 6 ஆயிரம் சிறப்பு அதிரப்படை காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது தவிர 2 இலட்சம் உள்ளூர் பார்வையாளர்களும் மற்றும் 2 ஆயிரம் காமென் வெல்த் பார்வையாளர்களும் தேர்தல் கன்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: 36 பேர் பலி

Published on: //
பாகிஸ்தானின் வடமேற்குப் பிரதேசத்தில் புனெர் என்ற நகரில் வெடித்த சக்தி வாய்ந்த கார் வெடிகுண்டு 36 பேரை பலி வாங்கியிருக்கிறது. மேலும் 15 பேர் கடும் காயத்திற்கு ஆளாகியுள்ளனர். பாராளுமன்ற இடைத்தேர்தலில் வாக்களிப்பதற்காக பள்ளி ஒன்றில் பொதுமக்கள் கூடியிருந்தபோது குண்டு வெடித்தது.

குண்டு வெடிப்பின் விளைவாக பள்ளிக் கட்டிடம் முழுதுமாக இடிந்து விழுந்தது. அருகிலிருந்த ஒரு சந்தையின் கூரை சரிந்து விழுந்ததுடன் அருகாமையிலிருந்த பல வீடுகளும் கட்டிடங்களும் சேதமடைந்தன. இடிபாடுகளுக்கிடையே பாதிக்கப்பட்டவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடந்துக் கொண்டிருக்கிறது.

தற்கொலைத் தாக்குதல் என்று நம்பப்படும் இந்தக் குண்டு வெடிப்பிற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. பாகிஸ்தானில் கடந்த 18 மாதங்களாக தொடர்ந்து நடக்கும் பல்வேறு தாக்குதல்களில் சுமார் 1500 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

கொழும்பில் குண்டு வெடித்து 5 பேர் பலி

Published on: ஞாயிறு, 28 டிசம்பர், 2008 //
இலங்கையின் வடக்குப் பகுதியில் படகு ஒன்றை இலங்கை கடற்படையினர் சுட்டு வீழ்த்தினர். இதில் 4 பேர் கொல்லப்பட்டனர். விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் கொண்டு வந்த படகு அது என்று இராணுவத்தினர் கூறினர்.

இசம்பவத்தைத் தொடர்ந்து, கொழும்பு அருகில் வாத்தலா என்ற பகுதியில் உள்ள பாதுகாப்பு சோதனைச் சாவடியில் குண்டு வெடித்தது. இதில் 5 பாதுகாப்பு அலுவலர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 4 பேர் காயமுற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தற்கொலைப்படைத் தாக்குதலுக்கு இதுவரை எவரும் பொறுப்பேற்கவில்லை.

50 இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்

Published on: //
சனிக்கிழமை அன்று முல்லைத்தீவு அருகே விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்தி்ற்கும் இடையில் நடந்த சன்டையில் குறைந்தது 50 இராணுவத்தினர் கொல்லப் பட்டதாகவும் 90 பேர் காயமுற்றதாகவும் விடுதலைப் புலிகள் கூறினர். இராணுவத்தினரின் ஆயுதங்களைக் கைப்பற்றியுள்ளதாகவும், கொல்லப்பட்ட இராணுவத்தினரில் 16 பேரின் சடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

மேலும் உடுப்புக்குளம் என்ற பகுதியில் நடந்த சன்டையில் 15 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும் 30 பேர் காயமுற்றனர் எனவும் விடுதலைப் புலிகள் கூறினர். விடுதலைப் புலிகளின் தரப்பில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்த விவரங்கள் குறித்து அவர்கள் எதுவும் கூறவில்லை என்று தமிழ்நெட் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

பாலஸ்தீன் மீதான தாக்குதல் இன்றும் தொடர்கிறது

Published on: //
பாலஸ்தீனின் காஸா பகுதியில் இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதல்களில் 225பேர் கொல்லப்பட்டனர். சுமார் 700க்கும் அதிகமானோர் காயமுற்ற நிலையில், ஞாயிற்றுக் கிழமை காலையிலும் தாக்குதலைத் தொடர்ந்தது.

மசூதி மற்றும் தொலைக்காட்சி நிலையம் உள்பட காஸாவின் பல்வேறு பகுதிகளிலும் இஸ்ரேல் குண்டுகளை வீசியது. இன்று மட்டும் சுமார் 20 முறை குண்டுகளை வீசியதாக பாலஸ்தீனியர்கள் தெரிவித்தனர்.

இராணுவ நடவடிக்கைகளை உடனே நிறுத்த வேண்டும் - ஐ.நா.

Published on: வெள்ளி, 26 டிசம்பர், 2008 //

நேற்று முதல் இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் ஹமாஸ் இயக்கத்தினரைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. காவல் நிலையம், தொழிற்கூடம், மசூதி மற்றும் அல் அக்சா எனும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைமையகம் ஆகியவற்றின் மீது இன்று தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 40 இடங்களைக் குறி வைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் இதுவரை 271 பேர் கொல்லப்பட்டுவிட்டதாகவும், 600க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்பு சபை இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளது. குரோஷியாவுக்கான ஐ.நா. தூதரும் ஐ.நா. பாதுகாப்பு சபையின் தலைவருமான நெவேன் ஜுரிகா அறிக்கையை வாசித்தார். இஸ்ரேலையோ அல்லது ஹமாஸஸ் இயக்கத்தையோ நேரடியாகக் குறிப்பிடாமல், "இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்" என்று மட்டும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
1967 ஆம் ஆண்டுக்குப் பின் மிக மோசமான நிலை நிலவுவதாக தகவல்கள் கூறுகின்றன.

ஜம்மு காஷ்மீர் வாக்கு எண்ணிக்கை

Published on: //
பல கட்டங்களாக நடத்தப்பட்ட ஜம்மு காஷ்மீர் மாநில தேர்தல் முடிவடைந்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் சற்று முன் கிடைத்த தகவல்படி கட்சிகள் பெற்றுள்ள இடங்கள் வருமாறு:

மொத்த தொகுதிகள் : 87
தேசிய மாநட்டுக் கட்சி : 23
மக்கள் ஜனநாயகக் கட்சி : 20
காங்கிரஸ் :18
பாரதிய ஜனதா கட்சி : 13
மற்றவர்கள் : 13

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது 8 பேர் சுட்டுக் கொலை

Published on: //
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் அமைந்துள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் அருகே உள்ள கோவினா என்ற இடத்தில் ஒரு வீட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது கிறிஸ்துமதஸ் தாத்தா வேடம் அணிந்த ஒருவர் அன்பளிப்புப் பொருள் கொண்டு வருவது போல் உள்ளே நுழைந்தார். பின்பு அதிலிருந்து துப்பாக்கியை எடுத்து கதவைத் திறந்த 8 வயது சிறுமியை நோக்கி சுட்டார். கூடி இருந்தவர்கள் தப்பிப்பதற்காக வெளியே ஓடினர். பின்னர் அந்த வீட்டைத் தீ வைத்துக் கொளுத்தினார். அதன் பிறகு அவர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டார்.

புரூஸ் பர்டோ என்பவர்தான் இந்தக் கொலையைச் செய்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு முன் இவர் மீது எவ்வித குற்றப் புகார்களும் இல்லை என்பதாகவும் இவரது மனைவி இவரைக் கடந்த வாரம் விவாகரத்து செய்ததாகவும் அதனால் கோபமுற்ற இவர் தனது முன்னாள் மைத்துனர் வீட்டில் நடைபெற்ற கொண்டாட்டத்தின் போது இச்சம்பவத்தை நிகழ்த்தியாகக் கூறப்படுகிறது.

இந்நிகழ்வில் இவரது முன்னாள் மனைவி மற்றும் அவரது பெற்றோர் கொல்லப்பட்டுவிட்டனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரிட்டன் சிறையில் 350 இந்தியர்கள்

Published on: //
பிரிட்டன் சிறையில் இருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை இவ்வாண்டு செப்டம்பர் மாதம் 350 ஆக இருக்கிறது எனவும், கடந்த செப்டம்பர் 2005ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 259ஆக இருந்தது எனவும் அந்நாட்டின் நீதித்துறை அமைச்சர் தெரிவித்தார்.

சிறையில் இருக்கும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை 2006 பிப்ரவரியில் 10,265 என்றும் அது இந்த ஆண்டு செப்டம்பரில் 11 சதவீதம் அதிகரித்து 11,168 வெளிநாட்டினர் சிறையில் உள்ளனர் என்றும் அவர் கூறினார்.

சிறையில் உள்ள சில வெளிநாட்டினர் விவரம்:

பாகிஸ்தான் - 406
வியட்நாம் - 460
போலந்து - 452

தகவல்: PTI

சவூதி வெளியுறவுத் துறை அமைச்சர் இந்தியா வருகை

Published on: வியாழன், 25 டிசம்பர், 2008 //
இந்தியா பாகிஸ்தான் உறவில் நிலவும் பதட்டமான சூழ்நிலையி்ல் சவூதி வெளியுறவுத் துறை அமைச்சர் சவுத் அல்ஃபைசல் நாளை இந்தியா வருகிறார். பாகிஸ்தான் மீது சவூதிக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி எல்லை கடந்த தீவிரவாதத்துக்கு முடிவு கட்டுமாறு இந்தியா கோரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவரது சில மணி நேர இந்தியப் பயணத்தின் போது மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்து விரிவாக விளக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்தியா சவூதி அரசை இது தொடர்பாக தொடர்பு கொண்டதாகவும், சவூதி அரசு இந்தியாவுக்கு ஆதரவு அளிக்கும் என்று கூறியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Source: PTI

லாஹூர் குண்டு வெடிப்பு : இந்தியர் கைது

Published on: //
பாகிஸ்தானின் லாஹூர் நகரில் அரசு அலுவலர் குடியிருப்பில் நேற்று குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் சுதீஷ் ஷர்மா என்ற இந்தியர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் மேலும் மூன்றுபேர் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், அவர்களைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மும்பை தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் மீது குற்றம் சுமத்துவதை இந்தியா நிறுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.

பாகிஸ்தானில் வணிக வளாகம் இடிந்து 10 பேர் பலி

Published on: ஞாயிறு, 21 டிசம்பர், 2008 //
பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் அமைந்திருந்த காகர் பிளாசா என்ற அழைக்கப்பட்ட வணிக வளாகம் இடிந்து 10 பேர் பலியாயினர். முன்னதாக இந்த வளாகத்தில் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது. தீயனைப்பு வீரர்கள் தீயை அணைத்து முடிக்கும் தறுவாயில் அந்த வளாகம் இடிந்து விழுந்தது

59 பேர் காயமுற்றதாகவும், 6 பேர் கட்டிடத்தின் இடிபாடுகளுக்கிடையில் சிக்கிக் கொண்டுள்ளதாகவும் உள்ளூர் அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். 450 கடைகளைக் கொண்ட இவ்வளாகம் தீப்பற்றி எரிந்ததற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை என்று கூறப்படுகிறது.

மாஸ்கோவில் குண்டு வெடித்து 13 பேர் காயம்

Published on: //
மாஸ்கோவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கடைத்தெருவில் குண்டு வெடித்தது. இதில் குழந்தைகள் உள்பட 13 பேர் காயமுற்றனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

காவலர்கள் விரைந்து வந்து அந்தப் பகுதி மக்களை வெளியேற்றி வெடிக்காத குண்டுகள் உள்ளதா என்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அருகில் அமைந்துள்ள பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தே சனிக்கிழமை குண்டு வெடிப்புக்குக் காரணம் என்று அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சீமான் மீண்டும் கைதானார்

Published on: வெள்ளி, 19 டிசம்பர், 2008 //
தமிழ் திரைப்பட இயக்குநர் சீமான் இன்று மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியினர், இயக்குநர் சீமான் விடுதலைப்புலிகளை ஆதரித்தும், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை தாக்கியும் பேசியதையடுத்து, அவரை கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்த புகாரின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கை பிரச்சனை தொடர்பாக ராமேஸ்வரத்தில் நடந்த திரைப்பட கலைஞர்கள் பொதுக் கூட்டத்தில் ஆவேசமாக பேசிய இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோர் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

இயக்குநர் சீமானை குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் தங்கபாலு அறிக்கை மூலம் தமிழக அரசைக் கேட்டுக் கொண்ட நிலையில இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இரண்டாம் வாரமாக கிரீஸ் கலவரம் தொடர்கிறது

Published on: //
கடந்த இரண்டு வாரங்களாக கிரீஸ் நாட்டில் அரசுக்கெதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று தொழிலாளர் அமைப்புகளும், பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் கிரேக்க பாராளுமன்றத்திற்கு வெளியே பேரணி நடத்தினர்.

இந்நிலையில் இன்று முகமூடி அணிந்த இளைஞர்கள், பிரெஞ்சு கலாச்சார மற்றும் கல்வி மையத்தின் மீது தாக்குதல் நடத்தினர். அதன் அருகே அமைந்துள்ள ஒரு வங்கியின் ஏ.டி.எம். நிலையத்தின் மீதும் தாக்குதல் நடத்தினர். சுமார் 20 பேர் இத்தாக்குதலில் ஈடுபட்டதாக காவல்துறையினர் கூறினர்.

வியாழக்கிழமை அன்று நடைபெற்ற காவல்துறையின் அடக்குமுறைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் சுமார் 7,000க்கும் அதிகமான மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். இதில் வன்முறை ஏற்பட்டது.

தலைநகரில் வைக்கப்பட்டிருந்த கிறிஸ்மஸ் மரத்தை வன்முறையாளர்கள் எரிக்க முற்பட்டனர். இதற்கு முன் அதே இடத்தில் வைக்கப்பட்டிருந்த கிறிஸமஸ் மரம் எரிக்கப்பட்டது.

கிரீஸ் வங்கியின் வெளிப்புறம் எழுதப்பட்டிருந்த வாசகம் அங்குள்ள நிலையை எடுத்துரைப்பதாக இருக்கிறது. அந்த வாசகம்: "Merry Crisis and Happy New Fear."

அந்துலே ராஜினாமா

Published on: //
மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஏ. ஆர். அந்துலே, சமீபத்தில் மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலின் போது உயிரிழந்த கார்கரேயின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

கார்கரே தீவிரவாதிகளால்தான் கொல்லப்பட்டாரா அல்லது வேறு காரணமா என்று அவர் சந்தேகம் எழுப்பியிருந்தார். அரசியல் வட்டாரத்தில் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து நேற்று அவர் பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில்,

ஹேமந்த் கார்கரே கொல்லப்பட்டதில் தீவிரவாதிகள் சம்பந்தப்பட்டிருப்பதை நான் மறுக்கவில்லை, சந்தேகப்படவில்லை. அதேபோல கார்கரேவின் தியாகத்தையும் நான் சந்தேகப்படவில்லை.

உண்மையில், கார்கரேவை குறி வைத்துக் கொள்ள தீவிரவாதிகளுக்கு எந்த நோக்கமும் இல்லை. கார்கரே தீவிரவாதத்திற்குத்தான் பலியானாரா அல்லது தீவிரவாதத்தைத் தாண்டி வேறு காரணம் இருந்ததா என்பதுதான் எனக்குப் புரியாமல் உள்ளது. சில வழக்குகளில் முஸ்லிம் அல்லாதோர் சம்பந்தப்பட்டிருப்பதை அவர் கண்டுபிடித்தார்.

தீவிரவாதத்தின் அடி ஆழத்திற்குச் செல்ல முயலும் யாரையும் தீவிரவாதிகள் நிச்சயம் குறி வைப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை என்று கூறியிருந்தார் அந்துலே. இந்த பதிலில் பிரதமர் திருப்தி அடைந்ததாகத் தெரியவில்லை. இதனையடுத்து ஏ.ஆர். அந்துலே தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததாக தகவல்கள் கூறுகின்றன.

வெடிகுண்டு மிரட்டல் ஆசாமி கைது

Published on: வியாழன், 18 டிசம்பர், 2008 //
சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் 15ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று சில நாட்களுக்கு முன் சென்னை எஸ்.பி. (சி.பி.ஐ. ) ராஜீவின் செல்போனுக்கு குறுந்தகவல் வந்தது. அனைத்து இரயில் நிலையங்களிலும் சோதனை செய்யப்பட்டபோது வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.

புரளியாய் தகவல் அனுப்பிய ஆசாமி யார் என்பதைக் கண்டுபிடிக்க தனிப்படை அமைகப்பட்டு புலனாய்வு நடைபெற்றது. தகவல் அனுப்ப ஆசாமி பயன்படுத்திய எண்கள் 97914 80867 மற்றும் 97896 05227 . இந்த எண்கள் வசந்த் என்பவர் பெயரில் வாங்கப்பட்டு இருந்தது. அவரிடம் நடைபெற்ற விசாரணையில், குடும்பப் பிரச்சனையின் காரணமாக வசந்த்தை காவல் துறையில் சிக்க வைக்க அவரது உறவினரான செல்வேந்திரன் என்பவரே இப்படிச் செய்துள்ளார் என்ற முடிவுக்கு வந்த காவல்துறையினர் அவரைத் தேடி வருகின்றனர்.

10 ரஷ்ய போர் விமானங்கள் இலவசம்

Published on: //
ரஷ்யா லெபனான் நாட்டிற்கு தாங்கள் உபயோகித்த 10 மிக்-29 வகை போர் விமானங்களை அன்பளிப்பாக அளிக்கிறது. இவ்வகை விமானங்கள் ரஷ்ய போர் விமானங்களிலேயே சிறந்த ஒன்றும் அதன் ஏற்றுமதி விலை 30 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்றும் கூறப்படுகிறது.

லெபானான் இராணுவத்திற்குத் தேவையான போர் தளவாடங்கள் விற்பனை ஒப்பந்தம் சம்பந்தமாக லெபனான் வந்த ரஷ்ய இராணுவ அதிகாரி மிகைல் திர்மித்ரியேவ் இத்தகவலைக் கூறினார்.

சீனா - பொருளாதார சீர்திருத்தம் 30ஆம் ஆண்டு

Published on: //
கம்யூனிச கொள்கைகளைக் கொண்டு ஆட்சி நடத்தப்பட்டு வரும் சீனா, தன்னுடை பொருளாதாரத்தில் சில மாற்றங்களைக் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் செயல்படுத்தத் தொடங்கியது. இந்த மாற்றத்தின் 30ஆம் ஆண்டு விழா இன்று பெய்ஜிங்கில் சீன கம்யூனிசக் கட்சியின் தலைவரும் அந்நாட்டின் அதிபருமான ஹூஜின்டாவின் உரையுடன் நடைபெற்றது.

கடந்த முப்பதாண்டுகளின் சீனப் பொருளதார வளர்ச்சியைப் புகழ்ந்த அவர், பொருளாதார சீர்திருத்தத்தின் மூலமே இதனை அடைந்தோம். அதனை மேலும் தொடர்வோம் எனக் குறிப்பிட்டார்.

அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி ஆகியவற்றுக்கு அடுத்த நிலையில் இன்று சீனப் பொருளாதாரம் இருக்கிறது. 1978ஆம் ஆண்டு சீன தனிநபர் வருமானம் 380 யுவான் என்ற நிலையில் இருந்து இன்று அதன் தனிநபர் வருமானம் 19,000 யுவான் என்ற அளவில் மாற்றம் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.

செசன்யா: 2 ரஷ்ய வீரர்கள் பலி

Published on: //
செசன்ய தலைநகர் குரோன்ஜியிலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள அர்குன் நகரில் ரஷ்ய வீரர்களுக்கும் செசன்ய விடுதலை அமைபினருக்கும் இடையே நடந்த சன்டையில் ரஷ்ய ராணுவ வீரர் ஒருவரும் காவலர் ஒருவரும் கொல்லப்பட்டனர்.

மேலும் இரு காவல் அதிகரிகளும் நான்கு வீரர்களும் இந்தச் சன்டையில் காயமுற்றதாகக் கூறப்படுகிறது.

குடியரசு நாள் பாதுகாப்பு ஏற்பாடு

Published on: //
குடியரசு தின பாதுகாப்பை முன்னிட்டு, டெல்லி ராஜ்பாத்தில், 22 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ராஜ்பாத் ஒன்றை கிலோ தூரம் கொண்டது. இங்குதான் குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெறும். அப்போது தீவிரவாத தாக்குதல் நடந்து விடாமல் தடுக்கும் பொருட்டு பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி செல்லும் சாலை, இந்தியா கேட் உள்ளிட்ட ராஜ்பாத்தின் பல்வேறு முக்கிய இடங்களில் இந்த கண்காணிப்பு டிவி கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன.இந்த சாலை முழுவதையும் துல்லியமாக கண்காணிக்கக் கூடிய வகையில் இவை பொருத்தப்படுகிறது.

ஜனவரி 19ம் தேதி முதல் 26ம் தேதி வரை இந்த கண்காணிப்பு டிவி கேமராக்கள் செயல்பாட்டில் இருக்கும்.நாலாபக்கமும் சுழலக் கூடிய பான் டில்ட் ஜூம் கேமராக்கள் இதில் இடம் பெறும். ராஜ்பாத் பகுதியில் இந்த 22 கேமராக்களையும் கண்காணிக்க பிரமாண்டமான கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்படுகிறது.

மும்பைத் தாக்குதலின் எதிரொலியாக எந்தவித தாக்குதலும் நடந்து விடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையில் இந்த கேமராக்கள் பொருத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!